3796. அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்.
அகழ்ப்போர் நாளில் அன்சாரிகள், 'நாங்கள் (எத்தயைவர்கள் எனில்), 'நாங்கள் உயிரோடியிருக்கும் காலம் வரை அறப்போர் புரிவோம்' என்று முஹம்மத்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்' என்று (பாடியபடிக்) கூறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!' என்று (பாடிய படியே) கூறினார்கள்.
Book :63
3797. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!' என்று (பாடியபடி) கூறினார்கள்.
Book :63
பாடம் : 10 அல்லாஹ் கூறுகிறான்: தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். (59:9)
3798. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.'.. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.'.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு' என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் கூடு, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்' என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.
Book : 63
பாடம் : 11 நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் நன்மை புரிவோரிடமிருந்து ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்பவர்களை மன்னித்து விடுங்கள் என்று சொன்னது.
3799. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(நபி - ஸல் - அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தம் சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி), 'நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்)' என்று பதிலளித்தார்கள்.
அப்பாஸ்(ரலி) (அல்லது அபூ பக்ர்(ரலி)), நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிகழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை - அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, 'அன்சாரிகளின் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்துக் கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றிவிட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. எனவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 63
3800. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு (வீட்டிலிருந்து பள்ளி வாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்களின் மீது கருப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. மிம்பரிம் (மேடை) மீது சென்று அமர்ந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனைப் போற்றிப் பிறகு கூறினார்கள்; பிறகு, மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்) உணவில் உப்பைப் போன்று ஆகிவிடும். அளவிற்கு குறைந்து போய்விடுவார்கள். எனவே, ஒருவருக்கு நன்மையளிக்கக் கூடிய, அல்லது தீங்கு செய்யக் கூடிய (அளவிற்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால் அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக் கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும்.
Book :63
3801. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அன்சாரிகள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். இனி (அன்சாரிகள் அல்லாத) மக்கள் பெருகுவார்கள்; (அன்சாரிகள்) குறைந்து போய் விடுவார்கள். எனவே, அவர்களில் நன்மை புரிபவர்களிடமிருந்து (அதை) ஏற்றுக் கொள்ளுங்கள்; அவர்களில் தவறிழைப்பவர்களை (பெருந்தன்மையுடன்) மன்னித்து விடுங்கள்.'
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :63
பாடம் : 12 சஅத் பின் முஆத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.31
3802. பராஉ(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 63
3803. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...
ஒருவர் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'பராஉ(ரலி), 'ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்' என்று சொன்னதற்கு ஜாபிர்(ரலி), 'இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரண்டு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :63
3804. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபியவர்கள் தற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திறகு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சிறந்தவரை... அல்லது உங்கள் தலைவரை.. நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள்' என்று கூறினார்கள். பிறகு, 'சஅதே! இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?)' என்று கேட்டார்கள். ஸஅத்(ரலி), 'இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்படவேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்படவேண்டும் என்றும் நான் இவர்களிடையே தீர்ப்பளிக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தீர்ப்புப் படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்.'. அல்லது 'அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்' என்று கூறினார்கள்.
Book :63
பாடம் : 13 உசைத் பின் ஹுளைர் (ரலி) மற்றும் அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோரின் சிறப்பு.37
3805. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(நபித் தோழர்களில்) இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடை பெற்றுக் கொண்டு) இருண்ட ஓர் இரவில் (தம் இல்லங்களுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவ்விருவருக்கும் முன்னால் ஒளி ஒன்று பிரகாசித்தபடி அவர்கள் ஒருவரை ஒருவர் பிரியும் வரை சென்று கொண்டேயிருந்தது. (அவர்கள்) ஒருவரையொருவர் பிரிந்து சென்றவுடன்) அந்த ஒளியும் அவர்களுடன் பிரிந்து சென்றுவிட்டது.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக மஅமர்(ரஹ்) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'இரண்டு மனிதர்கள்' என்பதற்கு பதிலாக, 'உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அன்சாரிகளில் ஒரு மனிதரும்' என்று இடம் பெற்றுள்ளது.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே ஸாபித்(ரஹ்) வழியாக ஹம்மாத்(ரஹ்) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில், 'உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அவர்களும் அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) அவர்களும் நபி(ஸல் அவர்களிடம் இருந்தனர். (இருவரும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தம் இல்லங்களுக்குச் சென்ற போது)' என்று இடம் பெற்றுள்ளது.
Book : 63
பாடம் : 14 முஆத் பின் ஜபல் -ரலியல்லாஹு அன்ஹு -அவர்களின் சிறப்புகள்.39
3806. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்.
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 63
பாடம் : 15 சஅத் பின் உபாதா -ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பு.41 (சஅத் -ரலி- அவர்களைப் பற்றி) அவர்கள் அதற்கு முன் நல்ல மனிதராக இருந்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.42
3807. அனஸ்(ரலி) அறிவித்தார்.
'அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பம் ஆகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பம் ஆகும். பிறகு பனூல் ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பம் ஆகும். பிறகு பனூ சாஇதா குடும்பம் ஆகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ உசைத்(ரலி) அறிவித்தார்.
அப்போது ஸஅத் இப்னு உபாதா(ரலி) இஸ்லாத்தில் செல்வாக்கு உடையவர்களாக அன்னார் இருந்தார்கள். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மை விட (மற்ற குடும்பங்களை) சிறப்புக்குரியவர்களாக ஆக்கிவிட்டதை நான் பார்க்கிறேன்' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'உங்களை நபி(ஸல்) அவர்கள் நிறைய மக்களை விடச் சிறப்பித்துக் கூறினார்கள்' என்று சொல்லப்பட்டது.
Book : 63
பாடம் : 16 உபை பின் கஅப் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.44
3808. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) குறித்துக் கூறப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்: அவர் நான் நேசித்துக கொண்டேயிருக்கும் ஒருவர். (ஏனெனில்,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமை சாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை (ஓதும் முறையை) எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்ல கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களையே முதலில் குறிப்பிட்டார்கள்.
Book : 63
3809. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..' என்றும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப்(ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.
Book :63
பாடம் : 17 ஸைத் பின் ஸாபித்-ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.46
3810. கதாதா(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்' என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்' என்று பதிலளித்தார்கள்.
Book : 63
பாடம் : 18 அபூதல்ஹா - ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள்.47
3811. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை(த் தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
மேலும், அபூதல்ஹா(ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்' என்று கூறினார்கள்.
அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் உற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.
Book : 63
பாடம் : 19 அப்துல்லாஹ் பின் சலாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.49
3812. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி' என்று சொல்லி நான் கேட்டதில்லை; அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு யூசுஃப்(ரஹ்) கூறினார்:
(இதை அறிவித்த இமாம்) மாலிக்(ரஹ்) இந்த இறைவசனம் அருளப்பட்டதால் (தாமாகவே) கூறினார்களா அல்லது இந்த ஹதீஸிலேயே (இந்த இறைவசனம்) இடம் பெற்றிருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.
Book : 63
3813. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்.
நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்; அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வீன் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக்கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்திவிட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி(ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) தாம்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 'பணியாள்' என்பதற்கு பதிலாக 'சிறிய பணியாள்' என்னும் சொல் இடம் பெற்றுள்ளது.
Book :63
3814. அபூ புர்தா ஆமிர்(ரஹ்) அறிவித்தார்.
நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), 'நீங்கள் (என்னுடன்) வர மாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேழீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் நபி(ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே' என்று கேட்டார்கள். பிறகு, 'நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து. அவர் ஒரு வைக்கோல் போரையோ, வாற்கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அதுவும் வட்டியாகும்' என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், '(என்) வீட்டிற்கு' என்னும் சொல் இடம் பெறவில்லை.
Book :63
பாடம் : 20 கதீஜா -ரலியல்லாஹு அன்ஹா- அவர்களை நபி (ஸல்) அவர்கள் மணமுடித்துக் கொண்டதும் கதீஜா (ரலி) அவர்களின் சிறப்பும்.50
3815. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகின் பெண்களிலேயே (அன்று) சிறந்தவர் மர்யம் ஆவார். (இன்று) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார்.
என அலீ(ரலி) அறிவித்தார்.
Book : 63