பாடம் : 51 (கேள்வி கேட்க) வெட்கப்பட்டுப் பிறரைக் கேட்கச் செய்தல்.
132. 'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்' என அலீ(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பதும் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்.
133. ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டபோது 'மதீனா வாசிகள் 'துல்ஹுலைஃபா' என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் 'ஜுஹ்ஃபா' என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் 'கர்ன்' என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'யமன்' வாசிகள் 'யலம்லம்' என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை' என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 4
பாடம் : 53 வினவப்பட்டதைவிட விரிவாகப் பதில் கூறுதல்.
134. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 1 உளூச் செய்வது குறித்து வந்துள்ளவை. அல்லாஹ் கூறுகிறான்: விசுவாசிகளே! நீங்கள் தொழுகைக்கு தயாராகும்போது (முன்னதாக) உங்கள் முகங்களையும் கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். (5:6). அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: உளூ செய்யும்போது உறுப்புக்களை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும் அவர்களே அவ்வுறுப்புக்களை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்குமேல் அதிகப்படுத்தியது இல்லை. நபி (ஸல்) அவர்களின் செயல்முறைக்கு மாற்றம் செய்வதையும் உளூ செய்வதில் (மூன்று தடவைகள் என்ற அந்த) வரம்பை மீறுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள். பாடம் : 2 உடல் தூய்மையின்றித் தொழுகை ஏற்கப்படாது.
135. 'சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் 'அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் 'சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது' என்றார்கள்' ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.
Book : 4
பாடம் : 3 உளூவின் சிறப்பும் உளூ செய்தோரின் முகம், கை, கால் ஆகியன (மறுமையில்) பிரகாசிப்பதும்.
136. 'பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.
Book : 4
பாடம் : 4 உளூ முறிந்ததாக உறுதியாகத் தெரியாத வரை சந்தேகப்பட்டு மீண்டும் உளூ செய்யத் தேவையில்லை.
137. 'தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, 'நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்' என்று அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 5 குறைந்தபட்ச அளவில் சுருக்கமாக உளூச்செய்தல்.
138. நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக' உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்' (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.
Book : 4
பாடம் : 6 உளூவை முழுமையாகச் செய்தல். இப்னு உமர் (ரலி) அவர்கள், உளூவை முழுமையாகச் செய்தல் என்பதன் கருத்து நன்கு தூய்மைப்படுத்துதல் என்பது தான் என்று கூறியுள்ளார்கள்.
139. (ஹஜ்ஜில்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும்.
இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை' என உஸமா இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 7 ஒரு கை நிறையத் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக்கொண்டு முகத்தைக் கழுவுதல்.
140. 'இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்' என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 8 தாம்பத்திய உறவின் போதும், (உளூ உட்பட) மற்ற எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவது.
141. 'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 9 கழிப்பிடம் செல்லும் போது சொல்ல வேண்டியவை.
142. 'கழிப்பிடத்திற்குச் சென்றபோது, 'இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 10 கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்.
143. 'நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் 'இந்தத் தண்ணீரை யார் வைத்தது?' என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே 'இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக' என்று பிரார்த்தித்தார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 11 மலஜலம் கழிக்கும் போது கிப்லா(கஅபா)திசையை முன்னோக்கக் கூடாது. மதில் முதலிய கட்டடம் இருந்தால் தவறில்லை.
144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)
Book : 4
பாடம் : 12 இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்.
145. நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இச்செய்தியை அவர்களிடமிருந்து அறிவிக்கும் வாஸிவு இப்னு ஹப்பான் அவர்களை (தொழுது முடித்த பிறகு) நோக்கி இப்னு உமர்(ரலி) 'நீரும் பிட்டங்களை பூமியில் அழுத்தித் தொழுபவர்களைச் சார்ந்தவர்தாம் போலும்' என்று கூறினார்கள். அதற்கு வாஸிவு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்கள் குறை சொன்னவாறு தொழுதேனா என்பதை அறிய மாட்டேன்' என்று கூறினார்.
'பூமியுடன் (தன் பிட்டங்களை) அப்பியவராகவும், பிட்டங்களைப் பூமியைவிட்டு அகற்றாதவராகவும் ஸஜ்தா செய்து தொழுபவரைத்தான் (இப்னு உமர்) அவர்கள் குறிப்பிட்டார்கள்' என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இமாம் மாலிக் கூறினார்.
Book : 4
பாடம் : 13 பெண்கள் (ஆள் நடமாட்டமில்லாத) வெட்டவெளிகளுக்கு இயற்றைக் கடனை நிறைவேற்றச் செல்லுதல்.
146. 'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 4
147. (நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'வெளியே செல்ல' என்பதற்கு 'கழிப்பிடம் நாடி' என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்' என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.
Book :4
பாடம் : 14 வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துதல்.
148. 'ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 4
149. 'எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏவினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :4
பாடம் : 15 இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு தண்ணீரால் துப்புரவு செய்தல்.
150. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுகூன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 4
பாடம் : 16 ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல். ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னுமஸ்ஊத் (ரலி) உங்களிடையே இல்லையா? என்று அபுத்தர்தா(ரலி) அவர்கள் அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள்.
151. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 4