2340. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் (நபி(ஸல்) அவர்கள் காலத்தில்), விளைச்சலில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது பாதியைத் தமக்குக் கொடுத்து விடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் தம் நிலத்தைக் குத்தகைக்குவிட்டு வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர், தானே அதனைப் பயிரிடட்டும். அல்லது அதனை (தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது பிரதிபலன் எதிர் பார்க்காமல்) இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். அப்படிச் செய்யவில்லையென்றால், தன் நிலத்தை அவர் அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்' என்று கூறினார்கள்.
Book :41
2341. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதனைத் தானே பயிரிடட்டும்; அல்லது அதனை தன் முஸ்லிம் சகோதரர் எவருக்காவது (பிரதிபலன் எதிர் பார்க்காமல் இலவசமாகப் பயிர் செய்யக் கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தன் நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :41
2342. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.
(ஹதீஸ் எண் 39ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த நபிமொழியை, நான் தாஊஸ்(ரஹ்) அவர்களிடம் கூறிய பொழுது அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
ஒருவர் தன் நிலத்தைக் குத்தகைக்குவிட்டுப் பயிரிடச் செய்வது அனுமதிக்கப்பட்டதேயாகும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் அதனை (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத்) தடை செய்யவில்லை. மாறாக, 'ஒருவர் தம் சகோதரருக்குத் தன் நிலத்தை இலவசமாகப் பயிரிட்டு (அதன் விளைச்சல் முழுவதையும் எடுத்து)க் கொள்ளக் கொடுத்து விடுவது அதற்காக ஒரு குறிப்பிட்ட பங்கை (குத்தகைத் தொகையாகப்) பெற்றுக் கொள்வதை விடச் சிறந்தது' என்றே கூறினார்கள்' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book :41
2343. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும், முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் தம் நிலங்களை இப்னு உமர்(ரலி) குத்தகைக்குவிட்டு வந்தார்கள்.
Book :41
2344. பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு (ஹதீஸ் எண் 2339ல்) ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்த, 'நபி(ஸல்) அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள்' என்னும் நபிமொழி எடுத்துரைக்கப்பட்டது. இப்னு உமர்(ரலி) இதைச் செவியுற்றவுடனே ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் சென்றேன். இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம் இது குறித்து விசாரித்தார்கள். ராஃபிஉ(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்' என்று கூறினார்கள். இதனைச் செவியுற்ற இப்னு உமர்(ரலி) ராஃபிஉ(ரலி) அவர்களிடம், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் கரையோரமாக உள்ள நிலங்களின் விளைச்சலையும் சிறிது வைக்கோலையும் எங்களுக்குக் கொடுத்துவிடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்கு கொடுத்து வந்ததைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்களே' என்று கூறினார்கள்.
Book :41
2345. சாலிம்(ரஹ்) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். பிறகு, அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (மேற்கண்ட ஹதீஸ் எண் 2344ல் ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) கூறியதைக் கேட்ட பின்) நிலக்குத்தகை தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் எதனையாவது பிறப்பித்து (பழைய விதிகளை மாற்றியமைத்து) விட்டிருக்க, அதனை நாம் அறியாதிருந்து விட்டோமோ என்று அஞ்சி நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்திவிட்டார்கள்.
Book :41
பாடம் : 19 நிலத்தைத் தங்க மற்றும் வெள்ளி (நாணயங்களு)க்காகக் குத்தகைக்கு விடுவது செல்லும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்கள் செய்யக் கூடியவற்றில் மிகவும் மேலானது தரிசு நிலத்தை (பயிர் செய் வதற்காக) வருட வாடகைக்கு எடுப்ப தேயாகும் என்று கூறினார்கள்.
2346. & 2347. ராஃபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரர்கள் இருவர், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நீரோடைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் அல்லது நில உரிமையாளர்(களான நாங்கள்) வரையறுக்கிற (ஒரு பகுதி) விளைச்சலை எங்களுக்குக் கொடுத்து விடவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் நிலங்களைக் குத்தகைக்குவிட்டு வந்தோம். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவிட்டார்கள்' என்று என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பாளர் ஹன்ழலா இப்னு கைஸ்(ரஹ்) கூறினார்:
ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களிடம், 'தங்க மற்றும் வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடலாமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதில் (தங்க, வெள்ளி நாணயங்களைப் பெற்றுக் கொண்டு குத்தகைக்கு விடுவதில்) தவறில்லை' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் லைஸ்(ரஹ்), 'ஹலாலையும் (அனுமதிக்கப்பட்டதையும்) ஹராமையும் (விலக்கப்பட்டதையும்) வேறுபடுத்தி விளங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் தடை செய்யப்பட்ட குத்தகை முறைகளை ஆய்வுக் கண்கொண்டு பார்ப்பார்களாயின் அவற்றிலுள்ள ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அனுமதிக்கமாட்டார்கள்' என்று கூறினார்கள்.
Book : 41
2348. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள், கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்:
சொர்க்கவாசிகளில் ஒருவர், தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம், 'நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம், (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால், நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன்' என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்.) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராம் விடும்; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும். அப்போது இறைவன், 'எடுத்துக் கொள். ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது' என்று கூறுவான்.
(நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்கா வாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ)தான் இருக்கமுடியும். அவர்கள் தாம் விவசாயிகள், நாங்களோ விவசாயிகள் அல்லர்' என்று கூறினார். இதனைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டார்கள்.
Book :41
பாடம் : 21 மரம் நடுதல்.
2349. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்.
நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் கிழவியொருத்தி நட்பாக இருந்தாள். அவள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த 'சில்க்' என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தன்னுடைய பாத்திரமொன்றில் போட்டு, அவற்றுடன் வாற்கோதுமை விதைகள் சிலவற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவாள். நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்தக் கிழவியைச் சந்திப்போம். அவள் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவாள். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக் கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.
மூன்றாவது அறிவிப்பாளரான யஃகூப்(ரஹ்) கூறினார்:
இரண்டாம் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம்(ரஹ்), 'அந்த உணவு கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் அற்றதாக இருந்தது' என்று கூறினார்கள் எனவே கருதுகிறேன்.
Book : 41
2350. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா ஏராளமான நபி மொழிகளை அறிவிக்கிறாரே என்று மக்கள் (என்னைக் குறை கூறும் தொனியில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லாஹ்விடம் இதற்கெனக் குறித்த வேளை ஒன்று உண்டு. மேலும், அவர்கள், 'முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் என்ன நேர்ந்துவிட்டது? அபூ ஹுரைரா நபிமொழிகளை அறிவிப்பதைப் போல் அவர்கள் அறிவிப்பதில்லையே ஏன்?' என்று கேட்கிறார்கள். என் முஹாஜிர் சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தனர்; என் அன்சாரித் சகோதரர்களோ தங்கள் சொத்துகளைப் பராமரிக்கும் வேலையில் (விவசாயம் போன்ற பணிகளில்) ஈடுபட்டிருந்தனர். (அதே நேரத்தில்) நானோ என் வயிற்றை நிரப்பும் (வருவாய் போதுமென்ற) திருப்தியுடன் (மேற்கொண்டு வருவாய் எதுவும் தேடாமல்) அல்லாஹ்வின் தூதருடனேயே எப்போது இருப்பதை வழக்கமாகக் கொண்ட ஏழை மனிதனாயிருந்தேன். நபி(ஸல்) அவர்களுடன் மற்றவர்கள் இல்லாத போதும் (சம்பாத்தியத்தைத் தேடி அவர்கள் வெளியே சென்று விடும் போதும்) நான் (நபியவர்களுடன் இருப்பேன். அவர்கள் (நபி மொழிகளை) மறந்து விடும்போது நான் (அவற்றை) நினைவில் (பாதுகாப்பாக) வைத்திருப்பேன். மேலும், ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள், 'நான் என்னுடைய இச்சொல்லைச் சொல்லி முடிக்கிற வரை, தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து, பிறகு தன் நெஞ்சோடு அதைச் சேர்ந்து வைத்துக் கொள்கிறவர் என் வாக்கு எதனையும் மறக்கமாட்டார்' என்று கூற, நான் என் அங்கியை விரித்தேன். அதனைத் தவிர என் மீது வேறு ஆடை எதுவும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் தம் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை அதை அப்படியே விரித்து வைத்திருந்துவிட்டு, பிறகு அதனை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்து)க் கொண்டேன். நபி(ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அப்போதிருந்து அவர்களின் சொற்களில் எதனையுமே இன்று வரை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தின் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் (நபிமொழிகளில்) எதனையுமே உங்களுக்கு ஒருபோதும் அறிவித்திருக்க மாட்டேன்.
இவைதாம் அந்தத் திருக்குர்ஆன் வசனங்கள்.
நாம் இறங்கியருளிய தெளிவான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்தில் எடுத்துரைத்த பின்னரும் மறைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கிறான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கிறார்கள். ஆனால், (இத்தவற்றிலிருந்து) திருந்தி, தம் செயல் முறையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, (தாம் மறைத்து வைத்தவற்றை) எடுத்துரைக்கிறவர்களை நான் மன்னிப்பேன். நான் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறேன். (திருக்குர்ஆன் 02:159, 160)
Book :41

பாடம் : 1 தண்ணீர் விநியோகம். அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினத்தையும் தண்ணீரி லிருந்து நாம் படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா? (21:30) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பருகும் இந்த நீரை நீங்கள் எப்போதாவது கண் திறந்து பார்த்திருக் கிறீர்களா? மேகத்தில் இருந்து,நீங்கள் இதனைப் பொழியச் செய்தீர்களா? அல்லது இதனைப் பொழியச் செய்தது நாமா? நாம் நாடியிருந்தால் இதனை உவர்ப்பு நீராக்கி விட்டிருப்போம். அப்படியிருக்க, நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை? (56:68-70) பாடம் : 2 தண்ணீரை தர்மம் செய்வதும் நன் கொடையாக வழங்குவதும் அதை மரண சாசனத்தின் வாயிலாக பிறர்க்கு (உடைமையாக்கித்) தருவதும் செல்லும்; அது பங்கிடப்பட்டு விட்டதாயினும் சரி (பிறருடைய பங்கையும் உள்ளடக்கி) பங்கிடப்படாததாக இருப்பினும் சரி. உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது: ரூமா கிணற்றை வாங்குபவர் யார்? அதில் அ(தை வாங்குப)வருடைய வாளி, மற்ற முஸ்லிம்களின் வாளியைப் போல் (சம உரிமை பெற்றதாக) இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே,நான் அதை வாங்கி (முஸ்லிம் களின் நலனுக்காக வக்ஃபு செய்து) விட்டேன்.2
2351. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), 'சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்' என்று கூறினார். எனவே, நபி(ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.
Book : 42
2352. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, 'உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, '(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்' என்றார்கள்.
Book :42
பாடம் : 3 நீர்நிலையின் உரிமையாளர், தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொள்ளும் வரை அதன் நீரைப் பயன்படுத்த முன்னுரிமை பெற்றவர் ஆவார். ஏனெனில், தேவைக்கு மேல் எஞ்சியுள்ள தண்ணீரை (பிறர் உபயோகிப்பதைத்) தடுப்பது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
2353. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகத் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி(ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்திவிட்டு, தம் (திரு)வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் இடப்பக்கத்தில் அபூ பக்கர்(ரலி) அவர்களும் வலப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். எனவே, உமர்(ரலி), நபி(ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, 'உங்களிடம் இருப்பதை அபூ பக்ருக்கு கொடுத்து விடுங்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் வலப்பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்துவிட்டு, '(முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப்பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்' என்றார்கள்.
Book : 42
2354. '(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42
பாடம் : 4 தனக்குச் சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டியவர் (அதில் யாரேனும் மனிதனோ மற்ற பிராணிகளோ விழுந்து இறந்து போனால்) அதற்கு நஷ்ட ஈடு தர மாட்டார்.
2355. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
Book : 42
பாடம் : 5 கிணறு தொடர்பான வழக்கும் அதற்கான தீர்ப்பும்.
2356. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுரங்கத்தினாலோ, கிணற்றினாலோ, மிருகங்களாலோ ஏற்படும் இழப்பு மன்னிக்கப்பட்டதாகும். புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (அரசுக்கு ஸகாத்தாகக்) கொடுத்துவிடவேண்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 42
பாடம் : 6 தண்ணீரைப் பயன்படுத்த விடாமல் வழிப்போக்கரைத் தடுத்தவரின் பாவம்.
2357. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
'ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ்(ரலி) வந்து (மக்களை நோக்கி, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில்தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், 'என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், பிரதிவாதி ('அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்யவேண்டும்' என்றார்கள். நான், 'அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருளினான்' என்று கூறினார்கள்.
Book : 42
2358. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.
ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன்.
இன்னொருவன், தன் (ஆட்சித்) தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்தவன்; அவர் கொடுத்தால் (மட்டுமே) திருப்தியடைந்து, கொடுக்காமல்விட்டால் கோபம் கொள்பவன்.
மற்றொருவன், அஸர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும் போது) தன் வியாபாரப் பொருளைக் காட்டி, 'எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அவன் மீது சத்தியமாக! இந்தப் பொருளுக்காக (இதைக் கொள்முதல் செய்யும்போது) நான் இன்ன (அதிக) விலையைத் தந்தேன். என்று கூறி, அதை ஒருவர் உண்மையென நம்பும்படி செய்வதன் (இப்படி வாடிக்கையாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றி, சொன்ன விலைக்கு அதை விற்றவன்) ஆவான்.
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்கள்...' என்னும் இந்த (திருக்குர்ஆன் 03:77 ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :42
பாடம் : 7 நதிகளையும் கால்வாய்களையும் மூடிவிடுவது.
2359. & 2360. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், 'தண்ணீரைத் திறந்து ஓட விடு' என்று கூறினார். ஸுபைர்(ரலி) (தண்ணீரைத் திறந்து விட) மறுத்துவிட்டார்கள். (இந்தத் தகராறையையொட்டி) நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி(ஸல்) அவர்கள், 'ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்' என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, 'உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?' என்று கேட்டார். இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து)விட்டது. அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களை நோக்கி, 'உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். (என்னிடம்) இந்நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர்(ரலி), 'இறைவன் மீதாணையாக! '(முஹம்மதே!) உங்களுடைய இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்ற பின்னர், நீங்கள் அளிக்கிற தீர்ப்புக் குறித்து தம் உள்ளங்களில் எத்தனைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04: 65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில்தான் இறங்கியது என்று எண்ணுகிறேன்' என்று கூறினார்கள்.
Book : 42