பாடம் : 1 வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர் ஒருவர் அதை நீதியுடன் எழுதட்டும். எழுதத் தெரிந்தவர், அல்லாஹ் அவருக்குக் கற்றுத் தந்ததைப் போன்று (பிறருக்காக அவரும்) எழுதித் தரட்டும். அவர் எழுதித் தர மறுக்க வேண்டாம். எவர் மீது (கடன் சுமையைத் தீர்க்கும்) பொறுப்புள்ளதோ அவர் (எழுதுவதற்காக) வாசகம் சொல்லித் தரட்டும். (அந்த நேரத்தில்) தன் அதிபதிக்கு அவர் அஞ்சட்டும். மேலும், கடன் விஷயமாகத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் மறைக்க வேண்டாம். (உள்ளதை உள்ளபடி சொல்லட்டும்.) கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் பேதையாகவோ (மூளை வளர்ச்சி குன்றியவராகவோ) பலவீனராகவோ,வாசகம் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது காப்பாளர் நீதியுடன் (வாசகம்) சொல்லட்டும். மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சி களாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவதற்காக. இவர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகளாய் இருக்க வேண்டும். சாட்சிகள் (சாட்சிய மளிப்பதற்காக) அழைக்கப்படும் போது (வர) மறுக்கக் கூடாது. (கடன் தொகை) சிறிதாயினும் பெரிதாயினும் அதை எழுதி வைத்துக் கொள்வதில் கவனக் குறைவாக இருந்து விடாதீர்கள். இதுவே, அல்லாஹ் விடத்தில் நீதிமிக்க வழிமுறையாகும். மேலும், சாட்சியத்தை நிலைநாட்டக் கூடியதும் நீங்கள் சந்தேகம் கொள்ளாமலிருக்கப் பொருத்தமானதும் ஆகும். ஆனால், அது உங்களுக்கிடையே நீங்கள் (வழக்கமாக) செய்து கொள்கின்ற உடனடி கொடுக்கல் வாங்கலாக இருக்குமாயின், அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் இருப்பதில் உங்கள் மீது குற்றமேதும் இல்லை. எனினும், வியாபார ஒப்பந்தங்கள் செய்து கொண்டால் அவற்றிற்கு சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும் சாட்சிகளும் துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால் அது நீங்கள் செய்யும் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்குச் சரியான வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்து விஷயங் களையும் நன்கறிந்தவன் ஆவான். (2:282) மேலும், அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவர்களாக வும் அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர் களாகவும் திகழுங்கள். (நீங்கள் செலுத்து கின்ற நீதியும் சொல்லும் சாட்சியமும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே. (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் வசதியுடையவராகவோ ஏழையாகவோ இருப்பினும் சரியே. அல்லாஹ் அவர்களை (உங்களை விட) அதிகமாகப் பாதுகாப்பவனாக இருக்கிறான். எனவே, நீதி செலுத்தத் தவறி இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். நீங்கள் நீதிக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ (நீதியைக் காப்பாற்ற மனமின்றி) சாட்சியமளிக்காமல் விலகிக் கொண் டாலோ நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்துள்ளான். (4:135) பாடம் : 2 ஒருவரை நல்லவர் என்று அறிவிப் பதற்காக (அவரைப் பற்றி) நான் நல்ல தையே அறிந்துள்ளேன் என்று ஒருவர் சொன்னால்... ...அது (சாட்சியாக) ஏற்கப்படும் என்று கூறியவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான அவதூறு குறித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்கள். அதில், நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம், ஆயிஷா மீது கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டின் காரணத்தால், அவரை (விவாகரத்து செய்து) பிரிந்து விடலாமா என்று ஆலோசனை கேட்ட போது, அவர்கள் தங்கள் மனைவி. அவர்களைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் அறிய மாட்டோம் என்று உஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2637. இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 'அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ(ரலி) அவர்களையும், உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக நின்று போய், வரத்) தாமதமாகிக் கொண்டிருந்தது. உஸாமா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம்' என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே)விட்டுவிட்டு உறங்கி விடுகிற இளவயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்களின் மீது குறைசொல்லக் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை' என்று கூறினார்கள். (அதன்பின்னர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்துவிட்ட ஒரு மனிதனை தன் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்' என்றார்கள்.
Book : 52
பாடம் : 3 மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம். இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், (கண்ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சி சொல்லலாம். (அதுவும் ஏற்கப் படக் கூடியதே. சாட்சி சொல்பவர் வாக்குமூலம் தந்தவரை அவர் வாக்கு மூலம் தரும் போது கண்ணால் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை) என்று கூறினர். ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டு விட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், என்னை (சாட்சியாக அழைத்து வந்தவர்கள்) எதையும் பார்க்கச் செய்யவில்லை. நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன் என்று கூற வேண்டும். (அப்படிக் கூறினால் அது செல்லும்) என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2638. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து (அவனுடைய சொற்களைக்) கேட்க உபாயம் செய்தவர்களாய், பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்து நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் (குறிகாரர்கள் முணு முணுப்பதைப் போல்) எதையோ முணு முணுத்தபடி படுத்துக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்துவிட்டாள். அவள் தன் மகனை நோக்கி, 'ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)' என்று கூறிவிட்டாள். உடனே, இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்)விட்டுவிட்டிருந்தால் (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்தி விட்டிருப்பான்' என்று கூறினார்கள்.
Book : 52
2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், 'அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?' என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.
Book :52
பாடம் : 4 ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முத-ல்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும். இது (எப்படியென்றால்) பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கஅபாவினுள் தொழுதார்கள் என்று செய்தியறிவிக்க, ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை என்று கூறிய போது, பிலால் (ரலி) அவர்களின் சாட்சி யத்தையே மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போன்றதாகும் என்று ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறே, இன்னாருக்கு இன்னாரி டமிருந்து ஆயிரம் திர்ஹங்கள் (கடன் தொகை) வரவேண்டியள்ளதுஎன்று இருவர் சாட்சியமளித்து, வேறு இருவர், இரண்டாயிரம் திர்ஹம்கள் வர வேண்டியுள்ளது என்று சாட்சியம் அளித்தால் (இரு தொகைகளில்) அதிகமான தொகை எதுவோ அதைச் செலுத்தும்படியே தீர்ப்பு வழங்கப்படும்.
2640. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நான் அபூ இஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, 'உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்' என்று கூறினாள். நான், 'நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணந்தபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே' என்று கூறிவிட்டு, அபூ இஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மை தானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், 'எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை' என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித் தாயிடம் பால்குடித்தாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?' என்று கூறினார்கள். எனவே; நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்தாள்.
Book : 52
பாடம் : 5 நேர்மையான சாட்சிகள் அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள் ளுங்கள். (65:2) இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282)
2641. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைத் கொண்டே. எனவே, தம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகிறவரை நம்பிக்கைக்குரியவராக்கி கெரளவித்துக் கொள்வோம். அவரின் இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரின் அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; தம் அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.
Book : 52
பாடம் : 6 ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்?
2642. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்' என்று கூறினார்கள்.
Book : 52
2643. அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.
மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்று கூறினார்கள். பிறகு, மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்று கூறினார்கள். நான், 'விசுவாசிகளின் தலைவரே! என்ன உறுதியாகிவிட்டது?' என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், 'அவர் நல்லவர்' என்று சாட்சி சொல்கிறார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்' என்று கூறினார்கள். நாங்கள், 'மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்)' என்று கூறினார்கள். நாங்கள், 'இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா?' என்று கேட்டோம். அவர்கள், 'ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே' என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி ('ஒருவர் சாட்சி சொன்னாலுமா?' என்று) கேட்கவில்லை.
Book :52
பாடம் : 7 இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்கு முன் நடந்த மரணம் ஆகிய வற்றை நிரூபிக்க சாட்சியம் அளித்தல். நபி (ஸல்) அவர்கள், எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள் என்று கூறியதும் (செவி-த் தாயிடம்) பால் குடித்ததை சாட்சிகள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதும்.
2644. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் நுழைவதற்கு 'அஃப்லஹ்'(ரலி) அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்க அனுமதி தரவில்லை. அவர்கள், 'நன் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க் கொள்கிறாயா?' என்று கேட்டார்கள். நான், 'அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?' என்று கேட்டேன். அதற்கவர், 'என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்' என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு' என்று கூறினார்கள்.
Book : 52
2645. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்' என்று கூறினார்கள்.
Book :52
2646. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்' என்று கூறினார்கள்.
Book :52
2647. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என்னிடம் ஒருவர் அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். 'ஆயிஷாவே! இவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், 'என் பால் குடிச் சகோதரர்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பால்குடிப்பதென்பதே பசியினால் தான்' என்று கூறினார்கள்.
Book :52
பாடம் : 8 (விபசாரம் புரிந்ததாக ஒருவர் மீது) அவதூறு கூறியவன், திருடன் மற்றும் விபசாரியின் சாட்சியம். அல்லாஹ் கூறுகிறான்: கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லி விட்டுப் பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவ மன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக் கொண்ட வர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். (24:4,5) முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் விபசாரம் புரிந்ததாக, அவர் மீது அவதூறு கூறியதற்காக அபூபக்ரா (ரலி), ஷிப்ல் பின் மஅபத் (ரலி), நாஃபிஉ பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோருக்கு உமர் (ரலி) அவர்கள் கசையடி கொடுத்தார்கள். பிறகு, அவர்களிடம் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரும்படி கேட்டார்கள். மேலும், எவர் பாவ மன்னிப்புக் கோரி திருந்திவிடுகின்றாரோ அவரது சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.5 அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), தாவூஸ் பின் கைஸான் அல் யமானீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்), ஷஅபீ (ரஹ்), இக்ரிமா (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்),முஹாரிப் பின் திஸார் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்), முஆவியா பின் குர்ரா (ரஹ்) ஆகியோர், ஒருவர் விபசாரம் செய்ததாக அவதூறு கற்பித்து, அதற்காகக் கசையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வது செல்லும் என்று கூறியுள்ளனர். அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தன் சொல்லைத் திரும்பப் பெற்று, பாவ மன்னிப்புக் கோரி விட்டால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), கதாதா (ரஹ்) ஆகிய இருவரும், அவதூறு கற்பித்தவன், தான் பொய் சொல்லி விட்டதாகக் கூறி விட்டால் கசையடி கொடுக்கப்படுவான்; அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர். ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக) கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டால் அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்புகள் செல்லும் என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். சிலர் அவதூறு கூறியவனின் சாட்சியம் அவன் பாவமன்னிப்புக் கோரி விட்டாலும் கூட ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறிவிட்டு, பிறகு, திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லா மல் செல்லுபடியாகாது. (அவதூறு பேசி) கசையடி கொடுக்கப்பட்டவர்கள் இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மணமுடித்துக் கொண்டால் அந்தத் திருமணம் செல்லுபடியாகும். இரண்டு அடிமைகளின் சாட்சியத்தைக் கொண்டு மணமுடித்துக் கொண்டால் அந்தத் திருமணம் செல்லாது என்று கூறினார்கள். கசையடி கொடுக்கப்பட்டவன், அடிமை மற்றும் அடிமைப் பெண் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாக சாட்சியம் அறிவித்தால் அது செல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அவதூறு கற்பித்தவன் பாவ மன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது?6 நபி (ஸல்) அவர்களோ விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் மாலிக் (ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களுடன் பேசக் கூடாது என்று (மக்களைத்) தடை செய்தார்கள்;ஐம்பது நாட்கள் கழியும் வரை இவ்வாறு தடை செய்துவைத்திருந்தார்கள்.7
2648. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
மக்காவை வெற்றி கொண்ட போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின் கை துண்டிக்கப்பட்டது.
(அவரைப் பற்றி) 'அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்தாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை (அறிந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
Book : 52
2649. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.
திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
Book :52
பாடம் : 9 அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக் கூடாது.
2650. நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக்காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனதில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், 'நீ நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்காவரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, 'இவனுடைய தாயாரான (அம்ர்) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?' என்று கேட்டார்கள். என் தந்தை, 'ஆம் (உண்டு)' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்' என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
இன்னோர் அறிவிப்பில், 'நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.
Book : 52
2651. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.
-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), 'இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறுகிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார்(வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
Book :52
2652. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
இப்ராஹீம் நகயீ(ரஹ்), '(சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித் தோழர்கள்), 'அஷ்ஹது பில்லாஹ்' அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன்' என்றோ, 'அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி' என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள்' என்று கூறினார்.
Book :52
பாடம் : 10 பொய்சாட்சியம் அளிப்பது தடை செய்யப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள். (25:72) சாட்சியத்தை மறைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: மேலும், சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். சாட்சியத்தை மறைப்பவரின் இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கிறான். (2:283)
2653. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)' என்று கூறினார்கள்.
Book : 52
2654. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
Book :52
பாடம் : 11 கண் பார்வையற்றவரின் சாட்சியம், அவரது நடவடிக்கை, அவரது திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்து வைத்தல், விற்றல் - வாங்கல், பாங்கு சொல்வது முதலானவற்றில் அவரை ஏற்றல் ஆகியன பற்றியும், குரல்களைக் கொண்டு மட்டுமே அறியப்பட்டதை சாட்சியாக ஏற்பது பற்றியும். காசிம் (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்), இப்னு சீரின் (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), அதாஉ (ரஹ்) ஆகியோர்,குருடரின் சாட்சியம் செல்லும் என்று கூறுகிறார்கள். குருடர் புத்திக் கூர்மையுடையவராக இருந்தால் அவரது சாட்சியம் செல்லும் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எத்தனையோ விஷயங்களில் (குருடருக்கு) சலுகை அளிக்கப்படும் என்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (கண் பார்வையற்ற முதியவராக இருக்கும் போது) ஒரு சாட்சியம் அளித்தால் அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா? என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓர் ஆளை அனுப்பி (செய்தியறிந்து) சூரியன் மறைந்து விட்டிருந்தால் நோன்பை நிறைவு செய்து கொள்வார்கள்; அதிகாலை நேரம் பற்றிக் கேட்பார்கள்; அது உதயமாகி விட்டது என்று கூறப்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்வார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மைமூனா (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் என் குரலைப் புரிந்து கொண்டு, சுலைமானே! உள்ளே செல். ஏனெனில், நீ கடன் ஏதும் பாக்கி வைக்காத (முகாத்த பான) அடிமையாவாய் என்று கூறினார்கள் என சுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். முகத்திரை அணிந்த பெண்ணின் சாட்சியம் செல்லும் என்று சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
2655. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்' என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)' என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்' என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 52
2656. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பிலால்(ரலி) இரவில் பாங்கு சொல்வார்கள். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (ஸஹருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண்பார்வையற்றவராக இருந்தார்கள். மக்கள் 'காலை நேரம் வந்துவிட்டது' என்று அவரிடம் கூறும் வரை அவர் பாங்கு சொல்லமாட்டார்.
Book :52