பாடம்: 5 முகாத்தப், என்னை வாங்கி விடுதலை செய்து விடு என்று கூற, அவ்வாறே அவனை ஒருவர் வாங்கினால் (செல்லும்).
2565. அபூ அய்மன்(ரஹ்)அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் உத்பா பின் அபீலஹபுக்கு அடிமையாக இருந்தேன். அவர் இறந்து விட்டார். பிறகு, அவரது மக்கள் எனக்கு எஜமானர்கள் ஆனார்கள். மேலும், அபூ அம்ருடைய மகனுக்கு என்னை அவர்கள் விற்றார்கள். அப்போது உத்பாவின் மக்கள், எனது வாரிசுரிமை தமக்கே கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள் என்று கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். பரீரா, என்னிடம் (தனக்கு) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையில் வந்திருந்தார். என்னை வாங்கி விடுதலை செய்து விடுங்கள் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். நான், சரி என்று சொன்னேன். அதற்கு அவர், எஜமானர்கள் தங்களுக்கே (எனது) வாரிசுரிமை வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல் என்னை விற்க மாட்டார்கள் என்று கூறினார். அதற்கு நான், அப்படியென்றால் எனக்கு அது (உன்னை வாங்கி விடுதலை செய்வது) தேவையற்றது என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கேள்விப்பட்டார்கள். அல்லது இந்தச் செய்தி அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இது பற்றிக் கேட்க, நான் பரீரா என்னிடம் கூறியதைச் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவளை வாங்கி விடுதலை செய்து விடு. அவளது எஜமானர்கள் தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும் (அது செல்லப் போவதில்லை) என்று கூறினார்கள். ஆகவே, நான் பரீராவை வாங்கி விடுதலை செய்து விட்டேன். (அப்போதும்) அவரது எஜமானர்கள் (அவரது) வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்தார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும், அவர்கள் (அடிமையின் எஜமானர்கள்) நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே என்று கூறினார்கள்.
Book : 50
பாடம் : 1
2566. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
Book : 50
2567. உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்; என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று) தண்ணீர் தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயனபடுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள். என்று கூறினார்கள்.
Book :50
பாடம் : 2 சிறிய அன்பளிப்பு.
2568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
Book : 50
பாடம் : 3 நண்பர்களிடம் அன்பளிப்பு கேட்பது. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது: உங்களுடன் எனக்கு ஒரு பங்கை ஒதுக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4
2569. அபூ சயித் அல்குத்ரீ(ரலி) கூறியதாவது: தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவனை வைத்திருந்த முஹாஜிர் பெண் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி மிம்பருக்கு (மேடைக்கு)த் தேவையான மரச்சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு என்று கூறினார்கள். அவ்வாறே, அப்பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, (இறகு போன்ற இலைகளை உடைய) தர்ஃபா எனும் ஒரு வகை மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பர் ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பரை அவர் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்.
Book : 50
2570. அபூ கத்தாத(ரலி) கூறியதாவது: நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் அணியாமல் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை. எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே, நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக் கொள்ள) நான் மறந்து விட்டேன். ஆகவே, அவர்களிடம், எனக்கு சாட்டையையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இஹ்ராம் அணிந்திருந்ததால்), இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவ மாட்டோம் என்று கூறினர். எனவே, நான் கோபமுற்றேன். உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தினேன் பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன் மீது பாய்ந்து உண்ணலானார்கள். பிறகு, தாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அதை உண்ட(து கூடுமா கூடாதா என்னும் விஷயத்)தில் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து (எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதரை அடைந்ததும், அவர்களிடம் அது (காட்டுக் கழுதையை நான் வேட்டையாட, இஹ்ராம் அணிந்திருந்தவர்கள் அதை உண்டது) பற்றிக் கேட்டோம். அவர்கள், அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங் காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அது உண்டு முடித்தார்கள்.
Book :50
பாடம் : 4 நீர் புகட்டும்படி கேட்பது. சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், எனக்குத் தண்ணீர் புகட்டு என்று கூறினார்கள்.
2571. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காக கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராம வாசியும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் பாலை குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராம வாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்தில் இருப்பவர்களே முன்னுரிமை உடையவர்கள். ஆகவே, வலப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், அது நபிவழியாகும். அது நபிவழியாகும். என்று மும்முறை கூறினார்கள் என்று இதை அவர்களிடம் இருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் கூறுகிறார்கள்.
Book : 50
பாடம் : 5 வேட்டைப் பிராணியை அன்பளிப்புச் செய்தால் ஏற்றுக் கொள்ளுதல். நபி (ஸல்) அவர்கள், அபூ கத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து வேட்டைப் பிராணியின் புஜத்தை (அன்பளிப்பாக) ஏற்றுக் கொண்டார்கள்.
2572. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார்கள். நான் அதைப் பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது - தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று ஓர் அறிவிப்பாளர் கேட்க, மற்றோர் அறிவிப்பாளர், (ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் என்று கூறிவிட்டு, அதன் பிறகு, அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறினார்.
Book : 50
பாடம் : 6 அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
2573. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் அப்வா என்னுமிடத்தில் - அல்லது வத்தான்- என்னும் இடத்தில் - இருந்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். என் முகத்தில் (தோன்றிய) கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதனால் தான் உன்னிடம் அதைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்.
Book : 50
பாடம் : 7 அன்பளிப்பை (ஹதியாவை) ஏற்றுக் கொள்ளுதல்.
2574. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள், நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, தமது அன்பளிப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்து (வழங்கி) வந்தார்கள். அதைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் திருப்தியைப் பெற விரும்பியே அவர்கள் இப்படிச் செய்து வந்தார்கள்.
Book : 50
2575. இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணையையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும். வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.
Book :50
2576. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தம் கையை தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்.
Book :50
2577. அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டு வரப்பட்டது. இது பரீரா (ரலி) அவர்களுக்கு தர்மமாகக் கிடைத்தது என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகும் என்று கூறினார்கள்.
Book :50
2578. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவர்கள் (அவருடைய எஜமானர்கள்) அவருடைய வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும். (என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே அவரை விற்போம்) என்று நிபந்தனையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தருமமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகும். என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரை பிரிந்து விடுவது அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது என்னும் இரு விஷயங்களில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திரமானவரா? அடிமையா? என்று கேட்டார்கள். நான் அப்துர் ரஹ்மானிடம் பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். அவர் சுதந்திரமானவரா, அடிமையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார் என்பதாக மற்றோர் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்கள்.
Book :50
2579. உம்மு அதிய்யாரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, உங்களிடம் உண்பதற்கு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் உம்மு அதிய்யாவுக்கு தருமமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தனது இடத்தை அடைந்து விட்டது என்று கூறினார்கள்.
Book :50
பாடம் : 8 ஒருவர் தன் தோழருக்கு அன்பளிப்பு வழங்குவதும், அத் தோழர் தன் மனைவிமார்களில் குறிப்பிட்ட ஒருவருடைய வீட்டில் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து அன்ப ளிப்பு வழங்குவதும், வேறு மனைவி மார்களின் வீட்டில் இருக்கும் போது அன்பளிப்பு வழங்காமலிருப்பதும்.
2580. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்து வந்தார்கள். உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்„ என் தோழிகள் (நபி (ஸல்) அவர்களின் பிற மனைவிமார்கள் எனது வீட்டில்) ஒன்று கூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக்கையைச்)- சொன்னேன். அவர்கள் அதை (கண்டு கொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.
Book : 50
2581. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார். ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலாமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு ஸலாமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர். அவ்வாறே உம்மு சலாமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள். அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா வின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷா வின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள். உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள். பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் என்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா(ரலி)வின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக் ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள்.
Book :50
பாடம் : 9 நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு.
2582. அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரி (ரஹ்) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றோம் என்று கூறினார்கள்.
Book : 50
பாடம் : 10 தற்போது கைவசம் இல்லாத அன்பளிப்பை (வழங்குவதாக வாக் களிப்பது) செல்லும் என்று கருதுவது.
2583. & 2584. மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்களும் மர்வான்(ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றோம் என்று கூறினார்கள்.
Book : 50