பாடம் : 101 இறந்துபோன மிருகத்தின் பதப்படுத்தப்படா தோல்கள்.
2047. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!' என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!'
Book : 34
2048. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!' என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது!' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!' என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!' என்றேன். 'யாரை?' என்றார்கள். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!' என்றார்கள்.
Book :34
2049. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மதீனாவுக்கு வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) வசதி படைத்தவராக இருந்தார். அவர் அப்துர் ரஹ்மானிடம், 'என்னுடைய செல்வத்தைச் சரி பாதியாக உமக்குப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்து செய்து) உமக்கு மண முடித்துத் தருகிறேன்!' எனக் கூறினார். அதற்கு அப்துர் ரஹ்மான்(ரலி), 'உம்முடைய குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக!' எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்! எனக் கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று, அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!' என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :34
2050. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது 'உங்களுடைய இறைவனின் அருளைத் தேடுவது உங்களின் மீது குற்றமில்லை' என்ற (திருக்குர்ஆன் 02:198) வசனம் அருளப்பட்டது.
இவ்வசனத்துடன் ஹஜ்ஜுக்காலங்களில் என்பதையும் சேர்த்து இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியிருக்கிறார்.
Book :34
பாடம் : 2 ஹலால் தெளிவானது; ஹராமும் தெளிவானது; அவ்விரண்டிற்கிடையே சந்தேகத்திற்கிடமானதும் உள்ளது.
2051. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்'
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
Book : 34
பாடம் : 3 சந்தேகத்திற்கிடமானவை பற்றிய விளக்கம். (பாவங்களில் சிக்கிக் கொள்ளாமல்) சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பதைவிட மிகவும் எளிதான ஒன்றை நான் காணவில்லை! சந்தேகத்திற்கிடமானவற்றை நீர் விட்டுவிட்டு, சந்தேகத்திற்கிட மில்லாதவற்றின் பக்கம் சென்றுவிடுவீராக! (எனும் நபி போதனையைப் பின்பற்றியதால்தான் இறையச்சமுடைய சுயக்கட்டுப்பாடுடனான வாழ்க்கை வாழ்வது எனக்கு எளிதாயிற்று!) என்று ஹஸ்ஸான் பின் அபீ ஸினான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2052. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
கருப்பு நிறப் பெண் ஒருவர் (என்னிடம்) வந்து, எனக்கும் என் மனைவிக்கும் தாம் பாலூட்டியிருப்பதாகக் கூறினார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, (முதலில்) அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை; பிறகு (மீண்டும் மீண்டும் நான் கூறவே) புன்னகைத்துவிட்டு 'இவ்வாறு கூறப்பட்ட பின் எப்படி (அவளுடன் நீ வாழ முடியும்?' என்று வினவினார்கள். அப்பொழுது எனக்கு மனைவியாக இருந்தவர் அபூ இஹாப் தமீமியின் மகளாவார்!
Book : 34
2053. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'ஸம்ஆ' என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!' என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,'ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் மகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!' என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.
Book :34
2054. அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்' என்றார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (வேட்டைக்காக) நான் என்னுடைய நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப் பட்ட பிராணிக்கு அருகில் என்னுடைய நாயுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன்; அந்தமற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை; இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?) எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உன்னுடைய நாயை அனுப்பும்போது தான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை' என விடையளித்தார்கள்.
Book :34
பாடம் : 4 சந்தேகத்திற்குரியவற்றை எந்த அளவுக்குத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்?
2055. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'இது ஸதக்காப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்' என்றார்கள்.
'என்னுடைய படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்...' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 34
பாடம் : 5 அடிப்படை இல்லா மனக் குழப்பங்கள் சந்தேகத்திற்குரியவைகளில் சேரா.
2056. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
'ஒருவர் தொழும்போது காற்றுப் பிரிந்தது போன்று உணர்கிறார்; இதனால் தொழுகை முறியுமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'சப்தத்தைக் கேட்கும்வரை அல்லது நாற்றத்தை உணரும்வரை முறியாது' என்றார்கள்.
சப்தத்தைக் கேட்காமல், நாற்றத்தை உணராமல் உளூ தேவையில்லை என்று ஸுஹ்ரி கூறுகிறார்.
Book : 34
2057. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை' என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்' என்றார்கள்.
Book :34
பாடம் : 6 அவர்கள் வியாபாரத்தை அல்லது விணானவற்றைக் கண்டால் அதன்பால் சென்று விடுகிறார்கள் எனும் (62:11ஆவது) இறைவசனம்.
2058. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஷாம் நாட்டிலிருந்து ஒரு வணிகக் கூட்டம் வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு நபர்களைத் தவிர யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது, 'அவர்கள் வியாபாரத்தையோ வீணானவற்றையோ கண்டால் அதன் பால் செல்வார்கள்' என்ற வசனம் அருளப்பட்டது.
Book : 34
பாடம் : 8 தரைவழி வாணிபமும் மற்றவையும். அல்லாஹ் கூறுகின்றான்: அந்த இறையில்லங்களில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள் எத்தகையோர் எனில், இறைவனை நினைவு கூருவதிலிருந்தும், தொழுகையை நிலைநாட்டுவதிலிருந்தும், ஸகாத் கொடுப்பதிலிருந்தும் வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் திசைதிருப்பி விடுவதில்லை! (24:37) அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்துவந்தார்கள்; ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும் போது அதை நிறைவேற்றி முடிக்காத வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை! என்று கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34
2060. & 2061. அபுல் மின்ஹால்(ரஹ்) அறிவித்தார்.
'நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு 'உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!' என அவர்கள் பதிலளித்தார்கள்!' என்றார்கள்!'
Book :34
2062. உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
உமர்(ரலி) (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூ மூஸா(ரலி) வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர்(ரலி) அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை; உடனே அபூ மூஸா(ரலி) திரும்பிவிட்டார்கள். அலுவலை முடித்த உமர்(ரலி), 'அபூ மூஸாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!' என்றார்கள். 'அவர் திரும்பிச் சென்றார்!' என்று கூறப்பட்டது. உடனே உமர்(ரலி) அபூ மூஸா(ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள். ('ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?' என்று உமர்(ரலி) கேட்டபோது) அபூ மூஸா(ரலி), 'இவ்வாறே நாங்கள் கட்டளையிட்டிருந்தோம்!' எனக் கூறினார்கள். உமர்(ரலி) 'இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டுவாரும்!' எனக் கேட்டார்கள். உடனே, அபூ மூஸா(ரலி) அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நம்மில் இளையவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சி சொல்ல மாட்டார்கள்!' என்றனர். அபூ மூஸா(ரலி) அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசைதிருப்பிவிட்டது போலும்!' என்று கூறினார்கள்.
Book :34
பாடம் : 10 கடல்வழிப் பயணம் மேற் கொண்டு வியாபாரம் செய்தல். இதில் எந்தத் தவறுமில்லை! குர்ஆனில் கடல் பயணம் குறித்து அல்லாஹ், தகுந்த காரணத்தோடுதான் (தன் அருட்கொடையாக அதை வர்ணித்துக்) கூறியுள்ளான்! என்று ம(த்)தர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு,நீங்கள் கடலிலிருந்து மிருதுவான (புத்தம் புதிய) மாமிசத்தைப் புசிப்பதற்காகவும், அணிந்து கொள்ளக் கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிக் கொணர்வதற்காகவும் அவன்தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்! இன்னும் அதில் நீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பல்களை நீர் காண்கின்றீர்! (பல்வேறு நாடுகளுக்கும் சென்று) அவனது அருட்கொடையை நீங்கள் தேடுவதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்காகவுமே இவையெல்லாம் (உங்களுக்கு வசப்படுத்தித் தரப்பட்டு) உள்ளன! எனும் (16:14ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். (மேற்கண்ட வசனத்தின் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள) அல்ஃபுல்க் எனும் சொல் கப்பல்களைக் குறிக்கும். ஒருமை, பன்மை ஆகிய இருநிலைகளிலும் இச்சொல் ஆளப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தில் பிளந்து கொண்டு செல்லும் என்பதைக் குறிக்க மவாகிர எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. . இந்த வசனம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கப்பல்கள் காற்றைப் பிளந்து கொண்டு செல்கின்றன; இவ்வாறு காற்றைப் பிளந்து கொண்டு செல்ல பெரிய கப்பல்களால் (-அல்புல்குல் இழாம்)தாம் இயலும்.
2063. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் இஸ்ரவேலர்களில் ஒரு மனிதரைப் பற்றிக் கூறும்போது 'அவர் கடல் மார்க்கமாகப் பயணம் சென்று. தம் தேவையை நிறைவேற்றினார்!' என்று குறிப்பிட்டார்கள்.
Book : 34
பாடம் : 11 அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் அதன் பால் சென்று விடுகிறார்கள்! (எனும்62:11ஆவது வசனத்தொடர்). அல்லாஹ் கூறுகிறான்: வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ அவர்களை இறை நினைவிலிருந்து திருப்பாது! (24:27) அன்றைய மக்கள் வியாபாரம் செய்துவந்தனர். அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று அவர்கள் முன்னே வந்தால் அதை நிறைவேற்றாதவரை அவர்களது வியாபாரமோ கொடுக்கல் வாங்கலோ இறைநினைவிலிருந்து அவர்களைத் திருப்பாது! என்று கத்தாதா (ரஹ்) கூறுகிறார்கள்.
2064. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுகை தொழுது கொண்டிருந்தபோது வணிகக் கூட்டம் ஒன்று வந்தது. உடனே, பன்னிரண்டு நபர்களைத் தவிர மற்றவர்கள் (வணிகக் கூட்டத்தை நோக்கி கலைந்து) ஓடிவிட்டனர். அப்போது, 'அவர்கள் வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால், நின்ற நிலையில் உம்மைவிட்டுவிட்டு அங்கே ஓடி விடுகிறார்கள்!' என்னும் (திருக்குர்ஆன் 62:11) இறைவசனம் அருளப்பட்டது!'
Book : 34
பாடம் : 12 (அனுமதிக்கப்பட்ட வழிகளில்) நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து சிறந்தவற்றைச் செலவு செய்யுங்கள்!எனும் (2:267ஆவது) இறைவசனம்.
2065. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும்! (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு! கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும்! ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்!'
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 34
2066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :34