3736. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்.
உம்மு அய்மனின் மகனான அய்மனின் மகன் ஹஜ்ஜாஜ் என்பவர் (பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த போது) தம் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்யாமலிருப்பதைக் கண்டு இப்னு உமர்(ரலி), 'மீண்டும் தொழுங்கள்' என்று கூறினார்கள.
'உம்மு அய்மனின் மகனான அய்மன், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் தாய் வழிச் சகோதரராய் இருந்தார்; மேலும் அன்சாரிகளில் ஒருவராகவும் இருந்தார்.'
Book :62
3737. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட ஹர்மலா(ரஹ்) கூறினார்.
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தபோது ஹஜ்ஜாஜ் இப்னு அய்மன் (பள்ளிவாசலுக்குள்) நுழைந்(து தொழு)தார். அப்போது அவர் தன் ருகூவையும் முழுமையாக நிறைவேற்றவில்லை; தன் சுஜூதையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜாஜை நோக்கி), 'திரும்பத் தொழுங்கள்' என்று கூறினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது என்னிடம் இப்னு உமர்(ரலி), 'யார் இவர்?' என்று கேட்டார்கள். நான், 'உம்மு அய்மனின் மகன் அய்மனுடைய மகன் ஹஜ்ஜாஜ் தான் இவர்' என்று சொன்னேன். அதற்கு இப்னு உமர்(ரலி), 'இவரை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்திருந்தால் இவரை நேசித்திருப்பார்கள்' என்று கூறினார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், (உஸாமா - ரலி - அவர்களின் மீது) கொண்டிருந்த நேசத்தையும் உம்மு அய்மன்(ரலி) பெற்றெடுத்த (மற்ற) பிள்ளைகளின் மீதும் கொண்டிருந்த நேசத்தையும் இப்னு உமர்(ரலி) நினைவு கூர்ந்தார்கள்.
அறிவிப்பாளர்: சுலைமான் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:
உம்மு அய்மன்(ரலி) நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புத் தாயாக இருந்தார்கள்.
Book :62
பாடம் : 19 அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் -ரலியல்லாஹு அன்ஹுமா- அவர்களின் சிறப்புகள்.118
3738. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்த காலத்தில் ஒருவர் கனவொன்றைக் காண்பாராயின் நபி(ஸல்) அவர்களிடம் விவரித்துச் செல்வார். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் விசாரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாசலில் நான் உறங்குவது வழக்கம். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்; வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரண்டு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், 'நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறேன்.' என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், 'இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்' என்று கூறினார். நான் இதை (என் சகோதரியும் நபி - ஸல் அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன்.
Book : 62
3739. ஹஃப்ஸா(ரலி) அதை நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)' என்று கூறினார்கள்.
(இதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் - ரலி - அவர்களின் மகன்) சாலிம்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்' என்று கூறுகிறார்கள்.
Book :62
3740. & 3741. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு நல்ல மனிதர்' என்று கூறினார்கள்.
இதை தம் சகோதரி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.
Book :62
3742. அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) கூறினார்.
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். (அங்கு பள்ளி வாசலுக்குச் சென்று) இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு' என்று பிரார்த்தித்தேன். பிறகு, ஒரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது முதியவர் ஒருவர் வந்து என் பக்கத்தில் அமர்ந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், '(இவர்தான் நபித்தோழர்) அபுத்தர்தா' என்று பதிலளித்தார்கள். நான், அபுத் தர்தா(ரலி) அவர்களை நோக்கி, 'எனக்கு ஒரு நல்ல நண்பரை அறிவிக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். எனவே, அவன் உங்களை எனக்குக் கொடுத்திருக்கிறான்' என்று சொன்னேன். அதற்கு அபுத்தர்தா(ரலி), 'நீங்கள் எந்த ஊர்க்காரர்?' என்று கேட்டார்கள் .நான் கூஃபாவாசி என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நபியவர்களின் செருப்புகளையும் தலையணைகளையும் தண்ணீர்க்குவளையையும் சுமந்து வந்த உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)) உங்களிடையே இல்லையா? தன் நபியின் வாயால் எவரை அல்லாஹ் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றினானோ அவர் (அம்மார் (ரலி) உங்களிடையே இல்லையா? மேலும் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா (ரலி) உங்களிடையே இல்லையா?' என்று கேட்டுவிட்டு, பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், 'வல்லய்லி இதா யஃக்ஷா' என்று தொடங்கும் (திருக்குர்ஆனின் 92-ம் அத்தியாயம் அல்லைலின்) இறைவசனங்களை எப்படி ஓதுகிறார்' என்று கேட்டார்கள். நான், 'அவர்களுக்கு, 'வல்லய்லி இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வத்தகரி வல் உன்ஸர்' (- இப்படித் தான் ஓதுவார்கள்) என்று ஓதிக்காட்டினேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள்.
Book :62
3743. அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்.
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக' என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) 'நீங்கள் எந்த ஊர்க்காரர்?' என்று கேட்டார்கள். அதற்கு நான் 'கூஃபா வாசி' என்றேன். அபுத்தர்தா(ரலி) '(நபி - ஸல் - அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?' என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், 'ஆம் (இருக்கிறார்)' என்று பதிலளித்தேன். அவர்கள், 'தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார்... அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் 'ஆம் (இருக்கிறார்)' என்று பதிலளித்தேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்... அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (இருக்கிறார்)' என்று பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி) 'வல்லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா' என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?' என்று கேட்க, 'வத்தகரில் வல் உன்ஸர்' என்று கேட்க, 'வத்தகரி வல் உன்ஸா' என்று ('வ மா கலக்க' என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி), '(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை)விட்டுக் கொடுத்து விடும் படி என்னனை எச்சரிக்கிறார்கள்' என்று கூறினார்கள்.
என இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்.
Book :62
பாடம் : 21 அபூ உபைதா பின் ஜர்ராஹ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.123
3744. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.
என அனஸ்(ரலி) மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 62
3745. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பகத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த 'அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
Book :62
பாடம் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு.125 பாடம் : 22 ஹஸன் மற்றும் ஹுஸைன்- ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகியோரின் சிறப்புகள்.126 நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைக் கட்டித் தழுவிக் கொண் டார்கள் என்று நாஃபிஉ பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிட மிருந்து அறிவிக்கிறார்கள்.127
3746. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் (மேடை) மீது (உரையாற்றியபடி) இருக்க ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் பக்க வாட்டில் அமர்ந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களையும் மறு முறை ஹஸன்(ரலி) அவர்களையும் நோக்கியபடி, 'இந்த என்னுடைய (மகளின்) மகன் மக்களின் தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு குழுவினரிடையே இவர் வாயிலாக அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்தவிருக்கிறான்' என்று சொல்ல கேட்டேன்.
Book : 62
3747. உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் (கையில்) எடுத்து, 'இறைவா! நான் இவ்விருவரையும் நேசிக்கிறேன். நீயும் இவ்விருவரையும் நேசிப்பாயாக' என்று கூறினார்கள்.
Book :62
3748. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி - அவர்கள் கர்பலாவில் கொல்லப்பட்ட பின்) அவர்களின் தலை, உபைதுல்லாஹ் இப்னு ஸியாதிடம் கொண்டு வரப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டது. உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் (ஒரு கைக் குச்சியால் அதன் மூக்கிலும் கண்ணிலும்) குத்தத் தொடங்கினான். மேலும் ஹுஸைன்(ரலி) அவர்களின் அழகைக் குறித்து ஏதோ சொன்னான்.
அனஸ்(ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் தூதருடைய குடும்பத்தாரிலேயே ஹுஸைன்(ரலி) தாம் தோற்றத்தில் அல்லாஹ்வின் தூதரவர்களுக்கு அதிக ஒப்பானவர்களாய் இருந்தார்கள். 'வஸ்மா' என்னும் ஒரு வகை மூலிகையால் தம் (தாடிக்கும் முடிக்கும்) சாயாமிட்டிருந்தார்கள்.
Book :62
3749. பராஉ(ரலி) அறிவித்தார்.
அலீ(ரலி) அவர்களின் மகன் ஹஸன்(ரலி), நபி(ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.
Book :62
3750. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்
அபூ பக்ர்(ரலி) ஹஸன்(ரலி) அவர்களைச் சுமந்தபடி, 'என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் (உங்கள் பாட்டனார்) நபி(ஸல்) அவர்களைத் தான் (உருவ அமைப்பில்) ஒத்திருக்கிறீர்கள். (உங்கள் தந்தையான) அலீ அவர்களை ஒத்திருக்கவில்லை' என்று சொல்லக் கண்டேன். அப்போது அலீ(ரலி) (அதைக் கேட்டு) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
Book :62
3751. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்து வாருங்கள்; அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்) என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.
Book :62
3752. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களை விட நபி(ஸல்) அவர்களை (உருவ அமைப்பில்) ஒத்தவர்களாக வேறெவரும் இருக்கவில்லை.
Book :62
3753. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்), 'இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன்' என்று கூறுகிறார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனைக்) கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் இருவரும் (ஹஸன் - ரலி - அவர்களும் ஹுசைன் -ரலி - அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்' என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்' எனக் கூறினார்கள்.
Book :62
பாடம் : 23 அபூபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பிலால் பின் ரபாஹ் - ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.135 (பிலாலே!) சொர்க்கத்தில் உமது காலணிகளின் ஓசையை எனக்கு முன்பாக நான் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.136
3754. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி), 'அபூ பக்ர் எங்கள் தலைவராவார். அவர்கள், எங்கள் தலைவர் பிலாலை (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தார்கள்' என்று சொல்வார்கள்.
Book : 62
3755. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) கூறினார்.
பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் உங்களுக்காக (அடிமையான) என்னை விலைக்கு வாங்கியிருந்தால் என்னை (மதீனாவிலேயே) வைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் வாங்கியிருந்தால் என்னை அல்லாஹ்வுக்காக செயலாற்றவிட்டு விடுங்கள்' என்று கூறினார்கள்.
Book :62