3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.
கதாதா(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டபோது அவர்கள், 'உஷைரா தான் (சரியான உச்சரிப்பு)' என்றார்கள்.
Book :64
3950. ஸஅத் இப்னு முஆத்(ரலி) வாயிலாக இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) (அறியாமைக் காலத்தில் இணைவைப்போரின் முக்கிய தலைவர்களில் ஒருவனான) உமய்யா இப்னு கலஃபுக்கு நண்பராயிருந்தார். உமய்யா, மதீனா வழியாக (ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்காக)ச் செல்லும்போது (மதீனாவில்) ஸஅத்(ரலி) அவர்களிடம் தங்குவான். (அதே போல்) மக்கா வழியாக ஸஅத்(ரலி) சென்றால் உமய்யாவிடம் தங்குவார்கள்.
(ஹிஜ்ரத் நடைபெற்று) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயம், உம்ரா செய்யும் நோக்கத்தில் ஸஅத்(ரலி) மக்காவிற்குச் சென்றபோது உமய்யாவிடம் தங்கினார்கள். (அப்போது நடந்ததை ஸஅத்(ரலி) கூறினார்:) 'இறையில்லம் கஅபாவை வலம் (தவாஃப்) வருவதற்கு (ஏதுவாக) ஆள் நாடமாட்டமில்லாத (அமைதியான) ஒரு நேரத்தை எனக்குக் கூறு' என்று நான் உமய்யாவிடம் கேட்டேன். (மக்கள் ஓய்வெடுக்கும்) நண்பகலுக்கு நெருக்கமான நேரத்தில் என்னுடன் உமய்யா புறப்பட்டார். (நான் வலம்வந்து கொண்டிருந்த போது) எங்களை அபூ ஜஹ்ல் சந்தித்து (உமய்யாவின் குறிப்புப் பெயரைச் சொல்லி) 'அபூ ஸஃப்வானேஸ உன்னோடு இருக்கும் இவர் யார்?' என்று கேட்டார். உமய்யா, 'இவர்தான் ஸஅத்' என்றார். அப்போது என்னிடம் அபூ ஜஹ்ல், 'மதம் மாறிச் சென்றவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிவதாக நினைத்துக் கொண்டு (அவர்களுக்கு மதீனாவில்) தஞ்சமளித்த நீங்கள் கொஞ்சமும் அஞ்சாமல் மக்கா(விற்குள்) வந்து (கஅபாவை) சுற்றிக் கொண்டிருப்பதை நான் காண்பதா...? அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ ஸஃப்வானோடு (மட்டும்) நீ இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய்ச் சேர்ந்திருக்க மாட்டாய்' என்று கூறினார்.
அதற்கு அபூ ஜஹ்லைப் பார்த்து, நான் உரத்த குரலில், 'அல்லாஹ்வீன் மீதாணையாக!' (கஅபாவைச்) சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்தால், நீ (வாணிபக் குழுவுடன் கடந்து) செல்லும் மதீனாவின் தடத்தை நான் இடைமறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்' என்று சொன்னேன்.
அப்போது என்னிடம் உமய்யா, 'ஸஅத்! (மக்காப்) பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான அபுல் ஹகம் (அபூ ஜஹ்ல்) எதிரில் சப்தமிட்டுப் பேசாதே!' என்று கூறினார்.
அதற்கு நான், 'உமய்யாவே! (அபூ ஜஹ்லுக்கு வக்கலாத்து வாங்காமல்) எம்மைவிட்டுவிடு. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (நபித்தோழர்கள் உன்னைக் கொலை செய்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூற கேட்டேன்' என்று சொன்னேன்.
'மக்காவிலா... (நான் கொல்லப்படுவேன்?)' என்று உமய்யா கேட்டதற்கு, 'எனக்குத் தெரியாது' என்று நான் பதிலளித்தேன்.
இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். தன் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது, (தன் மனைவியிடம்), 'உம்மு ஸஃப்வானே! என்னைப் பார்த்து ஸஅத் என்ன கூறினார் தெரியுமா?' என்று கேட்டார்.
'அவர் (அப்படி) என்ன கூறினார்?' என்று அவள் கேட்டதற்கு உமய்யா, 'அவர்கள் (நபித்தோழர்கள்) என்னைக் கொலை செய்வாக்ள் என்று அவர்களிடம் முஹம்மது தெரிவித்தாராம். நான், 'மக்காவிலா?' என்று (சஅதிடம்) கேட்டேன். 'தெரியாது' என்று ஸஅத் கூறினார்' (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ்வீன் மீதாணையாக! நான், 'மக்கா'வைவிட்டு (இனிமேல்) வெளியேறப் போவதில்லை' என்றும் கூறினார்.
பத்ருப் போர் நாள் வந்தபோது, போருக்குப் புறப்படும் படி மக்களைத் தூண்டிக் கொண்டிருந்த அபூ ஜஹ்ல், 'உங்கள் வணிகக் குழுவைச் சென்றடையுங்கள் (அதைக் காப்பாற்றுங்கள்)' என்று கூறினார்.
ஆனால், உமய்யா (மக்காவிலிருந்து) வெளியே செல்வதை வெறுத்தார். (இதை அறிந்த) அபூ ஜஹ்ல் அவரிடம் வந்து, 'அபூ ஸஃப்வானே! (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்களே (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவரான நீங்கள் (போருக்குச் செல்லாமல்) பின்வாங்குவதை மக்கள் கண்டால் உங்களுடன் அவர்களும் பின்வாங்கி (போருக்குச் செல்லாமல் இருந்து) விடுவார்களே' என்று கூறினார். அபூ ஜஹ்ல், உமய்யாவிடம் இதை (வலியுறுத்திச்) சொல்லிக் கொண்டே இருந்தார்.
முடிவாக, உமய்யா 'இப்போது நீ, என்னை வென்றுவிட்டாய் (உன் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்). எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நான் மக்கா நகர சாதி ஒட்டகம் ஒன்றை வாங்கப் போகிறேன்' என்று கூறினார்; (தனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை வந்தால் தப்பி வந்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டகம் என்றும் வாங்கினார்.) பிறகு (தன் மனைவியிடம் வந்து) 'உம்மு ஸஃப்வானே! (போருக்குச் செல்லத் தேவையான சாதனங்களை) எனக்குத் தயார் செய் என்றார் உமய்யா. அப்போது அவள், 'அபூ ஸஃப்வானே! உங்கள் யஸ்ரிப் (மதீனா) நண்பர் (ஸஅத், நீங்கள் கொல்லப்படுவது குறித்து) உங்களிடம் சொன்னதை மறந்துவிட்டீர்களா? என்று கேட்டாள். அதற்கு உமய்யா, 'இல்லை. (மறக்கவில்லை.) இவர்களுடன் கடைசி ஆளாகச் செல்வதைத் தவிர வேறெந்த எண்ணமும் எனக்கில்லை' என்றார்.
(பத்ருப் போருக்கு) உமய்யா புறப்பட்டுச் சென்றபோது (படையினர் முகாமிட்டுத்) தங்கும் ஒவ்வோர் இடத்திலும் (தப்பியோட ஆயத்தமாக தனக்கு அருகிலேயே) தன்னுடைய ஒட்டகத்தைக் கட்டி வைத்துக் கொள்ளலானார். பத்ருப்போர்க்களத்தில் உமய்யாவை வலிமையும் உயர்வும் மிகுந்த அல்லாஹ் (முஸ்லிம் படையால்) கொலை செய்யும் வரையில் தொடர்ந்து அவர் இப்படியே செய்து கொண்டிருந்தார்.
Book :64
3951. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
தபூக் போரைத் தவிர்த்து நபி(ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) நபி(ஸல்) அவர்கள் குறைஷிகளின் வாணிபக் குழுவை (வழி மறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போரிடும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான்.
Book :64
3952. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் மிக்தாத் இப்னு அஸ்வத்(ரலி) அவர்களின் அவைக்குச் சென்றேன். நான் அவர்களின் அவையில் (பங்கெடுத்த, அவர்கள் கூறும் விஷயங்களை எடுத்துரைப்பவனாக) இருப்பது, அதற்கு நிகரான(மற்ற அனைத்)தை விடவும் எனக்கு விருப்பானதாயிருக்கும்.
(மிக்தாத் இப்னு அஸ்வத் -ரலி - அவர்கள் என்னிடம் கூறினார்கள்:)
நான், நபி(ஸல்) அவர்கள் இணைவைப்போருக்கெதிராகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது நான், '(இறைத்தூதர்) மூஸாவின் சமுதாயத்தார், 'நீங்களும் உங்களுடைய இறைவனும் போய்ப் போரிடுங்கள்' என்று (நகைப்பாகக்) கூறியது போன்று நாங்கள் கூற மாட்டோம். மாறாக, நாங்கள் தங்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும், முன்னாலும், பின்னாலும் நின்று (தங்கள் எதிரிகளிடம்) போரிடுவோம்' என்று சொன்னேன். (இதைக் கேட்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் ஒளிர்ந்ததை கண்டேன். (என்னுடைய சொல்) அவர்களை மகிழச் செய்தது.
Book :64
3953. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தம் படையினரையும் மிகப்பெருந்தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (மறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு நீ வெற்றியளிப்பதாக நீ அளித்த) உன்னுடைய உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) கோருகிறேன். (இறைவா! இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல் போய்விடுவர்' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு, 'போதும் (இறைத்தூதர் அவர்களே!)' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து)' அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்' என்று (திருக்குர்ஆன் 54:45-வது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக் கொண்டே வெளியேறி வந்தார்கள்.
Book :64
3954. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைவிசுவாசிகளில் இடையூறு எதுவுமின்றி அறப்போரில் கலந்து கொள்ளாமல் (தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிடுகிறவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் பேராடுகிறவர்களும் (அந்தஸ்தில்) சமமாகமாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04:95-ம்) இறை வசனம், பத்ருப் போருக்குச் செல்லாதவர்களையும் அதில் கலந்து கொள்ளச் சென்றவர்களையும் குறிப்பிடுகிறது.
Book :64
3955. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் (பத்ருப் போரின் போது) சிறுவர்களாகக் கருதப்பட்டோம். (அதனால் எனக்கும் அவருக்கும் பத்ருப் போரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.)
Book :64
3956. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் பத்ருப்போரின்போது சிறுவர்களாகக் கருதப்பட்டோம். பத்ருப்போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரண்டு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.
Book :64
3957. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.
மேலும், பராஉ(ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
Book :64
3958. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் பேசிக்கொள்வோம்.
பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
Book :64
3959. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
'முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழாகளின் எண்ணிக்கையேயாகும். இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை' என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
Book :64
3960. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
Book :64
3961. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போரில் அபூ ஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது அவனிடம் வந்தேன். அப்போது அவன், 'நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான்.
Book :64
3962. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
'அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!' என்று கேட்டார்கள்.
'நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.
Book :64
3963. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போர் (நடந்த) நாளில், 'அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே, இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரப்போனார்கள். அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்லே! நீயா?' என்று கேட்டார்கள். (அப்போது) அவன், 'தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுககு மேலாக... அல்லது நீங்களே கொன்று விட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று கேட்டான்.
அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :64
3964. பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :64
3965. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
(இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நானே முதல் நபராக இருப்பேன்.
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) கூறினார்கள்:
'இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம், பத்ருப்போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.
Book :64
3966. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே 'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்' என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
Book :64
3967. அலீ(ரலி) அறிவித்தார்.
'இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்' என்னும் இந்த (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது.
Book :64
3968. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்.
'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன...' என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கூறினார்கள்.
Book :64