பாடம் : 1 கடைசிக் கட்டத்தில் லா இலாஹ இல்லல்லாஹ்' கூறுபவரின் நிலை. சொர்க்கத்தின் திறவுகோல் லா இலாஹ இல்லல்லாஹ்' (எனக் கூறுவது)தானே! என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) என்பாரிடம் வினவப்பட்டது. அதற்கவர், ஆம், ஆயினும் திறவு கோலுக்குப் பற்கள் இருக்க வேண்டுமல்லவா? எனவே உன்னிடம் பற்களுள்ள திறவுகோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது எனக் கூறினார்கள்.
1237. 'என்னுடைய இரட்கனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு செய்தியை ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது என்னுடைய சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் மரணிக்கிறவர் சொர்க்கத்தில நுழைவார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, நான் 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?' எனக் கேட்டேன். 'அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலும்தான் என அவர்கள் கூறினார்கள்' என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
Book : 23
1238. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இணைவைத்தவராக மரித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். '(அப்படியாயின்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார்' என நான் கூறுகிறேன்.
Book :23
பாடம் : 2 ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை
1239. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களக்கு ஏழு விஷயங்களை(ச் செய்யும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களை தடை செய்தார்கள். ஜனாஸாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும், விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் படியும். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவும்படியும், செய்த சத்தியத்தையும் பூரணமாக நிறைவேற்றும் படியும். ஸலாமுக்கு பதில் கூறும்படியும். தும்முபவருக்கு அவர் அல்ஹம்துலில்லாஹ்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே! என கூறினால் அருகிலிருப்பவர் யர்ஹமுகல்லாஹ்.. இறைவன் உங்களுக்கு கருணை காட்டுவானாக' என மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் கலப்படமில்லாத பட்டையும், அலங்காரப் பட்டையும் எம்ப்திய பட்டையும், தடித்த பட்டையும் அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.
Book : 23
1240. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது. தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :23
பாடம் : 3 ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல்.
1241. ஆயிஷா(ரலி)கூறினார்கள்' நபி(ஸல்)அவர்களின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட) அபூ பக்ர்(ரலி) ஸுன்ஹ் என்னும் இடத்திலுள்ள தம் வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ன்னபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார். அங்கு நபி(ஸல்) அவர்களை அடையாளமிடப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில் கண்டார். உடனே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த துணியை அகற்றிவிட்டு, அவர்களின் மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார். பின்பு, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை தாங்கள் அடைவது விட்டீர்கள்' என்று கூறினார்.
Book : 23
1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்' (திருக்குர்ஆன் 3:144) என்றார்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
Book :23
1243. நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி) அறிவித்தார்.
வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரின் உடல் குளிப்பாட்டப்பட்டு அவரின் ஆடையிலேயே கஃபனிடப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), 'ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்' எனக் கூறினேன். உடனே, நபி(ஸல்) அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின்தூதர் அவர்களே! என்னுடைய தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்?' என கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே விரும்புகிறேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னுடைய நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.'
Book :23
1244. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தந்தை கொல்லப்பட்டுக் கிடந்தபோது நான் அவரின் முகத்தின மீதிருந்த துணியை அகற்றிவிட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு என்னுடைய மாமி ஃபாத்திமா(ரலி)வும் அழ ஆரம்பித்துவிட்டார். அப்போது, 'நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :23
பாடம் : 4 மரணமுற்றவரின் குடும்பத்தார்க்கு மரணசெய்தி அறிவித்தல்.
1245. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் நஜ்ஜாஷி(மன்னர்) இறந்த அன்று அவரின் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தி)னார்கள்.
Book : 23
1246. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(மூத்தா போரில்) ஸைத்(ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர்(ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார்' என்று நபி(ஸல்) கூறிக்கொண்டிருந்தபோது அவர்களின் இரண்டு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, '(ஏற்கெனவே) நியமிக்கப்பட்டாதிருந்த காலித் இப்னு வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்கள்.
Book :23
பாடம் : 5 ஜனாஸாத் தொழுகையை (த் தலைவருக்கு) அறிவித்தல் நீங்கள் (ஜனாஸாத் தொழுத போது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்.
1247. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவரை நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்ததும் 'இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன?' எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை' என்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரின் கப்ருக்கு வந்து ஜனாஸாத் தொழுகை தொழுகை நடத்தினார்கள்.
Book : 23
பாடம் : 6 தமது குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு. அல்லாஹ் கூறுகிறான்: பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)
1248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.'
அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 23
1249. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெண்கள்(வந்து) 'எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டார்கள். நபி(ஸல்) பெண்களுக்கு (ஒருநாள்) உபதேசம் செய்தார்கள். அதில் 'ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள்' எனக் கூறியதும் ஒரு பெண் 'இரண்டு குழந்தைகள் இறந்தால்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு குழந்தை இறந்தாலும் தான்' என்றார்கள்.
Book :23
1250. மேற்கூறிய ஹதீஸில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பில், 'பருவமடையாத (குழந்தைகள்)' என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.
Book :23
1251. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நரகத்தைக் கடந்து சென்றதாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.) 'அதனை (நரகை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை' என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Book :23
பாடம் : 7 அடக்கவிடம் அருகிலிருக்கும் பெண்ணிடம் நீ பொறுமையாயிரு என ஒருவர் கூறுவது.
1252. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், 'அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!' எனக் கூறினார்கள்.
Book : 23
பாடம் : 8 இலந்தையிலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கசுத்தி (உளூ) செய்வித்தல். சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுடைய மகன் மரணமடைந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாததால்) உளூச் செய்யாமலேயே ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். முஸ்லிம் உயிருடனிருக்கும் போதும் இறந்துவிட்டாலும் அசுத்தமாவதில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள். (இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்த சடலத்தைத் தொட்டிருக்க மாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இறைநம்பிக்கையாளர் (மூமின்) அசுத்தமாவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1253. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
Book : 23
பாடம் : 9 ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றி நீராட்டுவது விரும்பத் தக்கது.
1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்' என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.
Book : 23
பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம்பித்தல்.
1255. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, 'அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்யவேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 23
பாடம் : 11 சடலத்தை நீராட்டும் போது உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்.
1256. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, 'மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் அதன் உளூச் செய்யவேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 23