பாடம் : 151 இறைமறுப்பாளர்களிடம் சிக்கிக் கொண்ட (முஸ்லிம்) போர்க் கைதி தன்னைச் சிறைபிடித்தவர்களிட மிருந்து தப்பிக்க அவர்களை ஏமாற்றவோ, கொன்று விடவோ அனுமதியுண்டா? இது பற்றி நபி (ஸல்) அவர் களிடமிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.130 பாடம் : 152 இணை வைப்பவன் ஒரு முஸ்-மை எரித்து விட்டால் (அதற்கு பதிலாக) அவனை எரிக்கலாமா?
3091. அலீ(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி(ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து 'இத்கிர்' புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், 'இதையெல்லாம் செய்தவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்' என்று பதிலளித்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்' என்று சொன்னேன். உடனே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஜா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, 'நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.
Book : 57
3092. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர்(ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள்விட்டுச் சென்ற சொத்தாகும்.
Book :57
3093. ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசுவதைவிட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக)விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாகவிட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர்(ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான்விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்றார்கள். (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாகவிட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தருமமாகவிட்டுச் சென்றவை. அவை நபி(ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என்றார்கள்.
இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன' என்றார்கள்.
Book :57
3094. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்.
நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று அந்த (ஃபதக் தொடர்பான) நிகழ்ச்சி பற்றிக் கேட்டேன் அவர்கள் கூறினார்கள்.
கடும் உச்சி வெயில் அடித்துக் கொண்டிருந்த நீண்ட ஒரு பகல் வேளையில் என் வீட்டாருடன் நான் அமர்ந்திருந்தபோது (கலீஃபா) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களின் தூதர் ஒருவர் என்னிடம் வந்து, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அழைக்கிறார், வாருங்கள்' என்றார். நான் அவருடன் சென்று உமர்(ரலி) அவர்களின் அறைக்குள் நுழைந்தேன். அவர்கள் அங்கே ஒரு கட்டிலில் ஈச்ச ஓலையாளலான மேற்பரப்பில் அதற்கும் தமக்கும் இடையே பாய் எதுவுமிலலாமல் ஒரு தோல் தலையணையின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தேன். அப்போது அவர்கள், 'மாலிக்கே! உங்கள் குலத்தாரில் சில குடும்பத்தார் நம்மிடம் வந்தனர். அவர்களுக்கு (அளவு குறிப்பிடாமல்) சிறிய ஓர் அன்பளிப்புத் தரும்படி நான் உத்தரவிட்டுள்ளேன். அதை உங்கள் கைவசமாக்கிக் கொண்டு அவர்களிடையே நீங்கள் பங்கிடுங்கள்' என்றார்கள். நான், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! வேறெவரிடமாவது இந்தப் பொறுப்பை நீங்கள் ஒப்படைத்தால் நன்றாயிருக்குமே' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் அதைக் கைவசமாக்கிக் கொண்டு சென்று அவர்களிடையே பங்கிடுங்கள்' என்று (மீண்டும்) உமர் அவர்கள் சொன்னார்கள். நான் உமரிடம் அமர்ந்து கொண்டிருந்தபோது, அவர்களிடம் அவர்களின் மெய்க் காவலர் 'யர்ஃபஉ' என்பவர் வந்து, 'உஸ்மான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார். உமர்(ரலி), 'ஆம்' என்று கேட்டார். உமர்(ரலி), அவர்கள், 'ஆம்' என்று அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து சலாம் சொல்லி அமர்ந்தார்கள். பிறகு 'யர்ஃபஉ' சற்று நேரம் தாமதித்து வந்து, 'அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் தாங்ள் சந்திக்க விரும்புகிறீர்களா?' என்று கேட்டதற்கு உமர் அவர்கள், 'ஆம்' என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர். அப்பாஸ்(ரலி), 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்' என்றார்கள். அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து ('ஃபய்உ' நிதியாகக்) கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர். அப்போது உஸ்மான்(ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் குழு, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்' என்று கூறியது. உமர்(ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான எங்களுக்கு) எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே' என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தக் குழுவினர், 'அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்' என்று பதிலளித்தனர். உடனே, உமர்(ரலி), அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம், அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்' என்று பதிலளித்தனர். உமர்(ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.'.. (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ் எச்செல்வத்தை அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் துதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்ததல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்' என்னும் (இந்த 59:06) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து, 'எனவே, இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமுமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை; அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள்' (இவ்வளவும் சொல்லிவிட்டு,) 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன். இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள். பிறகு, அலீ அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், 'உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன். நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்டுவிட்டு (தொடர்ந்து), 'பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது அபூ பக்ர்(ரலி), 'நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநியாவேன்' என்று கூறி அ(ந்த செல்வத்)தைக் தம் கைவசம் எடுத்தார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போல் செயல்பட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்தார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பிரதிநிதியாக ஆனேன். அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூ பக்ர்(ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவரும் என்னிடம் வந்து பேசினீர்கள்; நான் உங்களிடம் ஒரு முறை பேசினேன். உங்கள் இருவரின் விஷயமும் (கோரிக்கையும்) ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்ட படி வந்தீர்கள். இவரும் என்னிடம் தன் மனைவிக்கு அவரின் தந்தையிடமிருந்து கிடைக்க வேண்டிய (வாரிசுப்) பங்கை (பெற) விரும்பிய படி வந்தார்... அலீ(ரலி) அவர்களைத் தான் அப்படிச் சொன்னார்கள். நான் உங்கள் இருவரிடமும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள்விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தருமமே' என்றார்கள்' என்றேன். எனினும், 'அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது தான் பொறுத்தமானது' என்று எனக்குத் தோன்றியபோது நான், 'நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூ பக்ர்(ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன் படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள்' என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன்' என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்' என்றார்கள். பிறகு (குழுவினரை நோக்கி), 'எனவே, நான் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் இவ்விருவரிடமும் அந்த நிபந்தனையின்படி அச்சொத்தைக் கொடுத்து விட்டேனா?' என்று கேட்டார்கள். குழுவினர், 'ஆம் (கொடுத்து விட்டீர்கள்)' என்று பதிலளித்தனர். பிறகு அலீ(ரலி) மற்றும் அப்பாஸ்(ரலி) ஆகியோரை நோக்கி, 'நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன். நான் அதை உங்கள் இருவரிடமும் அந்த நிபந்தனையின்படியே கொடுத்து விட்டேனா?' என்று கேட்க, அவ்விருவரும், 'ஆமாம்' என்றார்கள். உமர்(ரலி), 'இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலை பெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் அந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்' என்றார்கள்.
Book :57
பாடம் : 2 குமுஸ் கடமையை நிறைவேற்றுவது (போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை இஸ்லாமிய அரசின் சிறப்பு நிதிக்குச் செலுத்துவது) மார்க்கத்தின் பாற்பட்டதாகும்.
3095. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் (நபி(ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (எங்களின்) இந்தக் கிளை 'ரபீஆ' குலத்தைச் சேர்ந்ததாகும். எங்களுக்கும் உங்களுக்குமிடையே 'முளர்' குலத்து நிராகரிப்பாளர்கள் (நாம் ஒருவரையொருவர் சந்திக்கத்) தடையாக உள்ளனர். எனவே, (போரிடுவதும் கொள்ளையும் வழிப்பறியும் அனைவராலும் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களிலே தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாதவர்களாயிருக்கிறோம். எனவே, நாங்கள் எடுத்து நடக்கவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஏற்ற ஒரு விஷயத்தை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்' என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்கு விஷயங்களை உங்களுக்குக் கட்டளையிட்டு நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன். நான் கட்டளையிடுபவை: அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; 'வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமிலர்' என்று சாட்சியம் மொழிவது... (இதைச் சொல்லியபடி) நபி(ஸல்) அவர்கள் தம் கையால் (எண்ணிக்) கணக்கிட்டார்கள்... தொழுகையை (அதன்னுடையன் வேளையில் முறைப்படி ஜமாஅத்துடன்) நிலை நாட்டுவது, ஸக்காத் கொடுப்பது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களுக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங்களிலிருந்து ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்தி விடுவது ஆகியன. மேலும், (மது வைத்திருக்கப் பயன்படுகின்ற) துப்பா - சுரைக்காய்க் குடுவைகள்; மற்றும் நக்கீர் - பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், முஸஃப்பத் தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மற்றும் அல் - ஹன்த்தம் - மண்சாடிகள் ஆகியவற்றை (பயன்படுத்த வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள்.
Book : 57
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு.
3096. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் வாரிசுகள் ஒரு தீனாரைக் கூட (வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள் என் மனைவிமார்களுக்குச் சேர வேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும் போக நான்விட்டுச் செல்பவையெல்லாம் தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 57
3097. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது.
Book :57
3098. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள்.
Book :57
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யரின் இல்லங்கள் பற்றி வந்துள்ள செய்திகளும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இல்லங்களும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர,நுழை யாதீர்கள். (அங்கு) உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் செல் லுங்கள்; நீங்கள் சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்று விடுங்கள். பேச்சில் லயித்து விடாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது நபிக்கு மனவேதனை யளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தினால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை. ஆனால், அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வெட்கப்படுவதில்லை. நீங்கள் (நபியின் மனைவியரான) அவர்களிடம் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். அதுவே உங்களுடைய உள்ளங்களுக்கும் அவர் களுடைய உள்ளங்களுக்கும் தூய்மை யளிப்பதாகும். அல்லாஹ்வுடைய தூத ருக்குத் தொல்லை தருவது உங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பின்னால் அவருடைய மனைவியரை நீங்கள் மணமுடிப்பதும் ஒரு போதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ் விடம் பெரும் பாவமாகும். (33:53)
3099. நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் நோயின் கடுமை அதிகரித்துவிட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.
Book : 57
3100. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர்த்திருந்தான். (எப்படியெனில்) நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் - மிஸ்வாக் - குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்.
Book :57
3101. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஸஃபிய்யா(ரலி) கூறினார்.
ரமளான் மாதத்தில் கடைசிப் பத்து நாள்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து கொண்டிருந்தபோது நான் அவர்களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தம் (மற்றொரு) மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒடடியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்து சென்றனர். அவ்விருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, 'அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவி தான்.)' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்க மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், 'அல்லாஹ் தூயவன். இறைத்தூதர் அவர்களே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மனிதனின் இரத்தம் சென்றடையும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :57
3102. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் 'ஷாம்' திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) தம் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை பார்த்தேன்.
Book :57
3103. ஆயிஷா(ரலி) கூறினார்.
என் அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுவார்கள்.
Book :57
3104. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா(ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, 'இங்கிருந்து தான் குழப்பம் ஏற்படும்' என்று மூன்று முறை கூறிவிட்டு, 'ஷைத்தானின் கொம்பு (தலையின் ஓரப்பகுதி) எங்கிருந்து உதயமாகிறதோ அங்கிருந்து...' என்று கூறினார்கள்.
Book :57
3105. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒருவர் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக் கொண்டிருக்கும் குரலை செவியுற்றேன். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! இதோ, ஒருவர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கிறார்' என்று கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை இன்னார் - ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர் - என்று கருதுகிறேன்; (ஒருவரின் வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) புனித உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் புனிதமானவையாக்கி விடும்' என்று கூறினார்கள்.
Book :57
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, குவளை, மோதிரம் ஆகியனவும், இவற்றில் நபியவர்களுக்குப் பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன் படுத்திய பங்கிடப்பட வேண்டியவை' என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர்கள் இறந்த பின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் பரக்கத் (அருள்வளம்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, செருப்பு, பாத்திரம் ஆகியனவும்.
3106. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி(ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. 'முஹம்மது' (என்னும் சொல்) ஒரு வரியிலும் 'ரசூலு' ('தூதர்' என்னும் சொல்) ஒரு வரியிலும் 'அல்லாஹி' ('அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் ('முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' - 'இறைத்தூதர் முஹம்மது' என்று) பொறிக்கப்பட்டிருந்தது.
Book : 57
3107. ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), 'அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் காலணிகள்' என்று அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.
Book :57
3108. அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்' என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில் அபூ புர்தா(ரஹ்) கூறினார்.
ஆயிஷா(ரலி) யமன் நாட்டில் தயாரிக்கப்படுகிற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் 'அல் முலப்பதா' (ஒட்டுப் போட்டது) என்றழைக்கிற வகையிலிருந்து ஒரு போர்வையையும் நபி(ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக் காட்டினார்கள்.
Book :57
3109. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி(ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் ஆஸிம்(ரஹ்), 'நான் அந்தக் குவளையக் கண்டேன். (பரக்கத்தை விரும்பி) அதில் தண்ணீர் குடித்தேன்' என்று கூறுகிறார்கள்.
Book :57
3110. அலீ இப்னு ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்)(ரஹ்) அறிவித்தார்.
நாங்கள் ஹுசைன் இப்னு அலீ(ரலி) - அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! - கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், 'என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதூ? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு 'அப்படி எதுவுமில்லை' என்று பதிலளித்தேன். மிஸ்வர்(ரலி), 'அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும் வரை அது அவர்களிடம் சென்று சேராது' என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஃபாத்திமா(ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்' என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்னே;. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது' என்று கூறினார்கள்.
Book :57