2517. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார்.
'ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என என்னிடம் அபூ ஹுரைரா(ரலி) கூறினார். உடனே நான், இந்த நபிமொழியை அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றேன். இதைக்கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) பத்தாயிரம் திர்ஹம்களையோ ஆயிரம் தீனாரையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும. (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையே அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள்.
Book :49
பாடம் : 2 எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது.
2518. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், 'எந்த நற்செயல் சிறந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும் போராடுவதுமாகும்' என்று பதிலளித்தார்கள். நான், 'எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)' என்று பதிலளித்தார்கள். நான், 'என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பலவீனருக்கு உதவு; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்' என்று கூறினார்கள். நான், 'இதுவும் என்னால் இயலாவில்லையென்றால்...? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்க செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்' என்று கூறினார்கள்.
Book : 49
பாடம் : 3 சூரிய கிரகணம் உள்ளிட்ட இறைச் சான்றுகள் வெளிப்படும் போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத் தக்கது.
2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள்.
Book : 49
2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம்.
Book :49
பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல்.
2521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால் அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி விலையும் செலுத்தப்பட வேண்டும்;) பின்னர் அவன் விடுதலை செய்யப்பட வேண்டும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 49
2522. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49
2523. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையின் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவர் தன்னிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்து விட வேண்டும். அந்த அடிமைக்கு ஒத்த (மற்றோர் அடிமையின்) விலையை மதிப்பிட்ட பின் (அவனுடைய மற்றப் பங்குகளையும்) விடுதலை செய்யும் அளவிற்கு அவரிடம் செல்வம் இல்லையென்றால் அவர் விடுதலை செய்த அந்த (அவரின் பங்கின்) அளவிற்கு மட்டுமே அவ்வடிமை விடுதலை செய்யப்படுவார்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49
2524. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்தவரிடம் அவ்வடிமையையொத்த மற்றோர் அடிமையின் விலையை எட்டுகிற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்பட வேண்டும்.
மேலும், 'அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால் அவர் விடுதலை செய்த (அந்தப் பங்கின்) அளவிற்கே அந்த அடிமையை விடுதலை செய்தவராவார்' என்று நாஃபிஉ(ரஹ்) கூறினார்' என்று சொல்லிவிட்டு, 'இந்தக் கடைசி வாசகத்தை நாஃபிஉ(ரஹ்) கூறினார்களா அல்லது அது ஹதீஸின ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாது' என்று அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்) சொன்னார்கள்.
Book :49
2525. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான (சொத்தாக இருக்கும்) ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தன்னுடைய பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்யும் விஷயத்தில் இப்னு உமர்(ரலி) மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தார்கள். அத்தீர்ப்பில், '(தன்னுடைய பங்கை) விடுதலை செய்தவர் மீது அவ்வடிமையை ஒத்த (மற்றோர் அடிமையின்) விலை மதிப்பிடப்பட்டு அந்த அளவிற்குச் செல்வம் அவரிடம் இருக்குமாயின் அவ்வடிமையை முழுவதுமாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். (அவரின் மற்ற) கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்கு (களுக்கான விலை)கள் கொடுக்கப்பட்டு விடவேண்டும். விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்' என்று சொல்லி வந்தார்கள்.
இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே இப்னு உமர்(ரலி) அறிவித்து வந்தார்கள்.
Book :49
பாடம் : 5 (பலருக்கும்) கூட்டான ஓர் அடிமையில் தனது பங்கை மட்டும் விடுதலை செய்த ஒருவரிடம் (அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யப் போதுமான) செல்வம் இல்லை யென்றால் விடுதலைப் பத்திரத்தில் எழுதியுள்ளபடி அந்த அடிமை (தன்னை முழுமையாக விடுதலை செய்து கொள்ளத் தேவையான செல்வத்தைச் சம்பாதித்துக் கொள் வதற்காக) உழைக்க அனுமதிக்கப்பட வேண்டும்;அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக் கூடாது.
2526. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையிலிருந்து (தன்னுடைய) பங்கை விடுதலை செய்தவர்.. (தன்னிடம் போதிய) செல்வம் இருக்குமாயின் அந்த அடிமை(யின் மற்ற பங்குகள்) முழுவதையும் விடுதலை செய்யட்டும். இல்லையெனில் அவ்வடிமை, (மீதிப் பங்குகளுக்கான விலையைத் தந்து முழு விடுதலை பெற்றுக் கொள்வதற்காக) உழைத்து(ச் சம்பாதித்து)க் கொள்ள அனுமதிகக்ப்பட வேண்டும். அவன் மீது அதிகச் சிரமத்தை சுமத்தக் கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 49
2527. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் (தனக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறவரிடம் (போதிய) செல்வம் இருக்குமாயின் அவரின் செல்வத்திலிருந்து அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். (அவரிடம் போதிய செல்வம்) இல்லையெனில், அவ்வடிமையின் (நியாயமான விலை மதிப்பிடப்பட்டு மீதிப் பங்குகளின் விலையைத் தருவதற்காக) உழைத்து (சம்பாதித்து)க் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அவனுக்கு அதிகச் சிரமத்தைத் தரக்கூடாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :49
பாடம் : 6 அடிமையை விடுதலை செய்தல், விவாகரத்து செய்தல் போன்றவற்றில் நேரும் தவறும் மறதியும்;மேலும், அல்லாஹ்வின் திருப்திக்காகவே தவிர அடிமையை விடுதலை செய்வது கூடாது என்பதும். ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் எண்ணியதே கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், (ஒன்றை) மறந்து விட்ட வனுக்கும், தவறுதலாகச் செய்து விட்ட வனுக்கும் நிய்யத் (எண்ணம்) என்பதே கிடையாது.3
2528. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உம்மத்தினரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாதவரை அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாதவரை எனக்காக அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 49
2529. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செயல்கள் (அனைத்துமே) எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந்தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாராயின் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அமைந்திருக்கும். அவரின் ஹிஜ்ரத் அவர் அடைந்து கொள்ளும் உலக ஆதாயம் ஒன்றுக்காகவோ, அவர் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணுக்காகவோ இருக்குமானால் அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதுதான் அவருக்குக் கிடைக்கும்.
என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
Book :49
பாடம் : 7 விடுதலை செய்யும் எண்ணத்தில் ஒருவர் தன் அடிமையை இவன் அல்லாஹ்வுக்குரியவன் என்று கூறினால் (அது செல்லும்.) மேலும், அடிமையை விடுதலை செய்ய சாட்சிகளை ஏற்படுத்துதல்.
2530. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி(ஸல) அவர்களிடம்) சென்று கொண்டிருந்த பொழுது என்னுடன் ஓர் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னைப் பிரிந்தும் நான் அவரைப் பிரிந்தும் வழிதவறிச் சென்றுவிட்டோம். அதன் பிறகு, நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்த பொழுது அவ்வடிமை வந்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அபூ ஹுரைராவே! இதோ, உங்கள் அடிமை உங்களிடம் வந்திருக்கிறான் (பாரும்)' என்று கூறினார்கள். நான், '(நபி(ஸல்) அவர்களே!) இந்த அடிமை சுதந்திரமானார் என்பதற்கு நான் தங்களை சாட்சியாக ஆக்குகிறேன்' என்று கூறினேன்.
அறிவிப்பாளர் கைஸ்(ரஹ்) கூறினார்.
அபூ ஹுரைரா(ரலி) மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தபோது அவர் பின்வரும் கவிதையைப் பாடிக் கொண்டே வந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது:
எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும் அது இறைமறுப்பு (ஏக இறைவனை ஏற்க மறுக்கும் கொள்கை) ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது.
Book : 49
2531. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான் (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு) நபி(ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், 'எவ்வளவு நீண்ட களைப்பூட்டுகிற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு ஆட்சி செய்யும் நாட்டிலிருந்து எங்களை விடுதலை செய்துவிட்டது' என்று பாடினேன். வழியில் என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடிவிட்டான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்களிடம் நான் (இஸ்லாத்திற்கான) உறுதிமொழியளித்தேன். நான் நபி(ஸல்) அவர்களிடமே இருந்து கொண்டிருந்தபோது அந்த (என்) அடிமை தென்பட்டான். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபுஹுரைராவே! இதோ உங்கள் அடிமை உங்களிடம் வந்துவிட்டான் (பாருங்கள்)' என்று கூறினார்கள். நான், 'அவன் (இன்று முதல்) சுதந்திரமானவன்; (என்று) அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காக (அறிவிக்கிறேன்)' என்று கூறினேன்; அவ்விதம் (கூறி) அவனை விடுதலை செய்துவிட்டேன்.
அபூ அப்தில்லாஹ் புகாரி(யாகிய நான்) கூறுகிறேன்:
இந்த அறிவிப்பாளர் தொடரிலுள்ள அபூ உஸாமாவிடமிருந்து இதே ஹதீஸை அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளரான அபூ குரைப் அவர்களின் அறிவிப்பில் '(அவன்) சுதந்திரமானவன்' என்னும் சொல் மட்டும் இல்லை.
Book :49
2532. கைஸ் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) (நபி(யவர்களிடம்) இஸ்லாத்தை (ஏற்க) நாடி வந்த பொழுது அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தான். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டார்கள். பிறகு, அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று.... 'நபி(ஸல்) அவர்களே! இவ்வடிமை அல்லாஹ்விற்குரியவன் என்பதற்கு நான் தங்களையே சாட்சியாக்குகிறேன்' என்று கூறினார்கள்.
Book :49
பாடம் : 8 அடிமைப்பெண் உம்முல் வலத்6 தன்னுடைய எஜமானைப் பெற்றெடுப் பதும்.... மறுமை நாளின் அடையாளங் களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.7
2533. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
உத்பா இப்னு அபீ வக்காஸ் தன் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனை, 'அவன் என்னுடைய மகன்' என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், ஸஅத்(ரலி) ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார். ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களையும் தம்முடன் கொண்டு வந்தார். பிறகு ஸஅத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம் இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்' என்று கூறினார்கள். அப்து இப்னு ஸம்ஆ(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இவன் என்னுடைய சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; தன் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருந்த போது) பிறந்தவன்' என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பானவனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) அவர்களை நோக்கி) 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்' என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் என்னும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) இறைத்தூதர் (தம் மனைவி சவ்தா(ரலி) அவர்களை நோக்கி,) 'ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக் கொள்' என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்டதாலேயே நபி(ஸல்) அவர்கள் இப்படிக்கட்டளையிட்டார்கள். சவ்தா(ரலி) நபி(ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.
Book : 49
பாடம் : 9 முதப்பரை-பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமையை விற்பது.9
2534. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
எங்களில் ஒருவர் தன் அடிமை ஒருவனை தன் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்திருந்தார். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை ('இவனை வாங்குபவர் யார்?' என்று) கூவி அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே மரணித்துவிட்டான்.
Book : 49
பாடம் : 10 வலாவை (முன்னாள் அடிமைக்கு வாரிசாகும் உரிமையை) விற்பதும் நன்கொடையாக வழங்குவதும்.
2535. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகும் உரிமையை (அவனுடைய எஜமானர்கள்) விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள்.
Book : 49
2536. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் பரீராவை வாங்கினேன். அப்போது அவரின் எஜமானர்கள் 'அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்கவேண்டும்' என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், 'அவளை விடுதலை செய்து விடு! ஏனெனில், 'வலா' - விலையைக் கொடுப்பவருக்கே (விடுதலை செய்பவருக்கே) உரியதாகும்' என்று கூறினார்கள். நான் அவரை விடுதலை செய்துவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, அவரின் கணவர் விஷயத்தில் (அவருடன் வாழ்வது, அல்லது பிரிந்து விடுவது இரண்டில்) எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கினார்கள். அதற்கு பரீரா, 'அவர் எனக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் அவரிடம் நான் இருக்க மாட்டேன்' என்று கூறி (கணவனைப் பிரிந்து) தனித்து வாழ்வதையே தேர்ந்தெடுத்தார்.
Book :49