3969. கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார்.
'இவர்கள் தங்கள் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்' என்னும் இந்த (திருக்குர்ஆன் 22: 19) வசனம் பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகியோர் மற்றும் (இறை மறுப்பாளர்களான) உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.
Book :64
3970. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அவர்களிடம் ஒருவர், 'அலீ(ரலி) பத்ருப் போரில் பங்கெடுத்தார்களா?' என்று கேட்டார். ('ஆம் பங்கெடுத்தார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்' என்று பராஉ(ரலி) பதிலளித்தார்கள்.
Book :64
3971. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா இப்னு கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர்களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
பிறகு பத்ருப் போரில் உமய்யா கொல்லப்பட்டதையும் (எதிரிகளால்) தம் மகன் (அலீ இப்னு அப்திர் ரஹ்மான்) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால்(ரலி), 'உமய்யா பிழைத்துக் கொண்டால் நான் பிழைக்கப் போவதில்லை' என்று கூறினார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.
Book :64
3972. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) 'அந்நஜ்ம்' என்னும் (53-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் 'ஸஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் 'ஸஜ்தா' செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, 'இது எனக்குப் போதும்' என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன்.
Book :64
3973. உர்வா(ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளினால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களின் தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்த போது) என்னுடைய விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரண்டு காயங்கள் பத்ருப் போரிலும் இன்னொன்று 'யர்மூக்' போரிலும் ஏற்பட்டனவாகும். (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களின் வாள் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான், 'உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?' என்று கேட்டார். நான், 'ஆம்' (தெரியும்) என்றேன். 'அதில் என்ன (அடையாளம்) உள்ளது?' என்று கேட்டார். 'பத்ருப் போரில் அதன் முனை முறிந்து போய்விட்டது. அந்த முறிவு தான் (அடையாளம்)' என்றேன். 'உண்மை சொன்னீர்' என்று அப்துல் மலிக் இப்னு மர்வான் கூறினார். (பிறகு, 'அவர்களின் வாட்கள் பல்வேறு படைகளில் - பங்கெடுத்து எதிரிகளின் வாட்களுடன் - மோதி முனைகள் முறிந்திருந்தன' என்னும் நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர் அடியைக் கூறினார். ) பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் இப்னு மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் ஃ தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கினார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
Book :64
3974. உர்வா(ரஹ்) அறிவித்தார்.
யர்மூக் போரின் போது ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களிடம், '(ரோம பைஸாந்தியர் மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர்(ரலி), 'நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கை காப்பாற்ற மாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிட மாட்டீர்கள்)' என்ற கூறினார்கள். 'இல்லை. அப்படி நாங்கள் செய்ய மாட்டோம்' என்று அவர்கள் கூறினர். பிறகு ஸுபைர்(ரலி) பைஸாந்தியவர்களின் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து கூறினார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களின் குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர்கள் பிடித்துக் கொண்டு அவர்களின் தோள் மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர். (ஏற்கெனவே) பத்ருப்போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என்னுடைய விரல்களைவிட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர்(ரலி) அவர்களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையிலமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர்(ரலி) நியமித்திருந்தார்கள்.
Book :64
3975. உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
யர்மூக் போரின் போது ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், (ரோம பைஸாந்தியர் மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், நான் தாக்குதல் தொடுக்கும் போது நீங்கள் வாக்கை காப்பாற்ற மாட்டீர்கள். (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிட மாட்டீர்கள்) என்று கூறினார்கள். இல்லை அப்படி நாங்கள் செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறினர். பிறகு ஸுபைர் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்கள் மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து சென்றார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது அவர்களது குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர்கள் பிடித்துக் கொண்டு அவர்களது தோல் மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர். (ஏற்கெனவே) பத்ரூப் போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இரந்த போது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் எனது விரல்களை விட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர் (ரலி) அவர்களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையிலமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர் (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
Book :64
3976. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை' என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்:
அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.
Book :64
3977. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்காக மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக்கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் காணவில்லையா?' என்னும் (திருக்குர்ஆன் 14:28-ம்) இறைவசனம், அல்லாஹ்வின் மீதாணையாக! குறைஷிக் குல இறைமறுப்பாளர்களையே குறிக்கிறது' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
'அவர்கள் குறைஷிகளாவர். 'அல்லாஹ்வின் அருட்கொடை' என்பது முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறிக்கும். 'அழிவுக் கிடங்கு' என்பது பத்ருடைய நாளில் (இறைத்தூதரை) எதிர்த்துப் போரிட்டு குறைஷிகள் வீழ்ந்த) நரகத்தைக் குறிக்கும்' என்று அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்.
Book :64
3978. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
'குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா(ரலி), '(நபி - ஸல் - அவர்கள் அப்படிச் சொல்லவில்லை), 'இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள்' என்று கூறினார்கள்.
Book :64
3979. மேலும்) ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இது எப்படியிருக்கிறதென்றால், '(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்களிடம், 'உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்ட போது) 'நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், 'நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அறிவித்தார்' என்றே இறைத்தூதர்(ஸல்) அவர்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்' என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, (இறந்தவர்களை நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தம் கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா(ரலி) (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80)
(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22)
'நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)' என ஆயிஷா(ரலி) (விளக்கம்) கூறினார்கள்.
Book :64
3980. & 3981. இப்னு உமர்(ரலி) கூறினார்.
பத்ரின் கிணற்றருகில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு (உள்ளே கிடந்த இறை மறுப்பாளர்களின் சடலங்களை நோக்கி), 'உங்களுக்கு உங்களுடைய இறைவன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். பிறகு, 'இவர்கள், நான் கூறுவதை இப்போது செவியேற்கிறார்கள்' என்றும் கூறினார்கள். ('இறந்தவர்கள் செவியேற்கிறார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர்(ரலி) கூறினார் என்ற) தகவல் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, 'நான் அவர்களுக்குச் சொல்லி வந்த (கொள்கைகள்) எல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்' என்றே (நபி - ஸல்) அவர்கள் கூறினார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார்.
பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), '(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது' என்னும் (திருக்குர்ஆன் 35:22) இறை வசனத்தை (இறுதிவரை) ஓதினார்கள்.
Book :64
3982. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இளைஞராயிருந்த ஹாரிஸா இப்னு சுராகா அல் அன்சாரீ(ரஹ்) பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். எனவே, அவர்களின் தாயார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஹாரிஸாவுக்கு உள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். (இதுவன்றி) வேறு நிலையாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம்' என்று கூறினார்கள். அதற்கு, நபி(ஸல்) அவர்கள், 'அடப்பாவமே! இழந்து தவிக்கிறாயோ!' (என்று கூறிவிட்டு) 'சொர்க்கம் ஒன்றே ஒன்று தான் உள்ளதா? சொர்க்கம் பல உண்டு. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) 'ஜன்னத்துல் பிர்தெளஸ்' என்னும் சொர்க்கத்தில் இருக்கிறார்' என்று கூறினார்கள்.
Book :64
3983. அலீ(பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (கினாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)' என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், 'கடிதம் (எங்கே? அதை எடு)' என்று கேட்டோம். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை' என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை. அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்' என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அப்போது உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹாதிப் இப்னு அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; அவரின் கழுத்தைக் கொய்துவிடுகிறேன்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), 'ஏன் இப்படிச் செய்தீர்கள்!' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்கவேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும், அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர்' என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இவர் உண்மை கூறினார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள்' என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இவர் அல்லஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்' என்று (மீண்டும்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தவர் அல்லவா? பத்ரில் பங்கெடுத்தவர்களை நோக்கி அல்லாஹ், 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது'... அல்லது 'உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்'... என்று கூறி விட்டிருக்கலாம் அல்லவா?' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) தம் கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள்.
Book :64
3984. அபூ உஸைத் (மாலிக் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவித்தார்.
பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், '(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் அவர்களின் மீது அம்பெய்யுங்கள். (அவர்கள் துரத்திலிருக்கும்போது அம்புகளை எய்து வீணாக்கி விடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
Book :64
3985. அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், '(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் - அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் - அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
Book :64
3986. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், (மலைக் கணவாயில் நிறுத்தப்பட்ட) அம்பெய்யும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை(த் தலைவராக) நியமித்தார்கள். (அந்தப் போரின்போது முஸ்லிம்களாகிய) எங்களில் எழுபது பேர்களை (இணைவைப்பவர்களான) அவர்கள் கொன்றனர். (அதற்கு முன் நடந்த) பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் இணைவைப்பவர்களில் எழுபது பேர்களைக் கைது செய்து இன்னும் எழுபது பேர்களைக் கொன்று, (ஆக மொத்தம்) நூற்றி நாற்பது பேர்களை வீழ்த்தினார்கள். (இதைப் பற்றி) அபூ சுஃப்யான் கூறினார்: இந்த (உஹுதுப் போரின்) நாள் பத்ருடைய நாளுக்கு பதிலாகும். போர் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறி தான் இறைக்க முடியும்.)
Book :64
3987. நன்மை என்பது அல்லாஹ் (இந்த உஹுதுப் போருக்குப்) பின்பு நமக்குக் கொணர்ந்த நன்மையும், (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும்.
'இதை (என் தந்தை) அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி), நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டு அறிவித்தார்கள் என்று எண்ணுகிறேன்' என அபூ புர்தா(ரஹ்) கூறினார்.
Book :64
3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.
நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.
அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், 'என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்' என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்' என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார்.
அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
Book :64