1010. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்களுக்குப் பஞ்சம் ஏற்படும் பொழுது உமர்(ரலி), அப்பாஸ்(ரலி) மூலம் (அல்லாஹ்விடம்) மழை வேண்டுபவர்களாக இருந்தனர். 'இறைவா! நாங்கள் எங்கள் நபியை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருவோம். நீ எங்களுக்கு மழை வழங்கினாய். (இப்போது) எங்கள் நபியின் தந்தையின் உடன் பிறந்தாரை உன்னிடம் பிரார்த்திக்கக் கோருகிறோம். எங்களுக்கு மழை வழங்குவாயாக!' என்று உமர்(ரலி) கூறுவார்கள். அவர்களுக்கு மழை பொழியும்.
Volume :1 Book :15
1011. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டும்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Volume :1 Book :15
1012. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் திடலுக்குச் சென்று மழை வேண்டினார்கள். அப்போது கிப்லாவை நோக்கியவர்களாகத் தம் மேலாடையை மாற்றிப் போட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
Volume :1 Book :15
1013. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது மிம்பர்த் திசையிலுள்ள வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! கால் நடைகள் அழித்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்ததி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரித்து கிடக்கும் மேகங்களையோ (மழைக்குரிய) எந்த அறிகுறிகளையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னம் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்டவெளியாக இருந்தது) அப்போது அம்மலைக்குப் பின் புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கையை உயர்த்தி, 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கி விடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளை நிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர்தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.
Volume :1 Book :15
1014. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 'தாருல்களா' எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது அணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்கப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ' இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.
இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார்.
Volume :1 Book :15
1015. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். 'இறைத்தூதர் அவர்களே! மழை பொய்ந்துவிட்டது. எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார் நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. எங்களால் எங்கள் இல்லங்களுக்குச் செல்ல இயலவில்லை. அடுத்த ஜும்ஆ வரை மழை நீடித்தது. அப்போது அந்த மனிதரோ அல்லது இன்னொரு மனிதரோ எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! இம் மழையை எங்களைவிட்டும் (வேறு பகுதிக்குத் திருப்பி விடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (பொழியச் செய்வாயாக) எங்களுக்கு எதிரானதாக (இம்மழையை) ஆக்கிவிடாதே' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் வலப்புறமும் இடப்புறமுமாகப் பிரிந்து சென்று வேறு பகுதிகளில் மழை பொழிந்தது. மதீனாவில் மழை பொழியவில்லை.
Volume :1 Book :15
1016. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன் பாதைகள் துண்டிக்ப்பட்டுவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜூம்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் அதே மனிதர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளைநிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்றுபிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Volume :1 Book :15
1017. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)" என்று பிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Volume :1 Book :15
1018. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
செல்வம் அழிவது பற்றியும் மக்கள் சிரமப் படுவது பற்றியும் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள்.
இதில் நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கியதாகவும் மேலாடையை மாற்றிப் போட்டதாகவும் கூறப்படவில்லை என்று இஸ்ஹாக் இப்னு அப்தில்லாஹ் கூறுகிறார்.
Volume :1 Book :15
1019. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனஅவ அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்! என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் ஒருவர் வந்து 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளை நிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!) என்று பிரார்த்தித்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.
Volume :1 Book :15
1020. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
குறைஷீகள் இஸ்லாத்தை மறுத்தபோது அவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். இதனால் அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு அழிவுக்கு நெருங்கினார்கள். செத்தவற்றையும் எலும்புகளையும் கூட உண்ணலானார்கள். இந்நிலையில் அபூ சுஃப்யான், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உறவினர்களோடு இணைந்து வாழுமாறு கூறுகிறீர். உம்முடைய கூட்டத்தினர் அழிந்து கொண்டிருக்கிறார்கள் . எனவே அல்லாஹ்விடம் துஆச் செய்வீராக!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வானம் தெளிவான புகை மூட்டத்தை வெளிப்படுத்தும் நாளை எதிர் பார்ப்பீராக!' (திருக்குர்ஆன் 44:10) என்ற வசனத்தை ஓதினார்கள். பின்னர் குரைஷீகள் நிராகரிப்பிற்கே திரும்பினார்கள். இதையே 'அவர்களைப் பெரும்பிடியாக நாம் பிடிக்கக் கூடியநாளில்' (திருக்குர்ஆன் 44:16) என்ற வசனம் கூறுகிறது. இது பத்ருப் போரின்போது நிறைவேறியது.
நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்ததும் மழை பொழிந்தது. ஏழு நாள்கள் மழை நீடித்தது. பெருமழை குறித்து மக்கள் முறையிட்டபோது 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக ஆக்கி விடாதே!' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் விலகியது. அவர்களின் சுற்றுப் புறத்தில் மழை பொழிந்தது.
Volume :1 Book :15
1021. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தும்போது மக்கள் எழுந்து சப்தமிட்டனர். 'இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. மரங்கள் கருகிவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே மழை பொழிச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்' என்று இரண்டு முறை கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அப்போது வானத்தில் எந்த மேகத்தையும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கித் தொழுகை நடத்தினார்கள். மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது. (அடுத்த ஜும்ஆவில்) நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'. என்று மக்கள் உரத்த குரலில் கூறினர். நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். பின்னர் 'இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மதீனாவைவிட்டு மழை விலகியது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யத் துவங்கியது.மதீனாவில் ஒரு துளியும் விழவில்லை. மதீனாவை நான் பார்த்தபோது அது ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் இருந்தது.
Volume :1 Book :15
1022. அபூ இஸ்ஹாக் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ(ரலி), ஜைத் இப்னு அர்கம்(ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். மிம்பரில் ஏறாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். பிறகு சப்தமக ஓதி, இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பாங்கும் இகாமத்தும் சொல்லவில்லை.
Volume :1 Book :15
1023. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்க மக்களோடு சென்றனர். நின்றவாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். பிறகு கிப்லாவை நோக்கித் திரும்பினார்கள். தம் மேலாடையையும் மாற்றிப் போட்டார்கள். அவர்களுக்கு மழை பொழிந்தது.
Volume :1 Book :15
1024. அப்துல்லாஹ் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கித் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
Volume :1 Book :15
1025. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டபோது அவர்களை பார்த்தேன். அப்போது அவர்கள் மக்களுக்கு முதுகைக் காட்டிக் கிப்லாவை நோக்கிப் பிரார்த்தித்தார்கள். பிறகு தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
Volume :1 Book :15
1026. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தபோது இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். அப்போது தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Volume :1 Book :15
1027. அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கத் திடலுக்குச் சென்றார்கள். கிப்லாவை நோக்கி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். தம் மேலாடையை மாற்றிப்போட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில் தம் ஆடையின் வலப்புறத்தை இடது தோளின் மீது போட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
Volume :1 Book :15
1028. அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மழைத் தொழுகையைத்) தொழுவதற்காகத் திடலுக்குப் புறப்பட்டார்கள். துஆச் செய்தபோது அல்லது துஆச் செய்ய நாடியபோது கிப்லாவை முன்னோக்கினார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள்.
Volume :1 Book :15
1029. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஒரு வெள்ளிக் கிழமையன்று ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் அழிந்துவிட்டன. குடும்பமும் அழிந்தது. மக்களும் அழிந்தார்கள்' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பதற்காகத் தம் கைகளை உயர்த்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து மக்களும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தார்கள். நாங்கள் பள்ளியைவிட்டு வெளியே வருவதற்குள் மழை பெய்தது. அடுத்த ஜும்ஆ வரை எங்களுக்கு மழை நீடித்தது. அதே மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! பயணம் செல்வோர் கஷ்டப் படுகின்றனர். பாதை அடைபட்டுவிட்டது' என்றார்.
Volume :1 Book :15