1030. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் அக்குள் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு (துஆச் செய்யும் போது) தம் கைகளை உயர்த்தினார்கள்.
Volume :1 Book :15
1031. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப்பிரார்த்திக்கும்போது தவிர எந்தப் பிரார்த்தனையிலும் தம் கைகளை உயர்த்த மாட்டார்கள். (மழை வேண்டிப் பிரார்த்திக்கும் போது) தம் அக்குள் வெண்மை காணப்படும் அளவிற்கு உயர்த்துவார்கள்.
Volume :1 Book :15
1032. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)" என்று கூறுவார்கள்.
Volume :1 Book :15
1033. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமையன்று மிம்பரில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ஒரு கிராமவாசி எழுந்தார். 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குடும்பத்தினர் பட்டினியில் வாடுகின்றனர். எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் (பிரார்த்திப்பதற்காகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். அப்போது வானத்தில் மேகம் எதுவும் இருக்கவில்லை. திடீரென மலைகளைப் போன்று மேகங்கள் திரண்டன. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள் அவர்களின் தாடி வழியாக மழைத் தண்ணீர் வடிந்ததை கண்டேன். அன்றைய தினமும் மறுநாளும் மூன்றாவது நாளும் அதற்கடுத்த ஜும்ஆவரையுள்ள நாள்களிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. அப்போது அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்துவிட்டன. செல்வங்கள் மூழ்கிவிட்டன. எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். என்றார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தினார்கள். 'இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று கூறினார்கள். அவர்கள் வானத்தை நோக்கித் தம்கையால் சைகை செய்த போதெல்லாம் மேகங்கள் விலகிச் சென்றன. முடிவில் மதீனா ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் மாறியது. 'கனாத்' எனும் ஓடை ஒரு மாதம் ஓடியது. எப்பகுதியிலிருந்து வரக்கூடியவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலில்லை.
Volume :1 Book :15
1034. அனஸ்(ரலி) அறிவித்தார்.
கடுமையான காற்று வீசும்போது நபி(ஸல்) அவர்கள் முகத்தில் ஏற்படும் மாறுதல் அனைவருக்கும் தெரியும்.
Volume :1 Book :15
1035. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
"நான் மழைக்காற்றின் மூலம் உதவப்பட்டுள்ளேன். 'ஆது' கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் அழிக்கப்பட்டனர்."
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :15
1036. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - குழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :15
1037. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைவா! எங்கள் ஷாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் 'எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :15
1038. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்" என்று அல்லாஹ் கூறினான் எனக் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :15
1039. 'ஐந்து காரியங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறிய முடியாது. நாளை என்ன நடக்கும் என்பதை எவரும் அறிய முடியாது. கருவறைகளிலுள்ள நிலைமைகளை எவரும் அறிய முடியாது. ஒருவர் நாளை எதைச் சம்பாதித்தார் என்று அறிய முடியாது. ஒருவர் தாம் எந்த இடத்தில் மரணிப்போம் என்பதை அறிய முடியாது. மழை எப்போது வருமென்பதையும் எவரும் அறிய முடியாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :15
கிரகணங்கள்
1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :16
1041. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்."
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :16
1042. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :16
1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :16
1044. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :16
1045. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.
Volume :1 Book :16
1046. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுக்களும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லயே என்று கேட்டேன. அதற்கு அவர், ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்' என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார்.
Volume :1 Book :16
1047. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். நின்று தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ஸமில்லாஹு லிமன்ஹமிதா என்றார்கள். எழுந்து முன்போன்றே நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முன்பு ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முந்தைய ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்களிலும் இது போன்றே செய்தார்கள். சூரிய கிரகணம் விலகியபோது ஸலாம் கொடுத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.
(குறிப்பு: திருக்குர்ஆன் (திருக்குர்ஆன் 75:08) என்ற) வசனத்தில் சந்திர கிரகணத்திற்குப் பயன் படுத்தப் பட்டவார்த்தையை இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்திற்குப் பயன் படுத்தியுள்ளார்கள்.)
Volume :1 Book :16
1048. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
"சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :16
1049. & 1050. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!' என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கப்ருடைய வேதனையைவிட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.
பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் (இல்லம்) திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது மதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :1 Book :16