பாடம் : 1 அல்லாஹ் கூறுகிறான்: அவனே ஆரம்பத்தில் படைக்கின் றான். பிறகு அவனே அதை மீண்டும் படைக்கின்றான். இது அவனுக்கு மிகவும் எளிதானதாகும். (30:27) பார்க்க இறை வசனங்கள்: 1)50 : 15 2)35 : 35 3)71 : 14
3190. இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'பனூ தமீம் குலத்தாரே! நற்செய்தி பெற்று மகிழுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமமும்) கொடுங்கள்' என்று கேட்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.
அப்போது யமன் நாட்டினர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்' என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படைப்பின் ஆரம்பத்தைக் குறித்தும் அர்ஷ் (இறைசிம்மாசனம்) குறித்தும் பேசலானார்கள். அப்போது ஒருவர் வந்து (என்னிடம்), 'இம்ரானே! உன் வாகனம் (ஒட்டகம்) ஓடிவிட்டது' என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Book : 59
3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், '(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!' என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்' என்று பதில் கூறினார். பிறகு, 'நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்' என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, 'ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது' என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! 'நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)' என்று நான் ஆசைப்பட்டேன்.
Book :59
3192. உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரக வாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும்வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்தார்; அதை மறந்தவர் மறந்துவிட்டார்.
Book :59
3193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்:
ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். 'நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது' என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
3194. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது' என்று எழுதினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
பாடம் : 2 ஏழு பூமிகள். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிய வண்ணமிருக்கிறது, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக் கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.5 (65:12) பார்க்க இறை வசனங்கள் :- 1)52 : 5 2)79 : 28 3)51 : 7 4)84 : 2, 4, 5 5)91 : 6 6)79 : 14
3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.
எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' எனக் கூறினார்கள்' என்றார்கள்.
Book : 59
3196. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59
பாடம் : 3 நட்சத்திரங்கள். நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்என்னும் (67:5) இறை வசனத்திலிருந்து அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின் றான் என்று தெரிய வருகின்றது: 1-அவற்றை வானத்திற்கு அலங் காரமாக ஆக்கியுள்ளான். 2-ஷைத்தான்களை எறிந்து விரட்டு வதற்கான கருவியாக ஆக்கியுள்ளான். 3-அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான். எவர் இதுவல்லாத பிற பொருள் களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கின் றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார் என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.10 பாடம் : 4 சூரியன்-சந்திரன் ஆகியவற்றின் நிலை. பார்க்க இறை வசனங்கள் :- 1)55:5 2)79:29, 46 3)36:40 4)36:37 5)69:16, 17 6)6:76 7)81:1 8)84:17, 28 9)15:16 10)25:61 11)22:61
3197. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
Book : 59
3198. ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) அறிவித்தார்.
'அர்வா' என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், 'அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?' 'ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்' என்று சொன்னேன்.
Book :59
3199. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு' என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்' என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்' என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது' என்றார்கள்.
Book :59
3200. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து) விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
3201. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :59
பாடம் : 5 மேலும், அவனே தன் கருணை (மழை) யைப் பொழிவதற்கு முன்னர், காற்றுகளை பரவலாக13ஆ அனுப்பு கின்றான் (7:57) என்னும் இறை வசனம். பார்க்க இறை வசனங்கள் :- 1)17:69 2)15:22 3)2:266 4)3:117 5)77:3
3202. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 59
3203. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழுகைக்காக நின்று தக்பீர் கூறி நீண்ட நேரம் (திருக்குர்ஆனை) ஓதினார்கள். பிறகு, நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'சமி அல்லாஹு லிமன் ஹமிதஹு' (தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவியுற்றான்) என்று கூறினார்கள். அப்படியே நின்று நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். அது முதல் ரக்அத்தில் ஓதியதை விடக் குறுகியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். அது முதல் ரக்அத்(தில் செய்த)தை விடக் குறுகியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தா செய்தார்கள். பிறகு, கடைசி ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். அதற்குள் (ம்ரகணம் முடிந்து) சூரியன் வெளிப்பட்டு விட்டிருந்தது. அப்போது அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி, 'அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும், எவருடைய பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் அவற்றைக் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்' என்றார்கள்.
Book :59
3204. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள்.
என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book :59
3205. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ('ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; 'ஆது' சமூகத்தார் ('தபூர்' என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :59
3206. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்' (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது' என்று பதிலளித்தார்கள்.
Book :59
பாடம் : 6 வானவர்கள் - அவர்கள் மீது சாந்தி பொழியட்டும்.15 அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், வானவர்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் யூதர்களின் பகைவர் ஆவார்கள் என்று சொன்னார்கள். திருக்குர்ஆனில், திண்ணமாக நாங்களே அணிவகுத்துப் பணிபுரிபவர் களாக இருக்கின்றோம் (37:165)என்று சொல்வது வானவர்கள் தாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான 'புராக்' என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?' என்று கேட்கப்பட்டது. அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். 'அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?' என்று கேட்கப்பட்டது. அவர், 'ஆம்' என்றார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், '(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!' என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. அவர், 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்க, 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'முஹம்மது' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளித்தார். '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளித்தார். 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று கேட்கப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'ஆம்' என்று பதிலளிக்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்' என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். 'யார் அது?' என்று வினவப்பட்டது. 'ஜிப்ரீல்' என்று பதிலளிக்கப்பட்டது. 'உங்களுடன் இருப்பவர் யார்?' என்று கேட்கப்பட்டது. 'முஹம்மத்' என்று பதிலளிக்கப்பட்டது. '(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. 'அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை' என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது... நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், 'மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்' என்றார்கள். பிறகு, 'அல் பைத்துல் மஃமூர்' எனும் 'வளமான இறையில்லம்' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்' என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) 'சித்ரத்துல் முன்தஹா' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜ்ர்' எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்' என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, 'நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்' என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது.
Book : 59
3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது' என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
Book :59
3209. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!' என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்' என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.
Book :59