3669. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் பார்வை (அவர்களின் மரண வேளையில்) நிலை குத்தி நின்றது. பிறகு அவர்கள், 'மிக உயர்ந்த நண்பர்களிடம் (செல்கிறேன்)' என்று (மூன்று முறை) கூறினார்கள்.
தொடர்ந்து அறிவிப்பாளர் காசிம்(ரஹ்) (நபி-ஸல் அவர்களின் இறப்பு சம்பவம் தொடர்பான) இந்த ஹதீஸை முழுமையாக எடுத்துரைத்தார்கள்.
ஆயிஷா(ரலி) கூறினார். (அபூ பக்ர், உமர் ஆகிய) அவ்விருவரின் உரைகளில் எந்தவோர் உரையைக் கொண்டும் அல்லாஹ் நன்மை புரியாமல் இல்லை. உமர் அவர்கள் (தவறாக நடந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள் என்று) மக்களை எச்சரித்தார்கள். ஏனெனில், மக்களிடையே நயவஞ்சககுணமுடையவர்களும் (அப்போது) இருந்தனர். (உமர் அவர்களின்) அந்த (அச்ச மூட்டும்) உரையின் வாயிலாக அல்லாஹ் அ(ந்த நயவஞ்சக குணமுடைய)வர்களை (சத்தியத்தின் பக்கம்) திருப்பினான்.
Book :62
3670. அபூ பக்ர்(ரலி) மக்களுக்கு நேர்வழியைக் காண்பித்தார்கள். அவர்களின் உரையின் காரணத்தால், 'முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதிபலனை மிக விரைவில் வழங்குவான்' என்றும் (திருக்குர்ஆன் 03: 144-ம்) வசனத்தை ஓதியபடி மக்கள் வெளியே சென்றார்கள்.
Book :62
3671. முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார்.
நான் என் தந்தை (அலீ - ரலி - அவர்கள்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அபூ பக்ர் அவர்கள்' என பதிலளித்தார்கள். நான், '(அவர்களுக்குப்) பிறகு யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)' என்று பதிலளித்தார்கள். 'பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்' என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, 'பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்' என்று பதிலளித்தார்கள்.
Book :62
3672. ஆயிஷா(ரலி) கூறினார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பயணங்களில் ஒன்றில் அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதா' என்னுமிடத்தை... அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்னுமிடத்தை... அடைந்தபோது, என்னுடைய கழுத்து மாலை ஒன்று (எங்கோ) அவிழ்ந்து விழுந்துவிட்டது. எனவே, அதைத் தேடுவதற்காக, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓரிடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள். மக்களும் அவர்களுடன் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை. அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. எனவே, மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து, '(உங்கள் மகள்) ஆயிஷா என்ன செய்தார் என்று நீங்கள் கவனிக்க மாட்டீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களுடன் மக்களையும் எந்த நீர் நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும், அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் ஆயிஷா தங்க வைத்துவிட்டார்' என்று கூறினார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி)அல்லாஹ்வின் தூதர்(ஸல்) என் மடியில் தலை வைத்துத் தூங்கி விட்டிருந்த நிலையில் வந்தார்கள். 'நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் எந்த நீர்நிலைக்கு அருகிலும் அவர்கள் இல்லாத நிலையிலும் அவர்களுடன் தண்ணீர் எதுவும் இல்லாத நிலையிலும் (தொடர்ந்து பயணிக்கவிடாமல்) தடுத்துவிட்டாயே!' என்று சொல்லி என்னைக் கண்டித்தார்கள். மேலும், அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, என்னைத் தம் கரத்தால் என் இடுப்பில் குத்தலானார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தது தான் என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதா(ஸல்) அவர்கள் காலை வரை தூங்கினார்கள். அப்போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது, அல்லாஹ் 'தயம்மும்' உடைய (திருக்குர்ஆன் 04:43-ம்) வசனத்தை அருளினான். (இது குறித்து) உசைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தாரே! ('தயம்மும்' என்ற சலுகையான) இது, உங்களால் (சமுதாயத்திற்குக் கிடைத்த) முதல் 'பரக்கத்' (அருள் வளம்) அல்ல. (இதற்கு முன்பும் பல நன்மைகள் உங்களின் மூலம் கிடைத்துள்ளன)' என்று கூறினார்கள். பிறகு, நான் சவாரி செய்து வந்த ஒட்டகத்தை (அது அமர்ந்திருந்த இடத்திலிருந்து) நாங்கள் எழுப்பியபோது, அதற்குக் கீழே (நான் தொலைத்துவிட்ட) கழுத்து மாலையை நாங்கள் கண்டோம்.
Book :62
3673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :62
3674. அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நான் என் வீட்டில் உளூச் செய்துவிட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைவிட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்' என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி(ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்' என்று கூறினர். நான் (நபி - ஸல் - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விடப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூ பக்ர் (வந்துள்ளேன்)' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்' என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூ பக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்' என்று கூறினார்கள். நான் அபூ பக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்' என்று சொன்னேன். உடனே, அபூ பக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வலப் பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி,விட்டுவிட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்' என்று சொல்லிக் கொண்டேன்.
..' இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) கூறியது. தம் சகோதரைக் கருத்தில் கொண்டே' என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்:
அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்)' என்று சென்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்' என்று கூறிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்' என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என் சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச் செய்வான்' என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)' என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்' என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள்.
அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூ பக்ர் - ரலி - அவர்களும், உமர் - ரலி - அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்' என்று கூறினார்கள்.
Book :62
3675. அனஸ்(ரலி) அறிவித்தார்
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகீயோரும் உஹுது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஹுதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்' என்று கூறினார்கள்.
Book :62
3676. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கெண்டிருக்கும்போது என்னிடம் அபூ பக்ரும் உமரும் வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்த பின்) வாளியை எடுத்து ஒரு வாளி நீரை... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார்கள். அவர் இறைத்தபோது (சற்று) சோர்வு தென்பட்டது. அல்லாஹ் அவருக்கு மன்னிப்பளிப்பானாக! பிறகு, அபூ பக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக் கொள்ள அது அவரின் கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான (அபூ ர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு நீர் இறைத்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவான வஹ்ப் இப்னு ஜரீர்(ரஹ்), 'இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள 'அத்தன்' என்னும் சொல், 'ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப்படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்' என்று கூறுகிறார்கள்.
Book :62
3677. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நான் சில மக்களிடையே நின்று கொண்டிருக்க, அவர்கள் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுக்காக பிரார்த்திதார்கள். அப்போது உமர் அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள் - அப்போது என் பின்னாலிருந்து ஒருவர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் - ரலி - அவர்களை நோக்கி,) 'அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல், அடக்கம் செய்யப்படும் போது) உங்களை உங்களுடைய இரண்டு தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்க)ளுடன் (அவர்களின் மண்ணறைகளுக்கே அருகே) அடங்கச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எனவே, உங்களை அல்லாஹ் அவ்விருவருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) அடங்கச் செய்திட வேண்டுமென்று விரும்புகிறேன்' என்று கூறினார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களாக இருந்தார்கள்.
Book :62
3678. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
'இணை வைப்பவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இழைத்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது எது?' என்று நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், '(ஒரு முறை மக்காவில்) உக்பா இப்னு அபீ முஐத் என்பவன், நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில் வந்து தன் போர்வையை அவர்களின் கழுத்தில் போட்டு அதை (அவர்களின் மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்ததை பார்த்தேன். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து, நபி(ஸல்) அவர்களைவிட்டு உக்பாவை (தம் கையால்) தள்ளினார்கள். அப்போது, 'என் இறைவன் அல்லாஹ் தான்' என்று சொல்லும் காரணத்திற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்(ல முனை)கிறீர்கள்? அவரோ தம் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்' என்று கூறினார்கள்.
Book :62
பாடம் : 6 அதவீயும் குறைஷிக் குலத்தவருமான அபூ ஹஃப்ஸ் உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்.39
3679. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், 'நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, 'யார் அது?' என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), 'இவர் பிலால்' என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், 'இது யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், (வானவர்), 'இது உமருடையது' என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்' என்று கேட்டார்கள்.
Book : 62
3680. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்த பொழுது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது அரண்மனையொன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலக வாழ்வில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையிலும் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான் (ஜீப்ரிலிடம்), 'இந்த அரண்மனை யாருக்குரியது?' என்று கேட்டேன். அவர், 'உமர் அவர்களுக்குரியது' என்று பதிலளித்தார். அப்போது (அதில் நுழைந்து பார்க்க எண்ணினேன். ஆனால்,) எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. எனவே, (அதில் நுழையாமல்) திரும்பி வந்து விட்டேன்' என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, 'தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள்.
Book :62
3681. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீரும் அளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்... அல்லது, நகக் கண்கள் ... ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, அதற்கு அவர்கள், 'அறிவு' என்று பதிலளித்தார்கள்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :62
3682. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'
கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூ ர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கம் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) 'இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம் பெற்றுள்ள 'அப்கரிய்யு' என்னும் சொல், 'உயர்தரமான விரிப்பு' என (அகராதியில்) பொருள்படும்' என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ஸியாத்(ரஹ்) 'மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு' என்று (பொருள்) கூறுகிறார்.
Book :62
3683. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) உமர் இப்னு கத்தாப் அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் பேசிக் கொண்டும் ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி(ஸல்) அவர்களின் குரலை விட உயர்ந்திருந்தன. உமர் இப்னு கத்தாப்(ரலி) உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்கள் தாம் மிகவும் தகுதியுடையவர்கள், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள். பிறகு உமர் அவர்கள் (அப்பெண்களை நோக்கி), 'தமக்குத் தாமே பகைவர்களாயிருப்பவர்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை விட கடுமை காட்டக்கூடியவரும் கடின சித்தமுள்ளவரும் ஆவீர்கள்' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'சும்மாயிருங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவைவிட்டு வேறொரு தெருவில் தான் சொல்வான்' என்று கூறினார்கள்.
Book :62
3684. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்ற நேரத்திலிருந்து நாங்கள் வலிமையும் கண்ணியமும் உடையவர்களாகத் திகழலானோம்.
என கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
Book :62
3685. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூ பக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'நானும் அபூ பக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்' என்றும் 'நானும் அபூ பக்ரும் உமரும் புறப்பட்டோம்' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன்.
Book :62
3686. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோர் தம்முடனிருக்க, நபி(ஸல்) அவர்கள் உஹுது மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் காலால் உதைத்து, ' 'உஹுதே! அசையாமல் இரு! உன் மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் தான் உள்ளனர்' என்று கூறினார்கள்.
Book :62
3687. அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) என்னிடம் உமர்(ரலி) அவர்களின் பண்புகள் சிலவற்றைப் பற்றிக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவற்றைத் தெரிவித்தேன். அதற்கு இப்னு உமர்(ரலி), இறந்த நேரத்திலிருந்து உமர்(ரலி) அவர்களை விட அதிகம் உழைக்கக் கூடியவர்களாகவும் அதிகம் வாரி வழங்குபவர்களாகவும் வேறெவரையும் நான் காணவில்லை. அவர்கள் தம் வாழ்நாளின் இறுதிவரை அவ்வாறே இருந்தார்கள்' என்று கூறினார்கள்.
Book :62
3688. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, 'மறுமை நாள் எப்போது வரும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்?' என்று (திரும்பக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர' என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களையும் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!
Book :62