பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந்தங்கள் முதலான சட்டங்களிலும் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள்.
2711. & 2712. மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:
சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், 'எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் - அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி - அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் (முழுமையாக) அவரை ஒப்படைத்து விட வேண்டும்' என்பதும் ஒன்றா இருந்தது. இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல்(ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி(ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி(ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், 'விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) யோசித்துப் பாருங்கள். அவர்களின் இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர்' (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.
Book : 54
2713. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (திருக்குர்ஆன் 60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள்.
இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் ஏற்றுக் கொள்கிறவரிடம், 'நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள். இப்படி, அப்பெண்ணிடம் பேசத் தான் செய்வார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம் விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை. பெண்களிடம் அவர்கள் வாய்ச் சொல் வழியாகவே தவிர விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
Book :54
2714. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
நான் அல்லாஹ்வின் தூதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.
Book :54
2715. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.
'தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; 'ஸகாத்' கொடுக்க வேண்டும்; எல்லா முஸ்லிம்களுக்கும் நலம் நாட வேண்டும்' என்ற நிபந்தனைகளை ஏற்று அல்லாஹ்வின் தூதரிடம் நான் விசுவாசப் பிரமாணம் செய்தேன்.
Book :54
பாடம் : 2 மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சந் தோப்பை ஒருவர் விற்றால்....
2716. 'மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட ஒரு பேரீச்சந் தோப்பை வாங்கியவர் (விளைச்சல் எனக்கே உரியது என்ற) நிபந்தனையிடாதிருந்தால், விற்கிறவருக்கே அதனுடைய விளைச்சல் உரியதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 54
பாடம் : 3 வியாபாரங்களில் விதிக்கப்படும் நிபந்தனைகள்.
2717. (அடிமைப் பெண்ணான) பரீரா, தன்னுடைய விடுதலைப் பத்திரத்தின் விஷயத்தில் (அதில் குறிப்பிட்டுள்ள தொகையைக் கொடுப்பதற்காக) உதவி கேட்டு என்னிடம் வந்தார். அதுவரை தன் விடுதலைப் பத்திரத்தில் எழுதப்பட்டிருந்த தொகையில் சிறிதையும் அவர் செலுத்தியிருக்கவில்லை. எனவே, நான் அவரிடம், 'நீ உன் எஜமானார்களிடம் திரும்பிச் சென்று 'உன்னுடைய விடுதலைப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தொகையை உன் சார்பாக நான் செலுத்தி விடுவதையும் உன் வாரிசுரிமை எனக்கே உரியதாய் ஆகி விடுவதையும் அவர்கள் விரும்பினால் நான் அவ்வாறே செய்கிறேன்' என்று சொல்' எனக் கூறினேன். பரீராவும் இதை அவர்களிடம் சொல்ல அவர்கள் அதை (ஏற்க) மறுத்துவிட்டனர். மேலும், 'ஆயிஷா, மறுத்துவிட்டனர். மேலும், 'ஆயிஷா உன்னை விடுதலை செய்வதின் வாயிலாக (அல்லாஹ்விடம்) நன்மையை நாடியிருந்தால் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உன்னுடைய வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்' என்று கூறிவிட்டனர். அதை ஆயிஷா(ரலி) அல்லாஹ்வின் தூதரிடம் சொல்ல அவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நீ (பரீராவை) வாங்கி விடுதலை செய்து விடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்' என்று கூறினார்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 54
பாடம் : 4 வாகனத்தை விற்பவர் அதில் குறிப்பிட்ட தூரம் வரை சவாரி செய்து கொள்ள அனுமதி கேட்டு நிபந்தனையிட்டால் அது செல்லும்.
2718. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
(ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்துவிட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'இதை எனக்கு ஓர் ஊக்கியாவுக்கு நீங்கள் விற்று விடுங்கள்' என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை அதில் நான் சவாரி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் இட்டுவிட்டு அதை அவர்களுக்கு நான் விற்றுவிட்டேன். (அவர்களும் என் நிபந்தனையை ஒப்புக் கொண்டார்கள்.) நாங்கள் (மதீனாவுக்கு) வந்து சேர்ந்தபோது அந்த ஒட்டகத்தை நபி(ஸல்) அவர்களிடம் (ஒப்படைக்கக்) கொண்டு சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் செல்ல, எனக்குப் பின்னாலேயே நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பி (என்னை மீண்டும் வரவழைத்து), 'உன் உட்டகத்தை நான் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உன்னுடைய அந்த ஒட்டகத்தை நீயே எடுத்துக் கொள். அது உன்னுடைய செல்வம்' என்று கூறினார்கள்.
ஜாபிர்(ரலி) 'தாம் அதன் முதுகில் மதீனா வரை சவாரி செய்துவர அனுமதிக்க வேண்டும்' என்று நிபந்தனையிட்டதையும், நபி(ஸல்) அவர்கள் அதை அனுமதித்ததையும், எவ்வளவு தொகைக்கு நபி(ஸல்) அதை வாங்கினார்கள் என்பதையும் குறிப்பிட்டு சிற்சில வார்த்தை வேறுபாடுகளுடன் பல அறிவிப்புகள் வந்திருப்பதை இமாம் புகாரி(ரஹ்) இங்கு பதிவு செய்துள்ளார்கள்.
Book : 54
பாடம் : 5 கொடுக்கல் வாங்க-ல் விதிக்கப்படும் நிபந்தனைகள்.
2719. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களிடம், '(எங்கள்) பேரீச்ச மரங்களை எங்களுக்கும் எங்கள் (முஹாஜிர்) சகோதரர்களுக்குமிடையே பங்கிட்டு விடுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'வேண்டாம்' என்று கூறவே, அன்சாரிகள், 'நீங்கள் எங்களுக்கு பதிலாக (எங்கள் நிலத்தில்) உழையுங்கள்; நாங்கள் விளைச்சலை உங்களுடன் பங்கிட்டுக் கொள்கிறோம்' என்று முஹாஜிர்களை 'செவியேற்றோம்; கட்டுப்பட்டோம் (உங்கள் நிபந்தனையை (முஹாஜிர்களிடம்) கூறினார்கள். ஏற்றுக் கொண்டோம்)' என்றார்கள்.
Book : 54
2720. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரதேசத்து நிலங்களை (அங்கிருந்த) யூதர்களுக்க, 'அதில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும்' என்றும், 'அதிலிருந்து வரும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது' என்றும் நிபந்தனையிட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
Book :54
பாடம் : 6 திருமண ஒப்பந்தத்தின் போது மஹ்ரை நிர்ணயிப்பதில் விதிக்கப்படும் நிபந்தனைகள். நிபந்தனைகள் விதிக்கப்படும் போது உரிமைகள் துண்டிக்கப்படுகின்றன. நீ எதை நிபந்தனையிட்டாயோ அது உனக்குண்டு என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7 மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது மருமகன் ஒருவரை (அபுல்ஆஸ் (ரலி) அவர்களை) நினைவு கூர்ந்து, ( அவரது மாமனாரான) தன்(னுடன் அவர் வைத்திருந்த) உறவு முறையில் நல்லவிதமாக நடந்து கொண்டதாக மிகவும் புகழ்ந்துரைத்தார்கள். அவர் என்னிடம் பேசிய போது உண்மையே பேசினார். எனக்கு வாக்களித்த போது, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று கூறினார்கள்.8
2721. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் தரும் 'மஹ்ர்' தான்.
என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
Book : 54
பாடம் : 7 நிலக் குத்தகையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2722. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளிலேயே வயல்கள் அதிகம் உடையவர்களாக நாங்கள் இருந்தோம். எனவே, விளைநிலங்களை நாங்கள் குத்தகைக்குவிட்டு வந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. எனவே, அவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்பட்டோம். (வெள்ளிக் காசுகளான) திர்ஹம்களுக்குப் பகரமாக குத்தகைக்கு விடவேண்டாம் என்று நாங்கள் தடுக்கப்படவில்லை.
Book : 54
பாடம் : 8 திருமணத்தில் விதிக்கப்படக் கூடாத நிபந்தனைகள்.
2723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம், வாங்கும் எண்ணமின்றி விலையை ஏற்றி விடுவதற்காக அதிக விலைக்கு கேட்க வேண்டாம். (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது.) தன் சகோதரர் (ஒருவர்) வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தான் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம். தன் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். ஒரு பெண், தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்வதற்காக தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்து விடுமாறு (தன் கணவனிடம்) கேட்க வேண்டாம்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 54
பாடம் : 9 குற்றவியல் தண்டனைகளில் விதிக்கப் படக் கூடாத நிபந்தனைகள்.
2724. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். 'என்னை(ப் பேச) அனுமதியுங்கள்' என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், 'சொல்' என்று கூறினார்கள. அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்' என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்' (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
Book : 54
பாடம் : 10 தன்னை விடுதலை செய்வதற்காகத் தன்னை விற்பதற்குச் சம்மதிக்கின்ற முகாத்தப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) தொடர்பான நிபந்தனைகளில் செல்லத் தக்கவை.
2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார். 'என்னை(ப் பேச) அனுமதியுங்கள்' என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், 'சொல்' என்று கூறினார்கள. அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்' என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்' (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.
Book : 54
2726. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! என் எஜமானார்கள் என்னை விற்கப் போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்யுங்கள்' என்று கூறினார். நான், 'சரி (அப்படியே செய்வோம்)' என்று கூறினேன். அவர், 'என் எஜமானர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடாமல் என்னை விற்க மாட்டார்கள்' என்றார். அதற்கு நான், 'அப்படியென்றால் உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை' என்று கூறினேன். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற போது... அல்லது இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது... அவர்கள், 'பரீராவின் விஷயம் என்ன?' என்று கேட்டுவிட்டு, 'அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும். நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு' என்று கூறினார்கள். எனவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்து விட்டேன். அவரின் எஜமானார்கள், 'அவரின் வாரிசுரிமை எங்களுக்கே உரியது' என்று நிபந்தனை விதித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(அடிமையை) விடுதலை செய்பவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே' என்று கூறினார்கள்.
Book :54
பாடம் : 11 விவாகரத்தில் விதிக்கப்படும் நிபந் தனைகள். சயீத் பின் முஸய்யப் (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்), அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) ஆகியோர், (ஓருவன் தன் மனைவியிடம் நீ தலாக்; இப்படிச் செய்வாயானால் என்று) தலாக் என்னும் சொல்லை முந்திச் சொன்னாலும், அல்லது (இப்படிச் செய்வாயானால் நீ தலாக் என்று) அதைப் பிந்திச் சொன்னாலும், அவன் விதித்த நிபந்த னைக்கு அவன் உரியவனாவான் என்று கூறுகின்றனர்.11
2727. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(சந்தைக்கு வருவதற்கு முன்பு மொத்த) வியாபாரிகளை வழியில் எதிர் கொண்டு சரக்குகளை வாங்குவதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். உள்ளூர்வாசி கிராமவாசிக்காக வாங்கித் தருவதையும், ஒரு பெண் தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் செய்துவிடும்படி நிபந்தனையிடுவதையும், தன் சகோதரன் விலை பேசும் அதே பொருளை, தானும் விலை பேசுவதையும், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளுக்கு) அதிக விலை கேட்டு, (வேண்டுமென்றே) விலை ஏற்றி விடுவதையும், (ஆடு மாடுகளின்) மடியை கனக்கச் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
முஆத்(ரஹ்) அவர்களும் அப்துஸ்ஸமத்(ரஹ்) அவர்களும் ஷுஅபா(ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறே அறிவித்தார்கள்.
Book : 54
பாடம் : 12 மக்களிடம் விதிக்கப்படும் வாய்மொழி நிபந்தனைகள்.
2728. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
உபை இப்னு கஅப்(ரலி), 'மூஸா, அல்லாஹ்வின் தூதரவார்.'.. என்று தொடங்கி, நபி(ஸல்) அவர்கள் (மூஸா (அலை) தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் கூறத் தொடங்கினார்கள்: களிரு(அலை) அவர்கள், 'உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?' என்று (மூஸா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் களிரு (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சேபித்து) முதல் முறையாகக் கேட்டபது மறதியால் கேட்டதாகவும், நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகவும், மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகவும் இருந்தது.
(இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:)
'நான் மறந்து போனதற்காக என்னைத் (திரும்பிப் போகச் சொல்லித் தண்டித்து விடாதீர்கள்.) என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
'பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிறு) அவனைக் கொன்றுவிட்டார்.
'மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அங்கே அவர்கள் இருவரும் கீழே விழ இருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அவர் (களிரு), அதைச் செப்பனிட்டு நிறுத்திவைத்தார்கள்.'..
(பார்க்க: திருக்கர்ஆன் 18ஆம் அத்தியாயம்; 66-82 வசனங்கள்.)
'வகனா வராஅஹும் மலிக்குன்' என்னும் வசனத்தை 'வகான அமாமஹும் மலிக்குன்' என்று (இன்னோர் ஓதல் முறைப்படி) இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியுள்ளார்கள்.
Book : 54
பாடம் : 13 (அடிமையின்) வாரிசுரிமையில் விதிக்கப்படும் நிபந்தனைகள்
2729. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பரீரா என்னிடம் வந்து, 'நான் என் எஜமானர்களிடம் ஒவ்வோர் ஆண்டும் ஓர் ஊகியா வீதம் ஒன்பது ஊகியாக்கள் தருவதாகக் கூறி விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன். எனவே, எனக்கு உதவுங்கள்' என்று கூறினார். அதற்கு நான், 'அவர்கள் விரும்பினால் நான் ஒன்பது ஊக்கியாக்களையும் (எண்ணிக்) கொடுத்து விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்கே சேர வேண்டும்' என்று கூறினேன். பரீரா, அவரின் எஜமானர்களிடம் சென்று அவர்களிடம் இதைக் கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து (திரும்பி) வந்து, 'நான் நீங்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன்; அவர்கள், 'வாரிசுரிமை தங்களுக்கே உரியது' என்று கூறி உங்கள் நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்கள்' என்று கூறினார். அப்போது அங்கே அமர்ந்திருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதை செவிமடுத்துக் கொண்டிருந்தால், நான் நபி(ஸல்) அவர்களுக்கு விபரத்தைக் கூறினேன். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'பரீராவை நீ வாங்கிக் கொண்டு, அவரின் வாரிசுரிமை உனக்கே சேர வேண்டும் என்று நிபந்தனையிடு. ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்' என்று கூறினார்கள். நானும் அவ்வாறே செய்தேன். பின்னர் இறைத்தூதர் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, 'சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும். வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்' என்று கூறினார்கள்.
Book : 54
பாடம் : 14 நிலக் குத்தகையின் போது நில உரிமையாளர், நான் விரும்பும் போது உன் ஒப்பந்தத்தை ரத்து செய்து விடு வேன் என்று நிபந்தனையிட்டால்... (செல்லும்.)
2730. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
கைபர் வாசிகள் என் கைமூட்டுகளைப் பிசகச் செய்துவிட்டபோது என் தந்தை உமர்(ரலி) எழுந்து நின்று உரையாற்றினார்கள். அவ்வுரையில், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கைபர் பிரசேத்து யூதர்களிடம் அவர்களின் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தார்கள். அப்போது, 'அல்லாஹ் உங்களை இங்கு வசிக்கச் செய்யும் வரை நாம் உங்களை வசிக்க விடுவோம்' என்று கூறினார்கள். (என்னுடைய மகன்) அப்துல்லாஹ் இப்னு உமர் அங்கேயிருந்த தன்னுடைய சொத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார். அவர் அன்றிரவு தாக்கப்பட்டார். அதனால் அவரின் இருகைகளின் மூட்டுகளும் இருகால்களின் மூட்டுகளும் பிசகிவிட்டன. அங்கு அவர்களைத் தவிர வேறு பகைவர்கள் எவரும் இல்லை. அவர்கள் நம்முடைய பகைவர்களும் நம் சந்தேகத்திற்குரியவர்களும் ஆவர். அவர்களை நாடு கடத்தி விடுவதே பொறுத்தமென்று கருதுகிறேன்' என்று கூறினார்கள். உமர்(ரலி) (யூதர்களை) நாடு கடத்துவதென்று இறுதி முடிவெடுத்துவிட்டபோது, (யூதர்களின் தலைவனான) அபுல் ஹுகைக் உடைய மகன்களில் ஒருவன் வந்து, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எங்களை முஹம்மத்(ஸல்) அவர்கள் (கைபரிலேயே) வசிக்கச் செய்து, எங்கள் சொத்துகள் தொடர்பாக ஒப்பந்தமும் செய்த, அதை (நாங்கள் பேணி வந்தால் அங்கேயே தொடர்ந்து வசிக்கலாம் என்று) நிபந்தனையிட்டிருக்க, நீங்கள் எங்களை (அங்கிருந்து) வெளியேற்றுகிறீர்களா?' என்று கேட்டான். அதற்கு உமர்(ரலி), 'கைபரிலிருந்து நீ வெளியேற்றப்பட்டு, (நீண்ட கால்களும்) சகிப்புத் தன்மை(யும்) கொண்ட உன்னுடைய ஒட்டகம் உன்னைச் சுமந்துகொண்டு இரவுக்குப் பின் இரவாக நடந்துசென்று கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் உனக்கு எப்படி இருக்கும்?' என்று இறைத்தூதர்(ஸல்) கூறியதை நான் மறந்து விட்டேன் என்று நினைக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு அவன், 'அது அபுல் காசிம் (முஹம்மத் - ஸல்) விளையாட்டாகக் கூறினார்கள்' என்று சொன்னான். அதற்கு உமர்(ரலி), 'பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே!' என்று கூறினார்கள். பிறகு, அந்த யூதர்களை உமர்(ரலி) நாடு கடத்திவிட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்திருந்த விளைச்சலின் விலையைப் பணமாகவும், ஒட்டகமாகவும், பொருட்களாகவும், ஒட்டகச் சேணங்களாகவும், கயிறுகளாகவும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள்.
இன்னோர் அறிவிப்பில் ஹம்மாது இப்னு ஸலமா(ரஹ்) நபி(ஸல்) அவர்கள் குறித்த அறிவிப்பில் மட்டும் சுருக்கமாக கூறுகிறார்கள். (உமர்(ரலி) குறித்த அறிவிப்பை சுருக்கமாக்கவில்லை.)
Book : 54