பாடம் : 11 ஒருவருடைய சகோதரர், அல்லது தந்தையின் சகோதரர் இணைவைப் பவராக இருக்கும் நிலையில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டால் (அவர் களை விடுதலை செய்வதற்கு) பிணைத் தொகை பெறத் தான் வேண்டுமா? அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், நான் எனக்கும் அகீலுக் கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன் என்று கூறினார்கள். தமது சகோதரர் அகீல் அவர்களிட மிருந்தும் தம் தந்தையின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் பெற்ற போர்ச் செல்வத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் பங்கிருந்தது.12
2537. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம், 'எங்கள் சகோதரி மகன் அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து பிணைத் தொகை பெறாமல் நாங்கள் (அவரை)விட்டு விடுகிறோம்; நீங்கள் எங்களுக்கு அனுமதி கொடுங்கள்' என்று அனுமதி கோரினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், 'அவரிடமிருந்து ஒரு திர்ஹமைக் கூட (வாங்காமல்)விட்டு விடாதீர்கள்' என்று கூறினார்கள்.
Book : 49
பாடம் : 12 இணைவைப்பவர் (தன் அடிமையை) விடுதலை செய்தல்.
2538. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்.
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தருமம் செய்தார்கள். இவ்வாறே, அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது (ஹஜ் செய்த நேரத்தில்) நூறு ஒட்டகங்களை அறுத்து தருமம் (செய்து) நூற அடிமைகளையும் விடுதலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் அறியாமைக் காலத்தில் நன்மையை நாடியவனாக செய்து வந்த (தரும) காரியங்களைக் குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த நற்செயல்க(ளுக்கான பிரதிபலன்)களுடனேயே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர்கள்' என்று கூறினார்கள்.
Book : 49
பாடம் : 13 அரபி அடிமையை உடைமையாக்கிக் கொள்வதும், அந்த அடிமையை அன்பளிப்பாக வழங்குவதும்,விலைக்கு விற்பதும், உடலுறவு கொள்வதும், அவனிடம் பிணைத் தொகை பெறுவதும், அவனுடைய மக்களை அடிமைகளாக்கிக் கொள்வ தும் (அனுமதிக்கப்பட்டது). அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் இவ்வாறு ஓர் உதாரணம் சொல்கின்றான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; அவர் சுயமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லாதவர். மற்றொருவர் இருக்கின்றார். அவருக்கு நாம் நம்மிடத்திலிருந்து நல்ல வாழ்க்கை வசதிகளை வழங்கியிருக்கின்றோம். அவர் அதிலிருந்து மறைமுகமாகவும் வெளிப் படையாகவும் செலவு செய்கின்றார். (கூறுங்கள்:) இவ்விருவரும் சமமாவார் களா? அல்ஹம்து-ல்லாஹ்... எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆனால், (இந் நேரிய விஷயத்தை) அவர்களில் பெரும் பாலோர் அறிந்து கொள்வதில்லை. (16:75)15
2539. & 2540. மர்வான் இப்னி ஹகம் மற்றும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்கள் செல்வங்களையும் முஸ்லிம்களால் (சிறைபிடிக்கப்பட்ட) போர்க்கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் (அக்குழுவினரை) எழுந்து நின்று (வரவேற்று), 'என்னுடன் நீங்கள் பார்க்கிற (மற்ற)வர்களும் இருக்கின்றனர். உண்மையான பேச்சே எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே, செல்வங்கள் அல்லது கைதிகள் இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்தே இருந்தேன்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல், பத்து நாள்களாக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இரண்டில் ஒன்றையே திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்டபோது, 'நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்' என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து (உரையாற்றலானார்கள். அப்போது) 'உங்களுடைய (இந்தச்) சகோதரர்கள் மனம் திருந்தி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களின் (குலத்தினரின்) கைதிகளைத் திருப்பித் தந்து விட விரும்புகிறேன். உங்களில் மனப்பூர்வமாக இதைச் செய்ய (திருப்பித் தந்துவிட) விரும்புகிறவர் செய்யட்டும் (திருப்பித் தந்து விடட்டும்). தம் பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்க வேண்டுமென விரும்புபவர் அல்லாஹ் நமக்கு (அடுத்தடுத்த வெற்றிகளின் வாயிலாகக்) கொடுக்கவிருக்கும் முதலாவது செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை அவ்வாறே செய்யட்டும். (தம்மிடமே கைதிகளை வைத்துக் கொள்ளட்டும்.) (இதைச் செவியுற்றதும்) மக்கள், 'நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (கைதிகளைத்) திருப்பித் தந்து விடுகிறோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சம்மதிப்பவர் யார், சம்மதிக்காதவர் யார் என்று நாம் அறிய மாட்டோம். எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை நம்மிடம் தெரிவிக்கட்டும் (பிறகு பார்த்துக் கொள்வோம்)' என்று கூறினார்கள். எனவே, மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களிடையேயுள்ள தலைவர்கள் அவர்களுடன் (கலந்து) பேசினர். பிறகு, நபி(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, அவர்கள் மனமொப்பி சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுதான் ஹவாஸின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.
அனஸ்(ரலி) கூறினார்.
அப்பாஸ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'நான் எனக்கும் அகீலுக்கும் பிணைத் தொகை கொடுத்து விட்டேன்' என்று கூறினார்கள்.
Book : 49
2541. இப்னு அவ்ன்(ரஹ்) அறிவித்தார்.
நான் நாஃபிஉ(ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினேன்; அவர்கள் எனக்கு (பதில்) கடிதம் எழுதினார்கள். அதில் அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் பனூ முஸ்தலிக் குலத்தார் அசட்டையாக (எச்சரிக்கையின்றி) இருந்தபோது அவர்களின் மீது (திடீர்) தாக்குதல் நடத்தினார்கள்; அப்போது அவர்களின் கால்நடைகள் நீர்நிலை ஒன்றில் தண்ணீர் புகட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்களில் போரிடும் திறன் பெற்றவர்களைக் கொன்றார்கள்; அவர்களின் மக்களை (பெண்கள், பிள்ளை குட்டிகளை) போர்க் கைதிகளாக சிறை பிடித்தார்கள்; அன்றுதான் ஜுவைரிய்யா(ரலி) அவர்களைக் கண்டார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எனக்கு அறிவித்தார்கள். அவர்களும் அந்த (முஸ்லிம்) படையில் இருந்தார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
Book :49
2542. இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார்.
நான் அபூ ஸயீத் குத்ரீ(ரலி) அவர்களைப் பார்த்தபோது அவர்களிடம் (அஸல் செய்வது பற்றி) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் (சிலர்) எங்களுக்குத் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும், (இந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும்போது) 'அஸ்ல்' செய்ய நாங்கள் விரும்பினோம். எனவே, அல்லாஹ்வின் தூதரிடம் அதுபற்றிக் கேட்டோம். அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.
Book :49
2543. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் உம்மத்தினரிலேயே அதிகக் கடுமையுடன் தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்' என்று கூறினார்கள். (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தருமப் பொருள்கள் வந்தபோது இறைத்தூதர், 'இவை எங்கள் இனத்தாரின் தருமப் பொருள்கள்' என்று கூறினார்கள். (ஒரு முறை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் பனூதமீம் குலத்தாரின் பெண் போர்க் கைதி ஒருவர் இருந்தார். நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ இந்தப் பெண்ணை விடுதலை செய்துவிடு. ஏனெனில், இவள் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் ஒருத்தி' என்று கூறினார்கள்.
Book :49
பாடம் : 14 தம் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கமும் கல்வியும் கற்பிப்பவரின் சிறப்பு
2544. 'தன்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்து, அவளுக்கு அவர் கல்வி கற்றுக் கொடுத்து, அவளை நல்ல முறையில் நடத்தி, பிறகு அவளை விடுதலை செய்து திருமணமும் முடித்து வைக்கிறவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book : 49
பாடம் : 15 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடிமைகள் உங்கள் சகோதரர்கள். நீங்கள் உண்ணுவதிலிருந்தே அவர்களுக்கு உண்ணக் கொடுங்கள். அல்லாஹ் கூறுகிறான்: மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக் காதீர்கள். தாய் தந்தையரிடமும், உறவினர்களிடமும், அநாதைகள் மற்றும் வறியவர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும், உறவினரான அண்டை வீட்டார்,அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப் போக்கர் மற்றும் உங்கள் ஆதிக்கத்திலுள்ள அடிமைகள் ஆகியோ ருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக,அல்லாஹ் தற்பெருமை கொண்டு கர்வமாக நடப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)
2545. மஃரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், அபூ தர் கிஃபாரீ(ரலி) ஒரு மேலங்கியை (தம் மீது) அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களைக் கண்டேன். அப்போது அவர்களின் அடிமையும் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அதைப்பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூ தர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்; நான் ஒருவரை (அவரின் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) 'இவரின் தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா?' என்று கேட்டார்கள். பிறகு, 'உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். எனவே, எவரின் ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரர் இருக்கிறாரோ அவர், தன் சகோதரருக்கு, தான் உண்பதிலிருந்து உண்ணத் தரட்டும். தான் உடுத்துவதிலிருந்தே உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்களின் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 49
பாடம்: 16 இறைவனையும் முறையாக வழிபட்டு, எஜமானுக்கும் விசுவாசமாக நடந்து கொள்கிற அடிமையின் சிறப்பு.
2546. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்குவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 49
2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :49
2548. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.
இதை அறிவித்துவிட்டு, அபூ ஹுரைரா(ரலி), 'எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! இறைவழியில் போராடுவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்திருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் மரணிப்பதையே விரும்பியிருப்பேன்.' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
Book :49
2549. 'தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிக்கிறார்.
Book :49
பாடம் : 17 அடிமையைக் கேவலமாகக் கருதுவதும் என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூறுவதும் வெறுப்புக் குரியதாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்.... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை.... (16.75) அவ்வேளை வாயி-ல் அவளுடைய எஜமான் (கணவன்) நிற்பதை இருவரும் கண்டார்கள். (12.25) உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறை நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில்... (4,25) மேலும், நபி (ஸல்) அவர்கள் உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், அல்லாஹ் கூறுகிறான்: உன் எஜமானிடம் (ரப்பிடம்) என்னைப் பற்றி எடுத்துக் கூற வேண்டும் என்று (யூசுஃப் ) கூறினார். (12:42) மேலும் நபி(ஸல்) அவர்கள், உங்கள் தலைவர் யார்? என்று கேட்டார்கள்.20
2550. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தன் எஜமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வணங்கி வருவானாயின் அவனுக்கு இருமுறை நன்மை கிடைக்கும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 49
2551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் இறைவனை நல்லமுறையில் வணங்கி, தன் எஜமானுக்குத் தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங்காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்து) அவனுக்கு கீழ்ப்படிகிற அடிமைக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :49
2552. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் 'உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொண்டு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு' என்று கூற வேண்டாம். 'என் எஜமான்; என் உரிமையாளர்' என்று கூறட்டும்.
'என் அடிமை; என் அடிமைப் பெண்' என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். 'என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்' என்று கூறட்டும்.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :49
2553. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடிமையில் தனக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறவருக்கு அவ்வடிமையின் விலையை எட்டுகிற அளவுக்குச் செல்வமிருந்தால் அவனையொத்த அடிமையின் விலை மதிப்பிடப்பட்டு, தன் செல்வத்திலிருந்து அதைச் செலுத்தி அவனை முழுமையாக விடுவித்து விடவேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமைய விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் சுதந்திரவான் ஆவான்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49
2554. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :49
2555. & 2556. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குக் கசையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காகவாவது விற்று விடுங்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :49