3716. அதற்கு ஃபாத்திமா, 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை) என்னிடம் இரகசியமாகப் பேசியபோது, தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதனால் நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறை) இரகசியமாகப் பேசியபோது அவர்களின் குடும்பத்தாரில் நானே அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லப் போகும் முதல் ஆள் என்று கூறினார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியோடு) சிரித்தேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :62
பாடம் : 13 ஸுபைர் பின் அவ்வாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.91 (ஸுபைர் - ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஹவாரீ) பிரத்தியேக உதவியாளர் ஆவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.92 (ஈசா -அலை- அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு,அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
3717. மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார்.
'சில்லு மூக்கு' நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுக்கும் கடுமையான சில்லு மூக்கு இரத்த நோய் ஏற்பட்டது. எந்த அளவிற்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர் உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, '(உங்களுக்குப் பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்' என்று கூறினார். உஸ்மான்(ரலி), 'மக்கள் (இப்படி நியமிக்கச்) கூறினார்களா?' என்று கேட்க அம்மனிதர், 'ஆம்' என்றார். 'எவரை நியமிப்பது?' என்று உஸ்மான்(ரலி) கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மெளனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் இப்னு ஹகம்) என்று நான் நினைக்கிறேன் - அவரும், '(உஸ்மான்(ரலி) அவர்களே! உங்களுக்குப் பின் ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்' என்று கூறினார். உஸ்மான்(ரலி), 'மக்கள் (இப்படிக் கூறினார்களா?' என்று கேட்க, அவர், 'ஆம்' என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), 'யாரை நியமிப்பது?' என்றுகேட்க, அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மெளனமாயிருந்துவிட்டார். பிறகு உஸ்மான்(ரலி), 'அவர்கள் ஸுபைர் அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்' என்று சொல்ல, அந்த மனிதர், 'ஆம்' என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் அவர்களே மக்களில் சிறந்தவர். (எவரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை கூறினார்களோ) அவர்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஸுபைர் தாம்' என்று கூறினார்கள்.
Book : 62
3718. மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார்.
நான் உஸ்மான்(ரலி) அவர்களிடம் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து, '(உங்களுக்குப் பின் ஆட்சி செய்ய) ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்' என்று கூறினார். உஸ்மான்(ரலி), 'அவ்வாறு (மக்களால்) கூறப்பட்டதா?' என்று கேட்க அம்மனிதர், 'ஆம்; ஸுபைர்(ரலி) அவர்களைத் தான் (கலீஃபாவாக ஆக்கும்படி மக்கள் சொல்கிறார்கள்)' என்று பதில் கூறினார். அப்போது உஸ்மான்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவரே உங்களில் சிறந்தவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்' என்று மூன்று முறை கூறினார்கள்.
Book :62
3719. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு பிரத்யேக உதவியாளர் (ஹவாரிய்யு) உண்டு. என் பிரத்யேக உதவியாளர் ஸுபைர் இப்னு அவ்வாம் ஆவார்.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
Book :62
3720. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்.
அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர்(ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை... போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை கெளரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்' என்று கூறினார்கள்.
Book :62
3721. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின்போது, 'நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்த மாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே' என்று கேட்டார்கள். எனவே, ஸுபைர்(ரலி), இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களின் தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர்(ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்தபோது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன்.
Book :62
பாடம் : 14 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.98 நபி (ஸல்) அவர்கள் தல்ஹா அவர் களைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.99
3722. & 3723. தல்ஹா(ரலி) அவர்களும் ஸஅத்(ரலி) அவர்களும் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை.
இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) தல்ஹா(ரலி) மற்றும் ஸஅத்(ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.
Book : 62
3724. அபூ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
(உஹுதுப் போரின் போது) நபி(ஸல்) அவர்களை (நோக்கி வந்த அம்புகள் மற்றும் ஈட்டிகளிலிருந்து அவர்களைக் கேடயம் போன்று நின்று) காத்த தல்ஹா(ரலி) அவர்களின் கையை (துளைகளும் வடுக்களும் நிறைந்து) ஊனமுற்றதாக பார்த்தேன்.
Book :62
பாடம் : 15 சஅத் பின் அபீ வக்காஸ் அஸ் ஸுஹ்ரீ (ரலி) அவர்களுடைய சிறப்புகள். (அவர்களுடைய குலமான) பனூ ஸுஹ்ரா குலத்தார் நபி (ஸல்) அவர்களுடைய தாய் வழி உறவினர்கள் ஆவர். சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களே சஅத் பின் மாலிக் (ரலி) ஆவார்கள்.101
3725. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்.
'(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி(ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்' என்று ஸஅத்(ரலி) சொல்ல கேட்டேன்.
Book : 62
3726. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக என்னை கண்டேன்.
Book :62
3727. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) கூறினார்.
'நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளில் (தான் மற்றவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். அந்நாளில்) தவிர (அதற்கு முன்பு) வேறெவரும் இஸ்லாத்தைத் தழுவிடவில்லை. நான் இஸ்லாத்தில் மூன்றிலொரு பாகமாக ஏழு நாள்கள் (வரை) இருந்தேன். . என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) சொல்ல கேட்டேன்.
இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :62
3728. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதலாமவன் ஆவேன். எங்களுக்கு மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புனிதப் போர் புரிந்து வந்தோம். எனவே, நாங்கள் ஒட்டகங்களும் ஆடுகளும் கெட்டிச் சாணியிடுவதைப் போன்று ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபா வாசிகளான) 'பனூ அஸத்' குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் விஷயத்தில் என்னைக் குறை கூறலானார்கள். (அப்படியானால், இது வரை) நான் செய்து வந்த வழிபாடு வீணாகி, நான் இழப்புக்குள்ளாகி விட்டேன். (போலும் என்று வருந்தினேன்.) அதைக் குறித்து அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் புகார் செய்திருந்தார்கள்' என்று (உமர் - ரலி - அவர்களிடம்) கூறினார்கள்.
Book :62
பாடம் : 16. நபி (ஸல்) அவர்களுடைய மருமகன்கள் பற்றிய குறிப்பு .107 அவர்களில் அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரலி) அவர்களும் ஒருவராவார்.108
3729. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள்.
எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதைவிட்டுவிட்டார்கள்.
மற்றோர் அறிவிப்பில், மிஸ்வர்(ரலி) அதிகப்படியாகக் கூறியிருப்பதாவது:
நான் நபி(ஸல்) அவர்களின் உரையைச் செவியுற்றேன். அவர்கள் பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகன் ஒருவரை (அபுல் ஆஸை) நினைவு கூர்ந்து அவர் (அவரின் மாமனாரான) தன்னுடன் நலன் மருமகனாக நடந்து கொண்டதைப் பாராட்டிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது அவர்கள், 'அவர் என்னிடம் பேசினார். (பேசிய படி) வாய்மையுடன் நடந்து கொண்டார். எனக்கு வாக்குறுதியளித்தார், அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்' என்று கூறினார்கள்.
Book : 62
பாடம் : 17 நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் சிறப்புகள்.110 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நீங்கள் எம் சகோதரரும் எம்(மால் விடுதலை செய்யப்பட்ட) அடிமையுமாவீர் என்று நபி (ஸல்) அவர்கள் (ஸைத் -ரலி- அவர்களிடம்) சொன்னார்கள்.111
3730. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்' என்று கூறினார்கள்.
Book : 62
3731. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, என்னிடம் (இருவரின் சாயலை வைத்து) உறவு முறையை கணிப்பவர் ஒருவர் வந்தார். உஸாமா இப்னு ஸைத் அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா அவர்களும் அப்போது ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அந்த மனிதர் (இருவரின் கால்களையும் பார்த்து), 'இந்தக் கால்கள் (ஒன்றுக் கொன்று உறவுள்ளவை;) ஒன்று மற்றொன்றிலிருந்து தோன்றியவை' என்று கூறினார். (அதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைந்து அவரை வியந்தார்கள்; அதை எனக்குத் தெரிவித்தார்கள்.
Book :62
பாடம் : 18 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.114
3732. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(திருட்டுக் குற்றத்தின் காரணமாக கைவெட்டும தண்டனைக்கு உள்ளாகவிருந்த) மக்ஸூமீ குலத்துப் பெண்ணொருத்தியின் விஷயம் குறைஷிகளைக் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உஸாமா அவர்களைத் தவிர வேறெவர் அவர்களிடம் துணிச்சலுடன் (தண்டனையைத் தளர்த்துவது குறித்துப்) பேச முடியும்' என்று (தமக்குள்) பேசிக் கொண்டார்கள்.'
Book : 62
3733. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடிவிட்டாள். மக்கள், 'அவள் விஷயத்தில் நபி(ஸல்) அவர்களிடம் (தண்டனையைத் தளர்த்தும்படிக் கூறி பரிந்து) பேசுவது யார்?' என்று (தமக்குள்) விசாரித்துக் கொண்டனர். எவரும் நபி(ஸல்) அவர்களிடம் பேசத் துணியவில்லை. உஸாமா இப்னு ஸைத்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப் பரிந்து) பேசினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பனூ இஸ்ராயீல் குலத்தார் தம்மிடையேயுள்ள வலியவர் (உயர் குலத்தவர்) எவரேனும் திருடிவிட்டால் அவரை தண்டிக்காமல்விட்டுவிடுவார்கள்; தம்மிடையேயுள்ள பலவீனர் எவரேனும் திருடிவிட்டால் அவரின் கையை துண்டித்து விடுவார்கள். திருடியவர் (என் மகள்) ஃபாத்திமாவாகவே இருந்தாலும் கூட அவரின் கையை நான் துண்டித்திருப்பேன்' என்று கூறினார்கள்.
Book :62
3734. அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) ஒரு நாள் பள்ளிவசாலில் இருந்த பொழுது பள்ளி வாசலின் ஒரு மூலையில் தன் ஆடையை (மண்ணில் புரளும்படி) இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருந்த ஒரு மனிதரைப் பார்த்தார்கள். உடனே, 'இவர் யார் என்று பார். இவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நன்றாயிருக்குமே (நான் இவருக்கு புத்திமதி சொல்லியிருப்பேனே)' என்று கூறினார்கள். அவர்களிடம் ஒருவர், 'அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர்) அவர்களே! இவரை உங்களுக்குத் தெரியாதா? இவர்தான் உஸாமா(ரலி) அவர்களின் மகன் முஹம்மது' என்று கூறினார். இதைக் கேட்ட இப்னு உமர்(ரலி) தம் தலையைத் தாழ்த்திக் கொண்டு தம் கையால் தரையில் (கொத்துவது போல்) தட்டிய பிறகு, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவரைப் பார்த்தால் இவரை நேசிப்பார்கள்' என்று கூறினார்கள்.
Book :62
3735. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து 'இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன்; நீயும் நேசிப்பாயாக!' என்று பிரார்த்திப்பார்கள்.
Book :62