3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :59
3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
3212. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.
மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்' என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!' என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள்.
Book :59
3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்' என்று கூறினார்கள்.
Book :59
3214. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகுன்கி கிளையாரின் குறுகலான வீதியில் .. கிளம்புகிற புழுதியின் பக்கம் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அறிவிப்பாளர் மூஸா(ரஹ்), 'ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வருவதால் (கிளம்புகின்ற)...' என்னும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்தார்.
Book :59
3215. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) எப்படி வருகிறது?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்த நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :59
3216. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'இரண்டு ஜோடி (பொருள்)களை இறைவழியில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் 'இன்னாரே! இங்கே வாருங்கள்' என்று அழைப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி), 'இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்' என்றார்கள்.
Book :59
3217. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்' என்று கூறினார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று கூறினேன்.
ஆயிஷா(ரலி) 'நீங்கள்' என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
Book :59
3218. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், 'தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?' என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, '(நபியே!) நாம் உங்களுடைய இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை.' என்னும் (ஜிப்ரீல்(அலை) அவர்கள் சார்பாக பதில் கூறும் (திருக்குர்ஆன் 19:64) இறைவசனம் அருளப்பட்டது.
Book :59
3219. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :59
3220. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காடிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், 'குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்' என்று கூறினார்கள்.
இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
Book :59
3221. இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.
உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அஸர் தொழுகையைச் சிறிது பிற்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா(ரஹ்), 'உண்மையில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸரை) இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்' என்றார்கள். அதற்கு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), 'நீங்கள் சொல்வதைச் சிந்தித்துச் சொல்லுங்கள், உர்வா!' என்றார்கள். உடனே உர்வா(ரஹ்), 'ஜிப்ரீல்(அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்' என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்று தம் தந்தை அபூ மஸ்வூத்(ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத்(ரஹ்) சொல்ல செவியுற்றேன்' என்றார்கள்.
Book :59
3222. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
'உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்'... என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், 'அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.
Book :59
3223. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்ற சேருகிறார்கள். பிறகு, அல்லாஹ் - அவனோ மிகவும் அறிந்தவன் - அவர்களிடம், '(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், 'அவர்களை உன்னைத் தொழுகிற நிலையில்விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்' என்று பதிலளிப்பார்கள்.
Book :59
பாடம் : 7 ஒருவர் ஆமீன்30 சொல்ல, (அதே நேரத்தில்) விண்ணகத்திலுள்ள வான வர்களும் ஆமீன் சொல்ல,இருவரும் (ஆமீன் சொன்ன நேரம்) ஒன்றாக அமைந்து விட்டால் அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.31
3224. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், 'நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்ன இந்தத் தலையணையில்?' என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், 'இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்' என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.
Book : 59
3225. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
Book :59
3226. ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார்.
'(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என என்னிடம் அபூ தல்ஹா(ரலி) தெரிவித்தார்கள்.
புஸ்ர் இப்னு ஸயீத்(ரஹ்) அறிவித்தார்.
(ஒரு முறை ஸைத் இப்னு காலித்(ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், 'இவர்கள் (ஸைத்(ரலி)), 'இவர்கள் (ஸைத்(ரலி)) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம். ஆனால், ஸைத்(ரலி) (அதை அறிவிக்கும் போது) 'துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'கேட்கவில்லை' என்றேன். அதற்கு அவர்கள், 'ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்' என்று கூறினார்கள்.
Book :59
3227. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது) 'உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை' என்றார்.
Book :59
3228. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் (தொழுகையில்), 'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு - தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து - இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது' என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவருடைய சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
3229. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும், அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரின் உளூ முறியாமலிருக்கும் வரை, வானவர்கள், 'இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59