பாடம் : 1 ஸகாத் கடமையாக்கப்படுதல் அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தையும் கொடுங்கள்! (2:43, 2:83, 2:110). நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை, ஸகாத், உறவினருடன் இணக்கமாக இருத்தல்,சுயமரியாதை ஆகியவற்றைக் கட்டளையிட்டார்கள் என்று அபூசுஃப்யான் (ஹிர்கல்-ஹெராக்ளியஸ் மன்னரிடம்) கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.
1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!' என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.
Book : 25
பாடம் : 2 தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் ஒருவார்கள் எனும் (22:27, 28ஆகிய) இறைவசனங்கள்.
1514. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சரியாக நின்றபோது இஹ்ராம் அணிந்து தல்பியாக் கூறியதை பார்த்தேன்.
Book : 25
1515. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி(ஸல்) இஹ்ராம் அணிந்தார்கள்.
இதைப் போன்று அனஸ்(ரலி)யும் இப்னு அப்பாஸ்(ரலி)யும் அறிவித்தார்கள்.
Book :25
பாடம் : 3 ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல்.
1516. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிந்து உம்ராச் செய்ய ஏவினார்கள். ஒட்டகத் தொட்டியில் என்னை ஏற்றினார்கள்.
ஹஜ்ஜுக்கு வாகனத்தைத் தயார்படுத்துங்கள். ஏனெனில் அது இரண்டு ஜிஹாதுகளில் ஒன்றாகும் என்று உமர்(ரலி) கூறினார்.
Book : 25
1517. ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.
அனஸ்(ரலி) ஒட்டகச் சிவிகை அமைக்காமல் ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். (அவர் ஒட்டகச் சிவிகை அமைக்காதற்குக் கஞ்சத்தனம் காரணமில்லை) ஏனெனில், அவர் கஞ்சராக இருந்த தில்லை.
நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகச் சிவிகை அமைக்காமல்) ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்ததாகவும் அனஸ்(ரலி) (எங்களுக்கு) அறிவித்தார்கள்.
Book :25
1518. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்து விட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை' எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று அவருடன் தன்யீமிலிருந்து உம்ரா செய்துவிட்டு வாரும்' என்றார்கள். அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் ஏற்றினார்; நான் உம்ரா செய்தேன்.
Book :25
பாடம் : 4 பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு.
1519. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'செயல்களில் சிறந்தது எது?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது)?' எனக் கேட்கப்பட்டபோது, 'இறைவழியில் போர்புரிதல்' என்றார்கள். 'அதற்குப் பிறகு எது (சிறந்தது?)' எனக் கேட்கப்பட்டபோது 'பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்' என்று பதிலளித்தார்கள்.
Book : 25
1520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! இறைவழியில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்' என்றார்கள்.
Book :25
1521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாயப் பாலகனாகத்) திரும்புவான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :25
பாடம் : 5 ஹஜ் மற்றும் உம்ராவிற்குரிய நிர்ணயிக்கப்பட்ட இஹ்ராமின் எல்லைகள்.
1522. ஸைத் இப்னு ஜுபைர் அறிவித்தார்.
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவரின் வீடாக இருந்தது. நான் அவரிடம் உம்ராவுக்காக எந்த இடத்திலிருந்து இஹ்ராம் அணிவது கூடும்? எனக் கேட்டேன். அதற்கு, 'நஜ்த் வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் மதீனா வாசிகள் துல் ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் இஹ்ராம் அணிய வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்' என இப்னு உமர்(ரலி) பதிலளித்தார்கள்.
Book : 25
பாடம் : 6 மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197ஆவது) இறைவசனம்.
1523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்; மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்' என்ற வசனத்தை இறக்கினான்.
Book : 25
பாடம் : 7 மக்காவாசிகள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்?
1524. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் 'வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள். தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
Book : 25
பாடம் : 8 மதீனாவாசிகள் இஹ்ராம் கட்டும் எல்லையும், மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவுக்கு முன்னால் இஹ்ராம் கட்டக் கூடாது என்பதும்.
1525. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம்வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த்வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'யமன்வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி கிடைத்தது' என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 25
பாடம் : 9 ஷாம்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.
1526. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்பாவையும்யும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் வாசிகளுக்க யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
Book : 25
பாடம் : 10 நஜ்த்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.
1527. & 1528. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மதீனா வாசிகள் துல்ஹுலை ஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த் வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் அணிவார்கள்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'யமன் வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் அணிவார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் கூறுகிறார்கள்: ஆனால், நான் (நேரடியாக) நபி(ஸல்) கூறக் கேட்கவில்லை என இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book : 25

1529. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவ வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
Book :25
பாடம் : 12 யமன்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.
1530. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.
Book : 25
பாடம் : 13 இராக்வாசிகளின் எல்லை தாத்து இர்க்' ஆகும்.
1531. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபா,பஸ்ரா எனும்) இந்த இரு(இராக்-)நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்டபோது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்குக் கர்ன் எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். நாங்கள் (மக்காவிற்கு) செல்லும் பாதை அதுவன்று, நாங்கள் கர்ன் வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும் என்றனர். அதற்கு உமர் (ரலி)அவர்கள், அந்த அளவு தொலைவுள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலே கூறுங்கள் என்றார்கள். பின்பு தாத்துல் இர்க் என எல்லை நிர்ணயித்தார்கள்.
Book : 25
பாடம் : 14
1532. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.
இப்னு உமர்(ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார்.
Book : 25