(ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்
1806. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்கவிற்குப் புறப்பட்டார்கள். 'நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போல் செய்வேன்!" என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.
Volume :2 Book :27
1807. & 1808. நாஃபிவு அறிவித்தார்.
இப்னு ஸுபைர்(ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாள்களில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (அவரின் மக்களான) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், ஸாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும், 'நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காது; நீங்கள் கஅபாவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்!" என்றனர். அதற்கு இப்னு உமர்(ரலி) 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் (நபி(ஸல்) அவர்களைத்) தடுத்தனர்; நபி(ஸல்) தம் பலிப்பிராணியை அறுத்து (பலியிட்டுவிட்டு)த் தலையை மழித்தார்கள்: நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன். கஅபாவிற்குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன்! அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் நான் இருந்தபோது அவர்கள் செய்தது போல் நானும் செய்வேன்!" என்றார்கள். பிறகு, துல்ஹுலைஃபா எனும் இடத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தார்கள். பிறகு, சிறிது நேரம் நடந்துவிட்டு, 'ஹஜ் உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானவையே! நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்!" என்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. 'மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு முறை வலம்வரும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது" என்றும் கூறி வந்தார்கள்.
"நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!" என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவரின் மகன்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின் போது) கூறினார்!" என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
Volume :2 Book :27
1809. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள்.
Volume :2 Book :27
1810. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால், அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை வலம்வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே சஃயு செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்! பலிப் பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!"
Volume :2 Book :27
1811. மிஸ்வர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்டபோது) தலையை மழித்துக் கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும் படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :27
1812. நாஃபிவு(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஸாலிம், அப்துல்லாஹ் ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்து) ஆட்சேபனை செய்தபோது இப்னு உமர்(ரலி) 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள்; எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து)விட்டுத் தம் தலையை மழித்தார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்!)" என்று கூறினார்கள்.
Volume :2 Book :27
1813. நாஃபிவு(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர்(ரலி) மக்காவிற்குப் புறப்பட்டபோது, 'கஅபாவுக்குச் செல்ல விடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி(ஸல்) அவர்களுடன் சென்றபோது நாங்கள் செய்தது போல் செய்து கொள்வோம்!" என்றார்கள். ஹுதைபிய்யா ஆண்டின்போது (ஹிஜ்ரி6-ல்), நபி(ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்த காரணத்தினால் இப்னு உமர்(ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்தார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்து, 'ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானது தான்!" என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, 'இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்!" என்றார்கள். பிறகு, இரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே வலம்வந்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.
Volume :2 Book :27
1814. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
"உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக!அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!" என்றார்கள்.
Volume :2 Book :27
1815. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
ஹுதைபிய்யாவில் என்னருகில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா!" என்று கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். அதற்கு 'உம் தலையை மழித்துக் கொள்ளும்!" என்றார்கள். என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02:196) இறைவசனம் அருளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாவு தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :27
1816. அப்துல்லாஹ் இப்னு மஃகல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், 'என் விஷயமாகவே (திருக்குர்ஆன் 02: 196) இறைவசனம் அருளப்பட்டது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்; நபி(ஸல்) அவர்கள், 'உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஓர் ஆடு இருக்கிறதா?' என்று கேட்டார்கள்; நான் 'இல்லை!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், '(தலையை மழித்து) மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாவு வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!' என்று கூறினார்கள்" என்றார்கள்.
Volume :2 Book :27
1817. கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்.
என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். 'உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். அப்போது ஹுதைபிய்யாவிலிருந்த நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது இறைவன் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட வசனத்தை அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் 'மூன்று ஸாவு தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்: அல்லது ஓர் ஆட்டை பலியிட வேண்டும்; அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்க வேண்டும்!" என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :27
1818. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் முகத்தில் பேன்கள் விழுந்துகொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். அப்போது ஹுதைபியாவிலிருந்து நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது இறைவன் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட வசனத்தை அருளினான். உடனே நபி(ஸல்) அவர்கள் மூன்று ஸாஉ தானியத்தை ஆறு பேருக்கு வழஙக வேண்டும் அல்லது ஒரு ஆட்டை பலியிட வேண்டும் அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்! என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.
Volume :2 Book :27
1819. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :27
1820. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :27
(இஹ்ராம் அணிந்த நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்
1821. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி(ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.
"அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி(ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூம்ஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, 'நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்தீர்?' என்று கேட்டேன். அதற்கவர் 'அவர்கள் 'சுக்யா' எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணிருந்த வேளையில், 'தஃஹின்' எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!" என்றார். (நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து), 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் 'உண்ணுங்கள்!" என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.
Volume :2 Book :28
1822. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
ஹுதைபிய்யா (ஒப்பந்தம் நடந்த) ஆண்டில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அவர்களின் தோழர்கள் இஹ்ராம் அணிந்திருந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. 'கைகா' எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது; நாங்கள் அவர்களை எதிர்கொள்ளச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் அதைப் பார்த்து, அதன் மீது குதிரையை ஏவி, ஈட்டியால் அதைக் குத்திப் பிடித்தேன். நான் என் தோழர்களிடம் உதவி தேடியபோது, அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு, அதை நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று சேர்ந்து விட்டேன். நபி(ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோம் என்று அஞ்சி, என் குதிரைய விரைவாகவும் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனும்ஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். 'நபி(ஸல்) அவர்களை எங்கேவிட்டு வந்திருக்கிறீர்?' என்று கேட்டேன். 'அவர்கள் 'சுக்யா' எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில் 'தஃஹின்' எனும் இடத்தில் அவர்களைவிட்டு வந்தேன்!" என்று அவர் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களை அடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு ஸலாம் கூறி அனுப்பினார்கள்: உங்களிடமிருந்து அவர்களை எதிரிகள் பிரித்து விடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்: எனவே, அவர்களுக்காக எதிர்பார்த்திருங்கள்!" என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) மீதமும் உள்ளது!" என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களிடம் 'உண்ணுங்கள்!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :28
1823. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் 'நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!" என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் 'உண்ணுங்கள்!" என்றனர். மற்றும் சிலர் 'உண்ணாதீர்கள்!" என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!' என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :28
1824. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி(ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பிவைத்தார்கள். 'கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?' என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; 'நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?' என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!" என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?' என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் 'இல்லை!" என்றனர். 'அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :28
1825. ஸஅபு இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். 'நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!" என்று கூறினார்கள்.
Volume :2 Book :28