3929. காரிஜா இப்னு ஸைத் இப்னி ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான (என் தாயார்) உம்முல் அலா(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
(மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த) முஹாஜிர்களின் தங்குமிடத்தி(னை முடிவு செய்வதற்)காக அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பெயர் எங்கள் பங்கில் வந்தது. எங்களிடம் (வந்து தங்கிய) உஸ்மான்(ரலி) நோய் வாய்ப்பட்டார். எனவே, அவருக்கு நான் நோய்க் காலப் பணிவிடைகள் செய்து வந்தேன். இறுதியில் அவர் இறந்தும்விட்டார். அவருக்கு அவரின் துணிகளால் கஃபனிட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்த உஸ்மானை நோக்கி) 'அபூ சாயிபே! அல்லாஹ்வின் கருணை உங்களின் மீது உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் பகர்கிறேன்' என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்திவிட்டான் என்று உனக்கெப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். நான், 'எனக்குத் தெரியாது. என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ் இவரை கண்ணியப்படுத்தாவிட்டால் பின்) யாரைத் தான் (கண்ணியப்படுத்துவான்)' என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கோ மரணம் வந்துவிட்டது; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எப்படி நடந்து கொள்ளப்படும் என்பதே அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்குப் பிறகு எவரையும் நான் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் தூங்கியதும் (கனவில்) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்குரிய ஓர் ஆறு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருப்பதாகக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அவரின் (நற்) செயல்' என்று கூறினார்கள்.
Book :63
3930. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'புஆஸ்' போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன் கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும், அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டு விட்டிருந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தில் இணைய ஏதுவான நிலை உருவாகியிருந்தபோது தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள்.
Book :63
3931. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஈதுல் பித்ர்... அல்லது ஈதுல் அள்ஹா... (பெரு) நாளில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் அமர்ந்திருந்தபோது அபூ பக்ர்(ரலி) என்னிடம் வந்தார்கள். அப்போது 'புஆஸ்' போர் நாளில் அன்சாரிகள் பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராவை அடித்துக் கொண்டு) பாடியபடி இரண்டு பாடகிகள் என்னருகே இருந்தனர். அபூ பக்ர்(ரலி), 'ஷைத்தானின் (இசைக்) கருவி' என்று இருமுறை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவ்விருவரையும்விட்டுவிடுங்கள், அபூ பக்ரே! ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பண்டிகை (நாள்) ஒன்று உண்டு. நம்முடைய பண்டிகை (நாள்) இந்த நாள் தான்' என்று கூறினார்கள்.
Book :63
3932. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது மதீனாவின் மேற்பகுதியில் 'பனூ அம்ர் இப்னு அவ்ஃப்' என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்றும் முகமாக) தம் வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூ பக்ர்(ரலி), அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி) தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியாக, நபி(ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை) அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் நிறுத்தினார்கள். - தொழுகை நேரம் (தம்மை) வந்தடையும் இடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள் - பிறகு நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்ப, அவர்கள் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (பள்ளிவாசல் கட்டுவதற்காக) உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்' என்று பதிலளித்தார்கள். நான் உங்களிடம் சொல்பவை தாம் அந்தத் தோட்டத்தில் இருந்தன. அதில் இணைவைப்பவர்களின் மண்ணறைகள் இருந்தன. அதில் இடிபாடுகளும், சில பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இணைவைப்போரின் மண்ணறை களைத் தோண்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றிச்) சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லா திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரண்டு நிலைக்கால்களாக கல்லை (நட்டு) வைத்தனர். 'ரஜ்ஸ்' எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலைப் பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர். அப்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் இருந்தார்கள். 'இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; எனவே, (மறுமை வெற்றிக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உதவி செய்!' என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.
Book :63
3933. அப்துர் ரஹ்மான் இப்னு ஹுமைத் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
நமிர் அல் கிந்தீயின் சகோதரி மகனான சாயிப் இப்னு யஸீத்(ரலி) அவர்களிடம் உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), 'முஹாஜிர், (ஹஜ் வழிபாடுகளை நிறைவேற்றிவிட்டு மினாவிலிருந்து வந்த பிறகு) மக்காவில் தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றிருக்கிறீர்கள்?' என்று வினவினார்கள். அதற்கு சாயிப்(ரலி), 'மினாவிலிருந்து வந்த பின்பு மூன்று நாள்கள் (மக்காவில் தங்க) முஹாஜிருக்கு அனுமதியுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்று அலா இப்னு ஹள்ரமீ(ரலி) சொல்ல கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.
Book :63
3934. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
மக்கள் (ஆண்டுக்கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களின் 40-ம் வய)திலிருந்தோ அவர்களின் மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
Book :63
3935. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(மக்காவில் தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துக்களாகக் கடமையாக்கப்பட்டது. மேலும், பயணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று)விட்டு விடப்பட்டது.
இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :63
3936. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
'விடை பெறும்' ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை (நலம்) விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். (நபி-ஸல்) அவர்களைக் கண்டதும்) நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு செல்வந்தன்' எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசு) எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கிற வேதனை என்னை வந்தடைந்துவிட்டது. எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் அதில் பாதியை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'மூன்றிலொரு பங்கு (போதும்) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான்; உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவளம் உணவாயினும் சரியே' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தோழர்கள் (எல்லாரும் மதீனாவுக்குச்) சென்றுவிட்ட பிறகு நான் (மட்டும், இங்கே மக்காவில்) பின் தங்கிவிடுவேனா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் (இங்கு) பின் தங்கியிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீங்கள் புரியும் நற்செயல் எதுவாயினும் அதனால் உங்களுக்கு அந்தஸ்தும் உயர்வும் அதிகமாகவே செய்யும். சில சமுதாயத்தார் உங்களால் பலனடைவதற்காகவும் வேறு சிலர் இழப்புக்குள்ளாவதற்காகவும் (உங்கள் ஆயுள் நீட்டிக்கப்பட்டு இங்கேயே) நீங்கள் பின்தங்கி விடக்கூடும்' சொல்லிவிட்டு, 'இறைவா! என் தோழர்கள் தங்கள் ஹிஜ்ரத்தை முழுமையாக நிறைவேற்றும்படிச் செய். அவர்களைத் தம் கால்சுவடுகளின் வழியே (பழைய அறியாமைக் கால நிலைக்குத்) திருப்பியனுப்பி விடாதே' என்று பிரார்த்தித்தார்கள். மேலும், 'ஆயினும் ஸஅத் இப்னு கவ்லா தான் பாவம்' என்று கூறினார்கள். ஸஅத் இப்னு கவ்லா(ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக இரங்கல் தெரிவிக்கும் விதத்தில் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர் இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பாளரான அஹ்மத் இப்னு யூனுஸ்(ரஹ்) (உன் வாரிசுகளை என்பதற்கு பதிலாக) 'உன் சந்ததிகளை ஏழைகளாக நீவிட்டுச் செல்வது' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அறிவித்தார்கள்.
Book :63
3937. அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து) மதீனா வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரிக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), தம் குடும்பத்தாரையும் தம் செல்வத்தையும் அவருக்கு சரிபாதியாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்குவானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்' என்று கூறினார்கள். (அவ்வாறே அவர் கடை வீதியைக் காட்ட அங்கு வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்களின் மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து,) 'என்ன இது, அப்துர் ரஹ்மான்!' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நான் அன்சாரிப் பெண்ணொருவரை மணம் புரிந்து கொண்டேன்'என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்' என்று அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பதிலளித்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டை அறுத்தாவது வலீமா மணவிருந்து கொடு' என்று கூறினார்கள்.
Book :63
3938. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார். பிறகு, '1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ, தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீல் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவராயிற்றே!' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களைக் கிழக்கிலிருந்து (துரத்திக் கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்றுதிரட்டும். சொர்க்கவாசிகள் முதலில் உண்ணும் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தை(யிடம் காணப்படும் தாயின் அல்லது தந்தையின்) சாயலுக்குக் காரணம், ஆண் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அவனுடைய நீர் (விந்து உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவனுடைய சாயலில் பிறக்கிறது. பெண்ணின் நீர் (கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலில் பிறக்கிறது' என்று பதிலளித்தார்கள். (உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், தாங்கள் இறைத்தூதர் தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். எனவே, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட செய்தியை அவர்கள் அறிவதற்கு முன்னால் தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் (நபி - ஸல் - அவர்களிடம்) வந்தார்கள். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வீட்டினுள் புகுந்து (மறைந்து) கொண்டார்கள்.) நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் மகனும் ஆவார்; எங்களில் சிறந்தவரும், சிறந்தவரின் மகனும் ஆவார்' என்று பதிலளித்தார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம்) இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!' என்று கூறினார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் முன்பு போன்றே கேட்டார்கள். அதற்கு அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள். உடனே (வீட்டினுள் மறைந்து கேட்டுக கொண்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்ட வரும் எங்களில் கெட்டவரின் மகனும் ஆவார்'என்று சொல்லிவிட்டு அவரைக் குறித்து (இல்லாத குற்றங்களைப் புனைந்து) குறை கூறலானார்கள். (அவற்றைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'இதைத் தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள்.
Book :63
3939. & 3940. அப்துர் ரஹ்மான் இப்னு முத்யிம்(ரஹ்) அறிவித்தார்.
என் கூட்டாளி ஒருவர், சில திர்ஹம்களைக் கடைவீதியில் தவணைக்கு விற்றார். நான் (வியப்படைந்து), 'சுப்ஹானல்லாஹ்! இது சரியாகுமா? (இப்படி விற்க அனுமதியுள்ளதா?)' என்று கேட்டேன். அதற்கு அவர், 'சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் கடைவீதியில் தான் விற்றேன். அதை எவரும் குறை கூறவில்லை' என்று பதிலளித்தார். உடனே நான் பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள், 'நாங்கள் இந்த வியாபாரத்தை (இந்த முறையில்) செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (மதீனா) வந்தார்கள். 'கையோடு கையாக - (உடனுக்குடன்) செய்யும் வியாபாரம் குற்றமில்லை. கடனுக்கு விற்பதாக இருந்தால் சரியில்லை' என்று கூறினார்கள்' என்று கூறிவிட்டு, 'ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களை நீ சந்தித்துக் கேள். ஏனென்றால், அவர்தான் நம்மில் மிகப் பெரிய வியாபாரி' என்று கூறினார்கள். அவ்வாறே ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களைச் சந்தித்து கேட்டேன். அவர்களும் பராஉ(ரலி) சொன்னதைப் போன்றே கூறினார்கள்.
(இதை சிறிய மாற்றத்துடன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) ஒரு முறை (பின்வருமாறு) கூறினார்கள்.
நாங்கள் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தபோது நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தார்கள். ஹஜ் காலம் வரை கடனுக்கு (விற்பதாக இருந்தால் சரியில்லை) என்று கூறினார்கள் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) தெரிவித்தார்கள்.
Book :63
3941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்களாயின், யூதர்கள் (அனைவருமே) என் மீது நம்பிக்கை கொண்டிருந்திருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :63
3942. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆஷூரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்' என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.
Book :63
3943. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபீர்அவ்னுக்கெதிராக மூஸா(அலை) அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மூஸா(அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்' என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.
Book :63
3944. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் (முன் தலை) முடியைத் (தம் நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பவர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழவிடாமல் இரண்டு பக்கமும் தொங்கவிட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை (முடி)களைக் (தம் நெற்றிகளின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். எந்த விஷயங்களில் (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக் காரர்களுடன் ஒத்துப் போவதை நபி(ஸல்) அவர்கள் விரும்பி வந்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரண்டு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.
Book :63
3945. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
அந்த வேதக்காரர்கள் (எத்தயைவர்கள் எனில், குர்ஆன் எனும்) அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்கள். அதில் சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.
Book :63
3946. அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்.
சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி), 'நான் ஓர் எஜமானிடமிருந்து இன்னோர் எஜமானாகப் பத்துக்கு மேற்பட்ட எஜமானர்களின் கைக்கு (விற்கப்பட்டு) மாறிக் கொண்டிருந்தேன்' என்று கூறினார்கள்.
Book :63
3947. சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி) அறிவித்தார்.
நான் 'ராம ஹுர்முஸ்' என்னுமிடத்திலிருந்து வந்தவன்.
Book :63
3948. சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி) அறிவித்தார்.
ஈசா(அலை) அவர்களுக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்குமிடையிலுள்ள காலம் அறு நூறாண்டுகளாகும்.
Book :63