பாடம் : 1 குளிப்பதற்கு முன் உளூ செய்தல்.
248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்' ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 5
249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது' என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book :5
பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.
250. ஃபரக்' என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'ஃபரக்' என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
Book : 5
பாடம் : 3 ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில் குளிப்பது.
251. 'நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் 'நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?' என்று கேட்டதற்கு, 'ஸாவு' போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது' என்று ஆயிஷா(ரலி) கூறினார்' என அபூ ஸலமா அறிவித்தார்.
Book : 5
252. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு, 'உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Book :5
253. நபி(ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா(ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
'மற்றோர் அறிவிப்பில் ஒரு 'ஸாவு' அளவுள்ள பாத்திரம்' என்று கூறப்பட்டுள்ளது.
Book :5
பாடம் : 4 தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
254. 'நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்கள்' என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Book : 5
255. 'நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book :5
256. 'உன் தந்தையின் சகோதரர் மகனான ஹஸன் இப்னு முஹம்மத் இப்னி அல்ஹனஃபிய்யா என்னிடம் கடமையான குளிப்பு எப்படி? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தங்களின் தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன். அப்போது 'நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?' என ஹஸன் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்' என்று கூறினேன்' என என்னிடம் ஜாபிர்(ரலி) கூறினார்' என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Book :5
பாடம் : 5 குளிக்கும் போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்.
257. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்' என மைமூனா (ரலி) அறிவித்தார்.
Book : 5
பாடம் : 6 குளிக்கச் செல்லும் போது குவளை (ஹிலாப்) கேட்பதும் குளிப்பதற்கு முன் நறுமணம் தேய்ப்பதும். (குறிப்பு: ஒட்டகத்தில் ஒருமுறை கறக்கப்படும் பால் கொள்ளளவுள்ள குவளைக்கு ஹிலாப் என்பர்.)
258. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 5
பாடம் : 7 பெருந்துடக்கிற்கான குளியலின் போது வாய்கொப்பளித்து மூக்கில் தண்ணீர் செலுத்(திச் சிந்)துதல்.
259. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை' மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 5
பாடம் : 8 கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்.
260. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியபோது (முதலில்) தங்களின் மர்மஸ்தலத்தைத் தங்கள் கையினால் கழுவினார்கள். பின்னர், கையைச் சுவரில் தேய்த்துக் கழுவினார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்துத் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்' என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 5
பாடம் : 9 பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக் கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
261. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 5
262. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் கையைக் கழுவுவார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :5
263. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் கடமையான குளிப்பைக் குளித்தோம்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :5
264. 'நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்புக் குளிப்பார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
Book :5
பாடம் : 10 உளூவிலும் குளியலிலும் சிறிது நேரம் இடைவெளி விடுதல். உளூ செய்த தண்ணீர் (உறுப்புகளில்) காய்ந்த பின்னர் தம்மிரு கால்களையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.
265. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்' என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 5
பாடம் : 11 குளிக்கும் போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது ஊற்றுவது.
266. நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, 'வேண்டாம்' என்பது போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்' என மைமூனா(ரலி) அறிவித்தார்.
'இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது' என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.
Book : 5
பாடம் : 12 ஒரு முறை தாம்பத்தியஉறவு கொண்ட பின் மீண்டும் தாம்பத்திய உறவு கொள்வதும், (பலதார மணம் புரிந்தவர்) தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்.
267. ('நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்' என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.
Book : 5