பாடம் : 24 (அப்துல்லாஹ்) இப்னு அப்பாஸ் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.138
3756. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
என்னை நபி(ஸல்) அவர்கள் தம் நெஞ்சோடணைத்து, 'இறைவா! இவருக்கு ஞானத்தைக் கற்றுத் தருவாயாக!' எனப் பிரார்த்தித்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், 'இறைவா! இவருக்கு (உன்) வேதத்தைக் கற்றுத் தருவாயாக!' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இதே ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'ஹிக்மத்' என்னும் ஞானம் என்பது, தூதுத்துவம் அல்லாத விஷயங்களில் சரியான கருத்தை அறிந்து கொள்வது என்று பொருள்.
Book : 62
பாடம்: 25 கா-த் பின் வலீத் -ரலியல்லாஹு அன்ஹு - அவர்களின் சிறப்புகள்.140
3757. அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு ஹாரிஸா) அவர்களும் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா அவர்களும் (மூத்தா போர்க் களத்தில்) உயிர்நீத்துவிட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
'(முதலில்) இஸ்லாமியச் சேனையின் கொடியை ஸைத் (தம் கையில்) எடுத்தார்; அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் (தம் கையில்) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு இப்னு ரவாஹா (தம் கையில் கொடியை) எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில் அக்கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (காலித் இப்னு வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரின் கரத்தில்) முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்துவிட்டான்' என்று (போர்க்கள நிகழ்ச்சிகளை விவரித்துச்) கூறினார்கள்.
Book : 62
பாடம் : 26 அபூ ஹுதைஃபா அவர்களால் விடுதலை செய்யப்பட்ட சாலிம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.142
3758. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா(ரஹ்), 'அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா, முஆத்(ரலி) அவர்களை முதலாவதாகச் சொன்னாரா (இவர்களிருவரில் யாரை முதலில் குறிப்பிட்டார்) என்று எனக்குத் தெரியாது' என்று கூறுகிறார்கள்.
Book : 62
பாடம் : 27 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.143
3759. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற் குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்' என்று கூறினார்கள்.
மேலும், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 62
3760. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்.
நான் ஷாம் நாட்டிற்குள் சென்று (பள்ளிவாசலில்) இரண்டு ரக்அத்துகள் தொழுதேன். அப்போது, 'இறைவா! எனக்கு ஒரு நண்பரை ஏற்படுத்துவாயாக!' என்று பிரார்த்தித்தேன். அப்போது முதியவர் ஒருவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அவர் அருகே வந்ததும், 'அல்லாஹ் என் பிரார்த்தனைக்குப் பதிலளித்துவிட்டதாக நம்புகிறேன்' என்று சொன்னேன். அந்த முதியவர், 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டார். 'நான் கூஃபாவாசி' என்று பதிலளித்தேன். அவர், 'நபி(ஸல்) அவர்களின் காலணிகளையும் தலையணையையும், தண்ணீர்க் குவளையையும் (சுமந்து பணிவிடை புரிந்து) கொண்டிருந்தவர் (இப்னு மஸ்வூத்) உங்களிடையே இல்லையா? ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்டவர் (அம்மார்) உங்களிடையே இல்லையா? நபி(ஸல்) அவர்கள் அறிவித்த, வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் (ஹுதைஃபா) உங்களிடையே இல்லையா?' என்று கேட்டார். 'உம்மு அப்தின் மகன் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) 'வல் லய்லி' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் அத்தியாயம் 92ன்) இறை வசனங்களை எப்படி ஓதினார்கள்?' என்று மேலும் கேட்டார். நான், 'வல் லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா வத் தகரி வல் உன்ஸா' என்று (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதுவதைப் போன்று) ஓதிக் காட்டினேன். அம்முதியவர், 'நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) எனக்கு அதை ஓதிக்காட்டினார்கள். ஆனால், (ஷாம் வாசிகளான) இவர்கள் (அதைவிட்டுவிட்டு புதிய முறையில் ஓதும்படி) என்னைத் திருப்ப முனைந்து கொண்டேயிருந்தனர்' என்று கூறினார்கள்.
Book :62
3761. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்.
உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி(ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்குக் காட்டும்படி) ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்வூதை) விட வேறெவரையும் நான் அறியமாட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :62
3762. அப்துர் ரஹ்மான் பின் யஸித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி (ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்கு காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்தின் மகனை (இப்னு மஸ்ஊதை) விட வேறெவரையும் நான் அறிய மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.
Book :62
3763. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி(ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி(ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.
Book :62
பாடம் : 28 முஆவியா -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் பற்றிய குறிப்பு.147
3764. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
முஆவியா(ரலி), தம்மிடம் இப்னு அப்பாஸ்(ருலி) அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றார். (முஆவியா - ரலி - அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(ரலி), 'அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்.
Book : 62
3765. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் நம்பிக்கையாளர்களின் தலைவர் முஆவியா(ரலி) விஷயமாக ஏதும் கூற விரும்புகிறீர்களா? ஏனெனில், அவர் வித்ரை ஒரேயொரு ரக்அத்தாகத் தான் தொழுகிறார்' என்று கூறப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'முஆவியா (மார்க்கச்) சட்ட நிபுணராவார்' என்று பதிலளித்தார்கள்.
Book :62
3766. ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்) அறிவித்தார்.
முஆவியா(ரலி), 'நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், அவர்கள் தொழக் கண்டிராத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்துகளையும் - அஸர் தொழுகைக்குப் பின் (உங்களில் சிலர் தொழுகின்ற) இரண்டு ரக்அத்துகளையும் தொழ வேண்டாமென்று தடை விதித்துள்ளார்கள்' என்று கூறினார்கள்.
Book :62
பாடம் : 29 ஃபாத்திமா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களின் சிறப்புகள்.149 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திமா சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவியாவார்.150
3767. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எனவே, அவருக்குக் கோபமூட்டியவர் எனக்குக் கோபமூட்டியவராவார்.
என மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
Book : 62
பாடம் : 30 ஆயிஷா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களின் சிறப்பு.152
3768. ஆயிஷா(ரலி) கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள், 'ஆயிஷே! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்' என்று கூறினார்கள். நான், சலாமுக்கு பதில் கூறும் முகமாக 'வ அலைஹிஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு' அவரின் மீதும் சலாம் (இறை சாந்தி) பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும்' என்று பதில் முகமன் சொல்லிவிட்டு, 'நான் பார்க்க முடியாதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
Book : 62
3769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும், ஃபிர் அவ்னின் மனைவி ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. (உலகின் மற்ற) பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) எல்லா உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :62
3770. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்றும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :62
3771. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) நோயுற்றார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (நலம் விசாரிக்க) வந்து, 'இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! வாய்மையில் முந்தியவர்களான அல்லாஹ்வின் தூதரும் அபூ பக்ரும் காத்திருக்கும் இடத்திற்கு (சொர்க்கத்திற்கு) நீங்கள் செல்லவிருக்கிறீர்கள்' என்று (ஆறுதல்) கூறினார்கள்.
Book :62
3772. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.
(கலீஃபா) அலீ(ரலி) (தமக்கு ஆதரவாக 'ஜமல்' போரில் கலந்து கொள்ளும்படி) மக்களை அழைப்பதற்கு அம்மார் இப்னு யாசிர்(ரலி) அவர்களையும், (தம் புதல்வர்) ஹஸன்(ரலி) அவர்களையும் 'கூஃபா' நகருக்கு அனுப்பி வைத்தபோது (மக்களுக்கு) அம்மார் உரையாற்றினார்கள். அப்போது (தம் உரையில்) 'நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா இந்த உலகிலும் மறுமையிலும் மனைவியாவார்கள் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனினும், 'நீங்கள் (கலீஃபாவின் உத்தரவுக்கு இணங்கி நடப்பதன் மூலம்) அல்லாஹ்வி(ன் கட்டளைத)னைப் பின்பற்றுவதா? அல்லது ஆயிஷாவி(ன் யோசனைத)னைப் பின்பற்றுவதா?' என (முடிவு செய்ய வேண்டிய நிலைக்கு) உங்களை (ஆளாக்கி) அல்லாஹ் சோதனையில் ஆழ்த்திவிட்டான்' என்று கூறினார்கள்.
Book :62
3773. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
ஆயிஷா(ரலி) (தம் சகோதரி) அஸ்மா(ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்ற இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம், தோழர்களில் சிலரை அதைத் தேடுவதற்காக அனுப்பினார்கள். அப்போது அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் உளூவின்றித் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் (திரும்பிச்) சென்றபோது தண்ணீர் கிடைக்காததால் தமக்கேற்பட்ட நெருக்கடியான நிலையை முறையிட்டார்கள். அப்போதுதான் 'தயம்மும்' உடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த ஆயிஷா(ரலி) அவர்களை நோக்கி) உஸைத் இப்னு ஹுளைர்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஒரு துன்பம் நேரும் போதெல்லாம் அதிலிருந்து விடுபடுகிற வழியொன்றை அல்லாஹ் உங்களுக்குத் தராமலிருந்ததில்லை; மேலும், அதில் முஸ்லிம்களுக்கு அருள் வளம் ஒன்றைத் தராமலும் இருந்ததில்லை' என்று கூறினார்கள்.
Book :62
3774. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தபோது தம் மனைவிமார்களிடையே (நிச்சயித்த முறைப்படி ஒரு நாளைக்க ஒருவரின் விடு என்று) செல்லத் தொடங்கினார்கள். 'என் (முறைக்குரிய) நாள் வந்தபோது தான் அமைதியடைந்தார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
Book :62
3775. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நாடுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்' என்று கேட்டுக் கொண்டனர்.
(உம்மு ஸலமா(ரலி) கூறினார்:)
நான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவாக்ளிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், 'உம்மு ஸலமாவே! ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை' என்று பதிலளித்தார்கள்.
Book :62