பாடம் : 1 நபித்தோழர்களின் சிறப்புகளும், முஸ்லிம் களில் எவர் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டாரோ, அல்லது அவர் களைப் பார்த்தாரோ அவர் நபித்தோழர் ஆவார் என்பதும்.1
3776. ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார்.
நான் அனஸ்(ரலி) அவர்களிடம், '(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) 'அன்சார் - உதவியாளர்கள்' என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?' என்று கேட்டேன். அவர்கள், 'அல்லாஹ் தான் எங்களுக்கு ('அன்சார்' என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது 'அஸ்த்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை... நோக்கி, 'உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்' என்று சொல்வார்கள்.
Book : 63
3777. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான்.
Book :63
3778. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் 'அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, 'உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?' என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், '(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்' என்று பதிலளிதார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்' என்று கூறினார்கள்.
Book :63
பாடம் : 2 ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது.4 இதை அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.5
3779. அபுல் காசிம்... ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.
இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே, இப்படிக் கூறினார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும் (நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களுக்கும் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவினார்கள்' என்றோ... (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ கூறினார்கள்.
Book : 63
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது.7
3780. இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்.
(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதர்(ஸல) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), 'நான் அன்சாரிகளில் அதிக செல்வம் உடையவன். என் செல்வத்தை இரண்டு பாதிகளாக்கிப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்பவளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளைத் தலாக் (மண விலக்கு) செய்து விடுகிறேன். அவளுடைய 'இத்தா' காலம் விடுகிறேன். அவளுடைய 'இத்தா' காலம் முடிந்த பின் அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?' என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு 'பனூகைனுகா' கடை வீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒரு நாள் தம் மீது (நறுமணப் பொருள் தடவிக் கொண்டிருந்தால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களை நோக்கி, 'என்ன இது?' என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நான் மணம் புரிந்து கொண்டேன்' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு எவ்வளவு (மஹ்ர்) கொடுத்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்... அல்லது ஒரு பேரீச்சம் கொட்டையின் எடையளவு தங்கம்..' என்று பதிலளித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்' என்று கூறினார்களா, 'ஒரு பேரீச்சம் கொட்டை எடையளவு தங்கம்' என்று கூறினார்களா என அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) சந்தேகப்படுகிறார்கள்.
Book : 63
3781. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். - ஸஅத்(ரலி), 'அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வததை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்' என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்' என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்யையும், இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம் தான் சென்றிருக்கும். அதற்குள் அவர்கள் தம் மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என்ன இது?' என்று கேட்க, 'நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்தேன்' என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு என்ன (மஹ்ர்) கொடுத்தீர்கள்?' என்று கேட்டதற்கு அவர்கள், 'ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்... அல்லது ஒரு பேரீச்சங் கொடையளவு தங்கம்' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) வலீமா (மண விருந்து) கொடு' என்று கூறினார்கள்.
Book :63
3782. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(நபி - ஸல் - அவர்களிடம்) அன்சாரிகள், 'எங்களுக்கும் (முஹாஜிர்களான) அவர்களுக்குமிடையே (எங்கள்) பேரீச்ச மரங்களைப் பங்கிடுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்று சொல்ல அவர்கள், '(அப்படியென்றால்) அவர்கள் (முஹாஜிர் சகோதரர்கள்) எங்களுக்காக உழைக்கட்டும்; எங்களுடன் விளைச்சலில் (இலாபப்) பங்கு பெறட்டும்' என்று கூறினார்கள். முஹாஜிர்கள், (அதற்கு சம்மதித்து) 'நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் என்று கூறினார்.
Book :63
பாடம் : 4 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
3783. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
என பராஉ(ரலி) அறிவித்தார்.
Book : 63
3784. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :63
பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், நீங்கள் எனக்கு மக்களிலேயே மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னது.
3785. அனஸ்(ரலி) கூறினார்.
(அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்' ஒரு மணவிழாவிலிருந்து வருவதை' என்று சொன்னதாக நினைக்கிறேன் - உடனே நின்று கொண்டு, 'இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்' என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
Book : 63
3786. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்' என்று இரண்டு முறை கூறினார்கள்.
Book :63
பாடம் : 6 அன்சாரிகளைப் பின்தொடந்த (நட்புக் கூட்டங்கள் மற்றும் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட)வர்கள்.
3787. ஸைத் இப்னு அர்கம்(ரலி) கூறினார்.
அன்சாரிகள் (நபி - ஸல் - அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! இறைத்தூதர்களை ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின் பற்றினோம். எனவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
Book : 63
3788. அன்சாரிகளில் ஒருவரான அபூ ஹம்ஸா(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகள் (நபி - ஸல் அவர்களிடம்), 'ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.
Book :63
பாடம் : 7 அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களின் சிறப்பு
3789. அபூ உஸைத்(ரலி)அவர்கள் அறிவித்தார்.
'அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனவே காண்கிறேன்' என்று கூறினார்கள். அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்' என்று சொல்லப்பட்டது.
மற்றோர் அறிவிப்பில், 'ஸஅத் இப்னு உபாதா' என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறினார்.
Book : 63
3790. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளில் சிறந்தோர்... அல்லது அன்சாரிகளின் கிளைக்குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமும், பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமும் மற்றும் பனூ ஹாரிஸ், பனூ சாஇதா குடும்பங்களும் ஆகும்.
என அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்.
Book :63
3791. அபூ ஹுமைத்(ரலி) அறிவித்தார்.
'அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி) எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூ உஸைத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபி(ஸல்) அவர்களை அடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தினரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் மிகச் சிறந்(குடும்பத்)தவர்களில் இடம் பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?' என்று கூறினார்கள்.
Book :63
பாடம் : 8 நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், என்னை (மறுமையில்) தடாகத்தின் அருகே சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள் என்று சொன்னது. இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.20
3792. உஸைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்.
அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இன்னாரை நீங்கள் அதிகாரியாக நியமித்தது போல் என்னையும் அதிகாரியாக நியமிக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'எனக்குப் பிறகு (உங்களை விட) மற்றவர்களுக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில் எனக்குச் சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் 'ஹவ்ளுல்கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள்' என்று கூறினார்கள்.
Book : 63
3793. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம், 'எனக்குப் பிறகு (உங்களை விட ஆட்சியதிகாரத்தில் மற்றவர்களுக்கு) முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, (மறுமையில்) என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுமையாக இருங்கள். என்னைச் சந்திக்க உங்களுக்குக் குறித்துள்ள இடம் (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாக இறைவன் வழங்கிவருக்கும் ஹவ்ளுல் கவ்ஸர் எனும்) தடாகமேயாகும்.
Book :63
3794. யஹ்யா இப்னு ஸயீத்(ரலி) அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவாக்ள் என்னுடன் பயணமாம் வலீத் இப்னு அப்தில் மலிக்கைச் சந்தித்தபோது (வலீத் இடம்) கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய நிலங்களை வருவாய் மானியமாக எங்களுக்குத் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், 'எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் இதே போன்று மானியம் தந்தாலே தவிர நாங்கள் இதை ஏற்க மாட்டோம்' என்று கூறினர். 'நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள் என்றால், என்னை (மறுமையில் ஹவ்ளுல் கவ்ஸர் தாடாகத்தின் அருகே) சந்திக்கம் வரை பொறுத்திருங்கள். ஏனெனில், எனக்குப் பின் (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலை உங்களுக்கு நேரும்' என்று கூறினார்கள்.
Book :63
பாடம் : 9 நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளின் நிலையையும் முஹாஜிர்களின் நிலையையும் செம்மைப்படுத்துஎன்று பிரார்த்தித்தது.
3795. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக' என்று (பாடியபடி) சொன்னார்கள்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'அன்சாரிகளுக்கு(ம் முஹாஜிர்களுக்கும்) நீ மன்னிப்பு அளிப்பாயாக' என்று பாடியபடி கூறினார்கள் என உள்ளது.
Book : 63