பாடம் : 1 ளவிண்ணுலகப்பயணம் -மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது? இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்: (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம் செய்யும் படியும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழும் படியும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றார்கள் என்று தாம் (ஹெராக்ளியஸிடம்) கூறியதாக என்னிடம் கூறினார்கள்.
349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!' என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
'அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
Book : 8
350. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :8
பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் எனும் (7:31ஆவது) இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும். (ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்து கொண்டு தொழலாம். நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்' என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
Book : 8
பாடம் : 3 தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில் முடிச்சிட்டுக் கொள்வது. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.
352. 'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்' என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
Book : 8
353. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்' என்று கூறினார்கள்' என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.
Book :8
பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையில் அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு) தொழுவது. இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப் ஆகும்.. (அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும் இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது போட்டுக் கொள்வது(ம், பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு கீழேயும், இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும். இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி எனப்படுகிறது. உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்) தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்..
354. 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்' என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 8
355. 'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்' என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book :8
356. 'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுததை பார்த்திருக்கிறேன்' என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்.
Book :8
357. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நான் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்?' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே! வருக!' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது' என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார்.
Book :8
358. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, 'உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :8
பாடம் : 5 ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும்.
359. 'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8
360. 'ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்' (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :8
பாடம் : 6 ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
361. 'நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறிர்?' என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் 'இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி(ஸல்) அவர்கள், 'ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்' என்று ஜாபிர்(ரலி) விடையளித்தார்கள்' என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.
Book : 8
362. 'சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், 'ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்' என்று கூறினார்கள்' என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book :8
பாடம் : 7 (இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது. அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள். அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன் தொழுதார்கள்.
363. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, 'முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்' என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book : 8
பாடம் : 8 தொழுகையின் போதும். மற்ற நேரங்களிலும் பிறந்த மேனியுடன் இருக்கலாகாது.
364. 'நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஃபத்துல்லாஹ்்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் 'என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book : 8
பாடம் : 9 (முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து தொழுவது.
365. நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுவது பற்றிக் கேட்டதற்கு 'உங்களில் எல்லோரும் இரண்டு ஆடைகளை வைத்திரக்கிறார்களா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
(உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்) பின்னர் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் இது விஷயமாக கேட்டதற்கு 'அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். சிலர் எல்லா ஆடைகளையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதார்கள். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டை, மேல் போர்வையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் சட்டையும் அணிந்தவராகச் சிலர் தொழுதார்கள். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள். வேஷ்டியும் சட்டையும் என்பதற்குப் பதிலாக வேஷ்டியும் மேல் போர்வையும்' என்று உமர்(ரலி) கூறியதாக நான் நினைக்கிறேன்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8
366. 'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :8
பாடம் : 10 அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.
367. 'கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும் படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்' என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Book : 8
368. முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)
Book :8