4475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
(தொழுகையில்) இமாம், 'ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்' என்று ஓதியவுடன் நீங்கள், 'ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)' என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் 'ஆமீன்' கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4476. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, '(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களிலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)' என்று (தங்களிடையே) பேசிக் கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வந்து, 'நீங்கள் மனிதர்களின் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். 'நீங்கள் (நபி) நூஹ் அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பி வைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவராவார்' என்று சொல்வார்கள்.
உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவரும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் (இப்ராஹீம்(அலை) அவர்களிடம்) செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் - அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அளித்த அடியாரான (நபி) மூஸாவிடம் நீங்கள் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது அவர்கள், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாளில் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, 'நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், '(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத்(ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று சொல்வார்கள்.
உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், 'என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன்விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) 'உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்! உங்களுக்குத் தரப்படும் சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்' என்று சொல்லப்படும் அப்போது நான் என்னுடைய தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போன்றே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், 'குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை' என்று சொல்வேன்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
உயர்ந்தோனான அல்லாஹ் (திருக்குர்ஆனில் யாரைக் குறித்து), 'நரகத்தில் இவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளானோ அவர்களையே 'குர்ஆன் தடுத்துவிட்டவர்கள்' எனும் சொற்றொடர் குறிக்கிறது.
இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்த நபிமொழி வந்துள்ளது.
Volume :5 Book :65
4477. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது' என்று கூறினார்கள். நான், 'நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்' என்று சொல்லிவிட்டு, 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள், 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4479. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பனூ இஸ்ராயீல்களுக்கு, '(ஊருக்குள் நுழையும்போது) அதன் தலைவாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாக நுழையுங்கள். 'ஹித்தத்துன்' (பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்றும் கூறுங்கள்' (திருக்குர்ஆன் 02:58) என்று கூறப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் புட்டங்களால் தவழ்ந்து சென்றபடி (நகருக்குள்) நுழைந்தார்கள். (கட்டளையிடப்பட்டதை) அவர்கள் மாற்றி, 'ஹித்தத்துன்; ஹபபத்துன் ஃபீ ஷஅரத்தின் (இறைவா! மன்னிப்பாயாக! ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து)' என்று (பரிகாசமாகச்) கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4480. அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (ஒத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்' என்று கூறினார்கள். பிறகு, '1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'ஜிப்ரீலா (தங்களுக்குத் தெரிவித்தார்!' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, 'வானவர்களிலேயே ஜிப்ரீல்தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!' என்று அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜிப்ரீலுக்குப் பகைவர் அல்லாஹ்வுக்கும் பகைவராவார். ஏனெனில், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்கவே இ(வ்வேதத்)தை உங்களின் இதயத்தில் இறக்கி வைத்தார்' என்று (நபியே) கூறும் எனும் இந்த (திருக்குர்ஆன் 02:97வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு, 'அறிக! இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம், ஒரு நெருப்பாகும். அது கிழக்கிலிருந்து மக்களை(த் துரத்திக்கொண்டு வந்து) மேற்குத் திசையில் ஒன்று திரட்டும். அறிக! சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள கூடுதலான சதையாகும். (குழந்தை தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது) ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனுடைய சாயலைப் பெறுகிறது. பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு) முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலைப் பெறுகிறது' என்று பதிலளித்தார்கள்.
(உடனே) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி அளிக்கிறேன். தாங்கள் இறைத்தூதர்தாம் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் (என்னைப் பற்றி) அவர்களிடம் விசாரித்து (அறிந்து) கொள்வதற்கு முன்பாக, நான் இஸ்லாத்தை ஏற்றதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி (அவதூறு கற்பித்துத் தங்களிடம் பொய்யுரைப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது யூதர்கள் வந்தனர். (உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அறைக்குள் சென்று மறைந்து கொண்டார்கள்.) பிறகு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களிடம்), 'உங்களில் அப்துல்லாஹ் இப்னு சலாம் எத்தகைய மனிதர்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அவர் எங்களில் நல்லவரும், எங்களில் நல்லவரின் புதல்வருமாவார்; எங்கள் தலைவரும், எங்கள் தலைவரின் புதல்வருமாவார்' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் இஸ்லாத்தை ஏற்றார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், 'அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பாற்றுவானாக!' என்று கூறினார்கள். உடனே, அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) வெளியே வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் நான் உறுதி அளிக்கிறேன்' என்று கூறினார்கள். உடனே யூதர்கள், 'இவர் எங்களில் கெட்டவரும் எங்களில் கெட்டவரின் மகனுமாவார்' என்று அப்துல்லாஹ் இப்னு சலாமைக் குறித்துக் குறை கூறினர். அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'இதைத்தான் நான் அஞ்சிக் கொண்டிருந்தேன், இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4481. உமர்(ரலி) அறிவித்தார்.
எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆயினும், அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் ஏசினான். ஆயினும் அதற்கான உரிமை அவனுக்கில்லை. என்னை அவன் நம்ப மறுத்தது, 'அவனை நான் முன்பிருந்தது போன்றே முண்டும் உயிராக்கி எழுப்ப என்னால் முடியாது' என்று அவன் எண்ணியதேயாகும். அவன் என்னை ஏசியது, 'எனக்குக் குழந்தை உண்டு' என்று அவன் சொன்னதேயாகும். ஆனால், நான் ஒரு துணைவியையோ குழந்தையையோ பெற்றுக்கொள்வதிலிருந்து தூய்மையானவன் ஆவேன்' என்று அல்லாஹ் கூறினான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4483. உமர்(ரலி) அறிவித்தார்.
'மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்' அல்லது 'என் இறைவன் மூன்று விஷயங்களில் எனக்கு இசைவாகக் கருத்துக் கொண்டான்' நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் (கஅபாவைக் கட்டும்போது) நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!' என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும், நான், (அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!' என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, 'நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்' என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, 'உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!' என்று கேட்டார். அப்போது அல்லாஹ், 'இறைத்தூதர் உங்களை விவாக விலக்குச் செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருககு வழங்கலாம்' எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான்.
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :5 Book :65
4484. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உன்னுடைய சமுதாயத்தார் (குறைஷியர்) கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டி இப்ராஹீம் அவர்கள் அமைத்த அடித்தளங்களைவிட சுருக்கி (சற்று உள்ளடக்கி) விட்டதை நீ காணவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளங்களின் மீது அதை தாங்கள் மீண்டும் கட்டக்கூடாதா என கேட்டேன். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயில்லாவிட்டால் (அவ்வாறே நான் செய்திருப்பேன்) என்றார்கள். (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் கஅபாவின் வளைந்த) பகுதியை அடுத்துள்ள (கஅபாவை இரு மூலைகளையும் தொட்டு முத்தமிடாததற்கு காரணம், இறையில்லம் (கஅபா) இப்ராஹீம் (அலை) அவர்கள் இட்ட அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும்.
Volume :5 Book :65
4485. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
வேதக்காரர்(களான யூதர்)கள், தவ்ராத்தை ஹீப்ரு மொழியில் ஓதி, அதை இஸ்லாமியர்களக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'வேதக்காரர்கனை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) நீங்கள் சொல்லுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக்கும், யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் மற்றும் மூஸாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் அவர்களில் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம்' (திருக்குர்ஆன் 02:136) என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4486. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் 'பதினாறு மாதங்கள்' அல்லது 'பதினேழு மாதங்கள்' தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 02:144வது வசனத்தை அருளினான். உடனே, அவர்கள் அஸ்ருத் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் 'ருகூஉ' செய்து கொண்டிருந்தனர். அவர், 'அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்' என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள். (புதிய கிப்லாவான) கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது 'அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை வீணாக்குகிறவன் அல்லன். (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடம் மிகுந்த இரக்கமுடையோனும் கருணையுடையோனுமாவான்' எனும் (திருக்குர்ஆன் 02:143வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
Volume :5 Book :65
4487. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் (நபி) நூஹ் (அலை) அவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்கள், 'இதோ வந்துவிட்டேன்; என் இறைவா! கட்டளையிடு; காத்திருக்கிறேன்' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், '(நம்முடைய செய்தியை மக்களுக்கு) நீங்கள் எடுத்துரைத்துவிட்டீர்களா?' என்று இறைவன் கேட்பான். அவர்கள், 'ஆம் (எடுத்துரைத்து விட்டேன்)' என்று சொல்வார்கள். அப்போது அவர்களின் சமுதாயத்தாரிடம், 'உங்களுக்கு இவர் (நம் செய்தியை) எடுத்துரைத்தாரா?' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், 'எங்களிடம் எச்சரிப்பவர் எவரும் வரவில்லை' என்று சொல்வார்கள். அப்போது அல்லாஹ், 'உங்களுக்கு சாட்சியம் சொல்கிறவர் யார்?' என்று (நூஹிடம்) கேட்க அவர்கள், 'முஹம்மதும் அவரின் சமுதாயத்தினரும்' என்று பதிலளிப்பார்கள். அவ்வாறே அவர்களும், 'நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு இறைச்செய்தியை) எடுத்துரைத்துவிட்டார்கள்' என்று சாட்சியம் அளிப்பார்கள். மேலும், இறைத்தூதர் உங்களுக்கு சாட்சியாக இருப்பார். இதையே 'இவ்வாறே, உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக' எனும் (திருக்குர்ஆன் 02:143) இறைவசனம் குறிக்கிறது.
'நடுநிலையான' (வசத்) என்பதற்கு 'நீதியான' என்று பொருள்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4488. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் 'சுப்ஹு'த் தொழுகையை 'மஸ்ஜிது குபா'வில் தொழுது கொண்டிருந்தபோது ஒருவர் வந்து, 'கஅபாவை (த் தொழுகையில்) முன்னோக்கும்படி கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆ(னின் ஒருவசனத்தி)னை அல்லாஹ் அருளியுள்ளான்' என்று கூறினார். உடனே, (பைத்துல் மக்திஸின் திசையை நோக்கித் தொழுதுகொண்டிருந்த) அம்மக்கள், கஅபாவை நோக்கித் (தங்கள் முகங்களைத்) திருப்பிக்கொண்டனர்.
Volume :5 Book :65
4489. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.
Volume :5 Book :65
4490. இப்னு உமர்(ரலி) கூறினார்.
மக்கள் குபாவில் 'சுப்ஹு'த் தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'சென்ற இரவு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கித் வந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்' என்று கூறினார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.
Volume :5 Book :65
4491. இப்னு உமர்(ரலி) கூறினார்.
மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுகை தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, 'சென்ற இரவு நபி(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை நாம் முன்னோக்கி வந்த பைத்துல் மக்திஸைவிட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்' என்று கூறினார். அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமிட்டு கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.
Volume :5 Book :65
4492. பராஉ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி 'பதினாறு' அல்லது 'பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.
Volume :5 Book :65
4493. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் 'குபா'வில் 'சுப்ஹு'த் தொழுகையிலிருந்தபோது, ஒருவர் வந்து, 'சென்ற இரவு (நபி(ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்' என்று கூறினார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமிட்டு கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பினார்கள். (அதற்கு முன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.
Volume :5 Book :65
4494. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மக்கள் குபாவில் 'சுப்ஹுத்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன்வசனம்) அருளப்பெற்றது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்' என்று கூறினார். அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.
Volume :5 Book :65