பாடம் : 10 தங்கம், வெள்ளி மற்றும் நாணய மாற்றில் பயன்படுத்தப்படும் பொருள் களில் கூட்டு.
2497. & 2498. சுலைமான் இப்னு அபீ முஸ்லிம்(ரஹ்) அறிவித்தார்.
நான் அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ இப்னு ஆஸிப்(ரலி) எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், 'நானும் என்னுடைய கூட்டாளியான ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், 'உடனுக்குடன் மாற்றியதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்யுங்கள்' என்று பதிலளித்தார்கள்' எனக் கூறினார்கள்.
Book : 47
2499. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் 'பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது)' என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்துவிட்டார்கள்.
Book :47
பாடம் : 12 ஆடுகளைப் பங்கிடுவதும் அதில் நீதியுடன் நடந்து கொள்வதும்.
2500. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைத் தம் தோழர்களிடையே பங்கிடும்படி கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு விட்டேன்.) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீ குர்பானி கொடுத்து விடு' என்று கூறினார்கள்.
Book : 47
பாடம் : 13 (வியாபாரத்திற்காக வாங்கும்) உணவு முத-ய பொருள்களில் கூட்டு. ஒரு மனிதர் ஒரு பொருளை பேரம் பேசினார். அவருக்கு மற்றொருவர் (அதை வாங்கிக் கொள்ளும்படி) கண்ணால் சாடை காட்டினார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், கண் சாடை காட்டிய அந்த மனிதர் (பேரம் பேசியவரின்) வியாபாரக் கூட்டாளி என்று கருதினார்கள்.
2501. & 2502. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.
என் தாயார் ஸைனப் பின்த்து ஹுமைத்(ரலி) (நான் சிறுவனாயிருக்கும் போது) என்னை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவனிடம் (இஸ்லாத்தின் படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சிறுவனாயிற்றே!' என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக் கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார்கள்.
ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அறிவித்தார்.
என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) கடைவீதிக்குக் கொண்டு சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். (அப்போது அவர்களை இப்னு உமர்(ரலி) அவர்களும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் சந்திப்பார்கள். அப்போது அவ்விருவரும், 'எங்களுடன் உணவு வியாபாரத்தில் கூட்டாளியாகி விடுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள்வளம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள்' என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர்களின் கூட்டாளியாகி விடுவார்கள். சில வேளைகளில், ஓர் ஒட்டகம் முழுக்க அப்படியே (லாபமாக) அவருக்குக் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.
Book : 47
2503. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அவ்வடிமைக்கு ஈடான வேறோர் அடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அந்த அடிமையில் அவருடன் பங்குள்ளவர்களுக்கு அவர்களின் பங்குக்கான தொகை கொடுக்கப்பட்டு விடவேண்டும்; விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :47
2504. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்துவிடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :47
பாடம் : 15 தியாகப் பிராணியிலும் தியாக ஒட்டகத்திலும் கூட்டாகுதல். ஒருவர் தியாகப் பிராணியை பலி கொடுத்த பின்னர் அதில் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்ளலாமா?
2505. & 2506. ஜாபிர்(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல்ஹஜ்ஜின் நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக மட்டும் அவர்களு(டைய ஹஜ்ஜுடைய நிய்யத்து)டன் (உம்ரா) எதுவும் கலந்து விடாமல் இஹ்ராம் அணிந்தவர்களாக வந்தார்கள். நாங்கள் வந்து சேர்ந்தபோது நாங்கள் இஹ்ராம் அணிந்ததை உம்ராவாக ஆக்கிக் கொள்ளும்படியும் எங்கள் மனைவிமார்களிடம் நாங்கள் உறவு கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். மக்களிடையே இந்த விஷயம் பரவிவிட்டது. அதைப் பற்றி அவர்கள் வியப்புடன் பேசிக் கொள்ளலாயினர்.
அறிவிப்பாளர் அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்: பிறகு ஜாபிர்(ரலி), 'எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்க, (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாங்கள் மினாவுக்குச் செல்வதா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அப்போது ஜாபிர்(ரலி) தம் கையால் சைகை செய்து இவ்வாறு கேட்டார்கள்.'..
இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்கள் சிலர் இப்படி 'இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. இறைவன் மீதாணையாக! நான் அவர்களை விட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவனும் ஆவேன். என் விவகாரத்தில் (ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்ததில்) நான் பிற்பாடு (இறையறிவிப்பின் வாயிலாக) அறிந்த ('ஹஜ் மாதத்தில் உம்ரா செய்ய அனுமதியுண்டு' என்கிற சட்டத்)தை முன்கூட்டியே நான் அறிந்திருப்பேனாயின் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். என்னுடன் பலிப்பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விட்டிருப்பேன்.' என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுரக்காக இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும்(ரலி) எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டும் தானா? இல்லை, என்றைக்குமாகவா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(உங்களுக்கு மட்டும் என்று) இல்லை; மாறாக, என்றைக்குமாகத் தான்' என்று கூறினார்கள். அப்போது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள்.
அறிவிப்பாளர் அதாஉ(ரஹ்) கூறினார்கள்:
ஜாபிர்(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர்(ரலி)), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்துள்ளார்களோ அதே ஹஜ்ஜுக்காகத்தான் நானும் இஹ்ராம் அணிகிறேன்' என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர், (இப்னு அப்பாஸ்(ரலி)), 'அல்லாஹ்வின் தூதருடைய ஹஜ்ஜைப் போன்றதற்கே (ஹஜ்ஜும்ரானுக்கே) நானும் இஹ்ராம் அணிகிறேன்' என்று அலீ(ரலி) சொன்னதாகக் கூறுகிறார். நபி(ஸல்) அவர்கள், அலீ(ரலி) அவர்களை அவர்களின் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தம் தியாக பிராணியில் அவர்களையும் கூட்டாளியாக்கினார்கள்.
Book : 47
2507. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்க வைத்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு, ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு, அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. எனவே,) ஒருவர் அம்பெய்து அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கட்டுங்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக் கடங்காதவை சில உண்டு. எனவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்லுகிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! '(இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்திவிட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க்களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமே' என்று நாங்கள் அஞ்சுகிறோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர அதைப் பற்றி ('அது ஏன் கூடாது' என்று) உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும்' என்று பதிலளித்தார்கள்.
Book :47

பாடம் : 1 ஊரிலிருக்கும் போது அடைமானம் வைத்தல். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் பயணத்திலிருந்தால், மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் அடகுப் பொருளைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளலாம். (2:283)
2508. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். 'முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
Book : 48
பாடம் : 2 கவசத்தை அடகு வைத்தல்.
2509. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் அடைமானம் பற்றியும் கடனில் பிணை பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் நகயீ(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தம் கவசத்தை அடைமானம் வைத்தார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என எமக்கு அஸ்வத்(ரலி) அறிவித்தார்' என்று கூறினார்கள்.
Book : 48
பாடம் : 3 ஆயுதத்தை அடகு வைத்தல்.
2510. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒரு முறை அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள், 'கஅபாவின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்' என்று கூறினார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் தயாராக இருக்கிறேன்' என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக் நீ தரவேண்டும் என்று விரும்புகிறோம்' எனக் கூறினார். அதற்கு அவன், 'உங்கள் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள்' என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நீயோ அரபிகளிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகு வைக்க முடியும்?' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவன், 'உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வையுங்கள்' என்று கேட்டான். அதற்கு அவர், 'நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? (அப்படி அடகு வைத்தல்) 'ஓரிரண்டு வஸக்குகளுக்காக அடகு வைக்கப்பட்டவன் தானே இவன்' என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்களுக்கு அவமானமல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம்' என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்றார்கள். (பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கிற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்; பிறகு, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலை செய்துவிட்ட) செய்தியைத் தெரிவித்தார்கள்.
Book : 48
பாடம் : 4 அடைமானம் வைக்கப்பட்ட கால் நடையை வாகனமாகப் பயன் படுத்தலாம்; அதன் பாலைக் கறக்கலாம். இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: வழி தவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகின்ற தீனியின் அளவுக் கேற்ப) சவாரி செய்யலாம். அதற்குப் போடும் தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்) கொள்ளலாம். அடகுப் பிராணியும் அதைப் போன்றதே.
2511. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 48
2512. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.
இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
Book :48
பாடம் : 5 யூதர்கள் முதலானவர்களிடம் அடகு வைத்தல்.
2513. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.
Book : 48
பாடம் : 6 அடகு வைப்பவர், அடகு வாங்குபவர் முதலானோர் கருத்து வேறுபாடு கொண்டால் வாதி ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.
2514. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்' என்று குறிப்பிட்டு பதில் (கடிதம்) எழுதினார்கள்.
Book : 48
2515. & 2516. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்' என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்' என்று கூறினார்கள்.
பிறகு, அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், 'அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கிறவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார்' என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்' என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
Book :48