3629. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் (தம் பேரப்பிள்ளை) ஹஸன்(ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்து வந்து அவருடனேயே மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள். பிறகு, 'இந்த என் மகன், தலைவராவார். அல்லாஹ் இவர் வாயிலாக முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே சமாதானம் செய்து வைக்கக்கூடும்' என்று கூறினார்கள்.
Book :61
3630. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
ஜஅஃபர்(ரலி) அவர்களும் ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டுவிட்ட செய்தி (மதீனாவுக்கு) வருவதற்கு முன்பே அதை நபி(ஸல்) அவர்கள் (இறை அறிவிப்பின் வாயிலாக அறிந்து மக்களுக்கு) அறிவித்தார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன.
Book :61
3631. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
'(எனக்குத் திருமணம் ஆன பொழுது) உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கின்றனவா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், 'எங்களிடம் எப்படி அந்த விரிப்புகள் இருக்கும்?' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்' என்று பதிலளித்தார்கள். பின்னர் ஒரு நாளில்) நான் (என் மனைவியான) அவரிடம் 'எங்களைவிட்டு உன் விரிப்புகளை அப்புறப்படுத்து' என்று கூறுவேன். அவள், 'நபி(ஸல்) அவர்கள், 'விரைவில் உங்களிடம் மிருதுவான மென்பட்டு விரிப்புகள் இருக்கும்' என்று கூறவில்லையா?' என்று கேட்பாள். 'அப்படியானால் அவற்றை (அவ்வாறே)விட்டு விடுகிறேன்' (என்று நான் கூறுவேன்.)
Book :61
3632. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒரவனான) உமய்யா இப்னு கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும்போது ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, 'நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமே' என்று கேட்டான். அவ்வாறே, ஸஅத்(ரலி) வலம் வந்து கொண்டிருந்தபோது அபூ ஜஹ்ல் வந்து, 'கஅபாவை வலம் வருவது யார்?' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'நானே ஸஅத்' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஜஹ்ல், '(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவரின் தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?' என்று கேட்டான். அதற்கு ஸஅத்(ரலி), 'ஆம் (அதற்கென்ன?)' என்று கேட்டார்கள். அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே, உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், 'அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்' என்று சொன்னான். பிறகு ஸஅத்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வரவிடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்' என்று கூறினார்கள். அப்போது உமய்யா, ஸஅத்(ரலி) அவர்களிடம், 'உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்' என்று சொல்லத் தொடங்கினான்... அவர்களைப் பேசவிடாமல் தடுக்கலானான்... எனவே, ஸஅத்(ரலி) கோபமுற்று, 'உம் வேலையைப் பாரும். (அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், நான் முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல கேட்டிருக்கிறேன்' என்று உமய்யாவிடம் கூறினார்கள். அதற்கு அவன், 'என்னையா (கொல்ல விருப்பதாகக் கூறினார்?)' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'ஆம் (உன்னைத் தான்)' என்று பதிலளித்தார்கள். அவன், 'அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை' என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, 'என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன கூறினார்?' என்று வினவினாள். 'முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னாதாக அவர் கூறினார். என்று அவன் பதிலளித்தான். அவள், 'அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹமமது பொய் சொல்வதில்லை' என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, 'உம் யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?' என்று கேட்டாள். எனவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூ ஜஹ்ல் அவனிடம், 'நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். எனவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய்விட்டால் நான்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்து கொள்)' என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாள்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்றுவிட்டான்.
Book :61
3633. அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா(ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல்(அலை) அவர்கள் தாம்' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்று எனக்குத் தெரியவந்தது)' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் சுலைமான் இப்னு தர்கான் அத் தைமீ(ரஹ்) கூறினார்:
நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :61
3634. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு பொட்டல் வெளியில் ஒன்று திரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூ பக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் ஹம்மாம் இப்னு முனப்பிஹ்(ரஹ்) கூறினார்:
'அபூ பக்ர், இரண்டு வாளிகளை இறைத்தார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என (ஒன்றா இரண்டா என்ற சந்தேகமின்றி) அபூ ஹுரைரா(ரலி) சொல்ல கேட்டேன்.
Book :61
பாடம் : 26 அல்லாஹ் கூறுகிறான். எவர்களுக்கு நாம் வேதம் அருளியிருக் கின்றோமோ அவர்கள், தங்களுடைய மைந்தர்களை (இனம் கண்டு) அறிந்து கொள்வதைப் போல் (கிப்லாவாக்கப்பட்ட) இந்த இடத்தையும் நன்கு அறிவார்கள். எனினும், அவர்களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். (2:146)
3635. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது' என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது' என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.
Book : 61
பாடம் : 27 இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது.
3636. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள்.
Book : 61
3637. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.
Book :61
3638. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.
Book :61
பாடம் : 28
3639. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது.
Book : 61
3640. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் ஆணை (இறுதிநாள்) தம்மிடம் வரும் வரை (சத்தியப் பாதையில் சோதனைகளை) வென்று நிலைத்திருப்பார்கள். (இறுதி நாள் வரும்) அந்த நேரத்திலும் அவர்கள் மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள்.
என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book :61
3641. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள். அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களை எதிர்ப்பவர்களும் அவர்களுக்குத் தீங்கு செய்யமுடியாது. இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்.
இதை முஆவியா(ரலி) அறிவிக்க, அவர்களிடம் மாலிக் இப்னு யுகாமிர்(ரஹ்), '(அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தும்) அவர்கள் ஷாம் தேசத்திலிருப்பார்கள்' என்று முஆத்(ரலி) கூறினார்' என்று கூறினார்கள். அதற்கு முஆவியா(ரலி) இருப்பார்கள்' என்று முஆத்(ரலி) சொல்ல தாம் கேட்டதாகக் கருதுகிறார்' என்று கூறினார்கள்.
Book :61
3642. ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) அறிவித்தார்.
என் குலத்தார் உர்வா இப்னு அபில் ஜஅத்துல் பாரிகீ(ரலி) அவர்களைப் பற்றிப்பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். உர்வா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அவர் ஓர் ஆட்டை வாங்குவதற்காக ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்றுவிட்டு ஒரு தீனாரையும் ஓர் ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் அவரின் வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள்வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார்.
அறிவிப்பாளர்: சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்)
ஹஸன் இப்னு உமாரா(ரஹ்) இந்த ஹதீஸை, உர்வா இப்னு அபில் ஜஅத்(ரலி) அவர்களிடமிருந்து ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) அறிவித்தார் என்று சொல்லி எம்மிடம் கொண்டு வந்தார். நான் அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஷபீப் இப்னு கர்கதா(ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நான் இந்த ஹதீஸை உர்வா அல் பாரிகீ(ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுறவில்லை. என் குலத்தார் உர்வா அவர்களிடமிருந்து அறிவிப்பதை மட்டுமே செவியுற்றேன்' என்று கூறினார்கள்.
Book :61
3643. (மேற் சொன்ன ஹதீஸை நான் உர்வா அவர்களிடம் கேட்கவில்லை.) ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்கள் என உர்வா அல் பாரிகீ(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன். அவர்களின் வீட்டில் நான் எழுபது குதிரைகளைப் பார்த்திருக்கிறேன்' என்று ஷபீப் இப்னு ஃகர்கதா(ரஹ்) கூறினார்கள்.
மேலும், அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), 'உர்வா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் சார்பாக) ஓர் ஆட்டை வாங்குவார்கள். அது குர்பானீ ஆடு போலும்' என்று கூறினார்கள்.
Book :61
3644. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளுடன் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :61
3645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளுடன் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :61
3646. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரை, (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்குப் (பொருளதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும். அதை இறை வழியில் பயன்படுத்துவதற்காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்... அல்லது ஒரு தோட்டத்தில்... ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கிற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தரும். அந்த குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்குப் பசும்புல் வெளியில் ... அல்லது தோட்டத்தில்... மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும்.
அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு குதிகுதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதனுடைய (குளம்பின்) சுவடுகளின் அளவிற்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவிற்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்த குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். இன்னொருவர் அதன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு இந்த (அவருடைய) குதிரை(வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டி வை(த்து பராமரி)க்கிறவன் ஆவான். அதன் (தவறான நோக்கத்தின்) காரணத்தால, அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகி விடுகிறது.
நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்த இறைகட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; 'எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட) னை(யை)க் கண்டு கொள்வான்' (திருக்குர்ஆன் 99: 7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த திருக்குர்ஆன் வசனத்தைத் தவிர' என்று கூறினார்கள்.
Book :61
3647. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (போருக்காக) அதிகாலை நேரத்தில் கைபருக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது (யூதர்களான) கைபர்வாசிகள் (வயல் வெளிகளை நோக்கி) மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் அவர்கள், 'முஹம்மதும் ஐந்து (பிரிவுகள் கொண்ட அவரின்) படையினரும் வருகின்றனர்' என்று கூறினார்கள். உடனே கோட்டையை நோக்கி விரைந்தோடிச் சென்றார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் உயர்த்தி, 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் (வாசிகளின் நிலை) நாசமாகிவிடும். 'நாம் ஒரு சமுதாயத்தினரின் முற்றத்தில் இறந்து விடுவோமாயின் எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த அவர்களுக்கு அதுமிகக் கொட்ட காலை நேரமாகிவிடும்' என்று (திருக்குர்ஆன் 37: 177-வது இறைவசனத்தின் கருத்தைச்) கூறினார்கள்.
Book :61
3648. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்து விடுகிறேன்' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'உன் மேலங்கியை விரி' என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரண்டு கைகளால் (எதையோ அள்ளுவது போல் சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள். பிறகு 'இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக் கொள்' என்று கூறினார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்தணைத்துக் கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.
Book :61