1395. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!' என்று கூறினார்கள்.
Book :24
1396. அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) 'இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!' (என்று கூறிவிட்டு அவரிடம்.) 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்' என்று கூறினார்கள்.
Book :24
1397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்' என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்' என்றார்கள்.
Book :24
1398. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுச்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கும் அறிவிப்போம்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு நான் நான்கு காரியங்களை ஏவுகிறேன்; நான்கு காரியங்களைத் தடை செய்கிறேன். அவை: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லையென்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல்' என்று விரலால் எண்ணிச் சொன்னார்கள். மேலும், 'மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)
Book :24
1399. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்' கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்' என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்' என்றார்.
Book :24
பாடம் : 2 ஸகாத் கொடுப்பதாக உறுதியளித்தல் அல்லாஹ் கூறுகிறான்: ஆயினும் அவர்கள் தவ்பாச் செய்து தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்களே. (9:11)
1400. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர்தெடுக்க அபூபக்ர் ளரலின தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது, என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீஙகள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும் என்று கேட்டார்கள். அதற்_க அபூபக்ர் (ரலி) அவர்கள் உமரை நோக்கி அல்லாஹ்வின் மீது ஆணையாக தெழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழஙகி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழஙக மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளஙகிக்கொண்டேன் என்றார்கள்.
Book : 24
1401. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும் ஸக்காத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.
Book :24
பாடம் : 3 ஸகாத்தை மறுப்பதன் குற்றம் அல்லாஹ் கூறுகிறான்: மேலும் யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு என்று (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (நபியே!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்திருந்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். (மேலும்) இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது;எனவே, நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்' என்று கூறப்படும்.
1402. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நலையில் வந்து தன்னுடைய கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அதுபோன்றே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்லநிலையில் வந்து தன்னுடைய குளம்புகளால் அவனை மிதித்துக் தன்னுடைய கொம்புகளால் அவனை முட்டும். மேலும், உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தம் பிடரியில் சுமந்து வந்து (அபயம் தேடிய வண்ணம்) 'முஹம்மதே' எனக் கூற, நான் 'அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று கூறும்படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக (இது பற்றியெல்லாம் உங்களுக்கு (நான் அறிவித்துவிட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிப் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தம் பிடரியில் சுமந்து வந்து 'முஹம்மதே' எனக் கூற, அதற்கு நான் 'அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரமில்லை' என்று சொல்லும் படியான நிலைமை ஏற்பட வேண்டாம். (இது பற்றியெல்லாம் உங்களுக்கு) நான் அறிவித்து விட்டேன்.'
நீர் நிலைகளில் பால் கறப்பது ஆட்டின் உரிமைகளில் ஒன்றாகும்' என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24
1403. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்' 'நானே உன்னுடைய புதையல்' என்று கூறும்.'
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :24
பாடம் : 4 ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் பதுக்கல் பொருள் ஆகாது. ஏனெனில், ஐந்து ஊக்கியாக்களுக்குக் குறைந்த பொருட்களுக்கு ஸகாத் செலுத்த வேண்டியதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1404. காலித் இப்னு அஸ்லம் கூறிய தாவது:
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, 'யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்... என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர்(ரலி), 'அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக 'ஸகாத்தை' அல்லாஹ் ஆக்கிவிட்டான்' என்றனர்.
Book : 24
1405. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக்= 60ஸாவு) தானியத்தில் ஸகாத் இல்லை.
அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
Book :24
1406. ஸைத் இப்னு வஹ்ப் அறிவித்தார்.
நான் ரப்தா என்னுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூ தர்(ரலி) இருந்தார். நான் அவரிடம் 'நீர் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?' என்று கேட்டேன். அதற்கவர் 'நான் சிரியாவில் இருந்தபோது, தங்கத்தையோ வெள்ளியையோ சேமித்து வைத்துக் கொண்டு அதை இறைவழியில் செலவிடாதவர்கள்... என்ற (திருக்குர்ஆன் 09:34) இறைவசன(ம் இறக்கப்பட்ட காரண)த்தில் நானும் முஆவியா(ரலி)வும் கருத்து வேறுபாடு கொண்டோம். முஆவியா(ரலி) 'இது வேதக்காரர்கள் விஷயமாக இறங்கியது' என்றார். நானோ 'நம்மையும் அவர்களையும் குறித்தே இறங்கியுள்ளது' என்றேன். எனவே, எனக்கும் அவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான்(ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும் உஸ்மான்(ரலி) மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்கு முன் என்னைப் பார்க்காதவர்கள் போன்று என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவிற்கு அழைக்கப்பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள். நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'நீர் விரும்பினால் தனியாக மதீனாவுக்கு அருகில் எங்கேனும் இருந்து கொள்ளும்!' என்று கூறினார். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மேலும், எனக்கு ஓர் அபிஸினியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவி தாழ்த்திக் கட்டுப்படுவேன்' என்று கூறினார்.
Book :24
1407. & 1408. அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார்.
நான் குறைஷிகள் நிறைந்திருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொரசொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒருவர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறிவிட்டு, '(ஸகாத் கொடுக்காமல்) பொருளைப் பதுக்கி வைப்பவர்களுக்காக, நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் புஜத்தின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியாகும். பிறகு அது புஜத்தின் மேற்பகுதி எலும்பில் வைக்கப்படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியாகி உருண்டோடும்' என்று கூறினார்.
திரும்பிவிட்ட அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் 'தாங்கள் கூறியதை மக்கள் வெறுக்கிறார்களே!' என்று கேட்டேன். அதற்கவர், 'அவர்கள் விவரமற்றவர்கள்' எனக் கூறினார்.
தோழர் என்னிடம் சொன்னார்...' என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும் போதே நான் (குறுக்கிட்டு) 'உம்முடைய தோழர் யார்?' எனக் கேட்டேன். 'நபி(ஸல்) அவர்கள் தாம்' எனக் கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்கள் 'அபூ தர்ரே! உஹது மலையை நீர் பார்த்திருக்கிறீரா?' எனக் கேட்டார்கள். தம் வேலை ஏதோ ஒன்றுக்காக நபி(ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி பகல் முடிய இன்னம் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு. 'ஆம்' என்றேன். 'உஹது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவிலலை' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன். மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்' எனக் கூறினார்.
Book :24
1409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்).'
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :24
பாடம் : 6 தர்மம் செய்வதில் முகஸ்துதி அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன்பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினை செய்தும் உங்கள் தான தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள்! (2:264) பாடம் : 7 மோசடிப் பொருளிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. முறையான சம்பாத்தியத்தில் கிடைத்த பொருளிலிருந்தே தவிர (தான தர்மத்தை) ஏற்றுக்கொள்வதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படி செய்வதைவிட மேலானவையாகும். மேலும் அல்லாஹ் தேவையற்றவன்; மிக்க பொறுமையாளன். (2:263) பாடம் : 8 முறையாகச் சம்பாதித்தவற்றைத் தர்மமாக வழங்குதல் அல்லாஹ் கூறுகிறான் : தான, தர்மங்களைப் (பரக்கத்துக்களைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையை நிலையாகக் கடைப் பிடித்து,ஸகாத்தும் கொடுத்துவருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்குத் தம் இறைவனிடத்தில் நற்பலன் இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:276, 277)
1410. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை - அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.'
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 24
பாடம் : 9 மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான்; அதைப் பெறுவதற்கு யாரும் இருக்க மாட்டார். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே! என்றும் கூறுவான்.'
ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்.
Book : 24
1412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை மறுமை நாள் ஏற்படாது. எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவன் தன்னுடைய தர்மத்தை யார்தான் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வான். மேலும், யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவன் எனக்குத் தேவையில்லை என்று கூறுவான்.'
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :24
1413. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) 'நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?' எனக் கேட்க அவன் 'ஆம்' என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்ப வில்லையா? எனக் கேட்டதும் அவன் 'ஆம்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினார்கள்.
Book :24
1414. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:. நிச்சயமாக மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது ஒருவன் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதைப் பெறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணிடம் அபயம் தேடியவர்களாக, நாற்பது பெண்கள் அவனை பின்தொடர்வார்கள்.
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :24