4495. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ராச் செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமில்லை' என்ற (திருக்குர்ஆன் 02:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன். அதற்கு (அன்னை) ஆயிஷா(ரலி), '(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு அந்த வசனத்தில் 'அவ்விரண்டையும் சுற்றி வராமலிருப்பது குற்றமில்லை' என்றிருந்தால் தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் தாங்கள் வணங்கி வந்த 'முஷல்லல்' எனும் குன்றில் உள்ள) 'மனாத்' எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) 'குதைத்' எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள். எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றி வருவதைப் பாவமாகக் கருதுகிறோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ், 'நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை' என்ற (திருக்குர்ஆன் 02:158) இந்த வசனத்தை அருளினான்.
Volume :5 Book :65
4496. ஆஸிம் இப்னு சுலைமான்(ரஹ்) கூறினார்.
நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம், 'ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். எனவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையே ஓடுவதை நிறுத்திவிட்டோம். அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், 'ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எனவே, இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமில்லை' எனும் (திருக்குர்ஆன் 02:158வது) இவ்வசனத்தை அருளினான்' என்று பதிலளித்தார்கள்.
Volume :5 Book :65
4497. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்து விடுகிறவர் நரகம் புகுவார்' என்று கூறினார்கள். '(அப்படியானால்) அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறவர் சொர்க்கம் புகுவார்' என்று நான் சொன்னேன்.
Volume :5 Book :65
4498. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
இஸ்ரவேலர்களிடையே பழிக்குப்பழி வாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடை முறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக் கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவே, அல்லாஹ் (முஹம்மத்(ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்திற்கு, 'கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவும் (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) நிறைவேற்றிட வேண்டும்' என்று கூறுகிறான்.
'மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது வேண்டுமென்றே செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்லமுறையில் அதனைக் கொலையாளி செலுத்திட வேண்டும்.
'இது உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும்' அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)களின் மீது கடைமையாக்கப்பட்டிருந்ததை விட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் வரம்பு மீறுகிறானோ அவனுக்கு - அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு - துன்புறுத்தும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 02:178)
இதை முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்.
Volume :5 Book :65
4499. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :65
4500. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரி (அத்தை) 'ருபய்யிஉ' (பின்த் நள்ர்) அவர்கள் ஒர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம் மன்னித்து விடும்படி கோரினார். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டார்கள். எனவே, என் அத்தையில் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன் வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இறைச் சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர். அப்போதும் அவர்கள் பழிவாங்குவதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) 'ருபய்யிஉ'வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக அவரின் முன்பல் உடைக்கப்படக்கூடாது' என்று கூறினார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்' என்று கூறினார்கள். அதற்குள் அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகிறான்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4501. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக்கால மக்கள் (குறையுயர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி(ஸல்) அவர்கள், '(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதைவிட்டுவிடலாம்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4502. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு 'ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதைவிட்டுவிட்டார்கள்.
Volume :5 Book :65
4503. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, 'இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே' என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், 'ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்' என்று சொன்னேன்.
Volume :5 Book :65
4504. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வணக்கமாம், ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாக) ஆம்விட்டது.
Volume :5 Book :65
4505. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி), 'வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத்துன் தஆமு மிஸ்கீன்' (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பைவிட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனத்தை ஓதி, 'இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4506. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி), (திருக்குர்ஆன் 02:184வது வசனத்தில் 'அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்' என்பதன் மூலத்தை) 'ஃபித்யத்து தஆமி மஸாகீன' என்று ('ஏழைகள்' எனப் பன்மையாக) ஓதிக்காட்டி 'இது, சட்டம் மாற்றப்பட்டுவிட்ட வசனமாகும்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4507. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.
'நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்' எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் ('உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.
அபூ அப்துல்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான புகைர் பின் அப்தில்லாஹ்(ரஹ்) (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் இப்னு அபீ உபைத் அல்அஸ்லமீ(ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்டார்கள்.
Volume :5 Book :65
4508. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்கே அநீதியிழைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, அல்லாஹ், '(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்' என்று (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்தை அருளினான்.
Volume :5 Book :65
4509. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
(இந்த 02:187வது வசனம் அருளப்பட்டவுடன்) நான் வெள்ளைக் கயிறு ஒன்றையும் கறுப்புக் கயிறு ஒன்றையும் எடுத்துக் கொண்டு இரவின் ஒரு பகுதி கழிந்தவுடன் (அவற்றை) உற்றுப் பார்த்தேன். ஆனால், அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள முடியவில்லை. காலையானதும் (நபி(ஸல்) அவர்களிடம் சென்று,) 'இறைத்தூதர் அவர்களே!' என் தலையணையின் கீழே (இந்த இரண்டு கயிறுகளையும்) வைத்திருந்தேன். (ஆயினும் இரண்டையும்) பிரித்தறிய முடியவில்லையே?!)' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'வெள்ளைக் கயிறும் கறுப்புக் கயிறும் உங்கள் தலையணைக்குக் கீழே இருந்திருந்தால், உங்கள் தலையணை நிச்சயம் (மிக) விசாலமானதாய் இருக்க வேண்டும்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4510. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
'இறைத்தூதர் அவர்களே! கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிற்றைப் பிரித்தறிய முடியும் நேரம் வரும் வரை' என்ற (திருக்குர்ஆன் 02:187வது) வசனத்திலுள்ள கயிறுகள் (அல்கைத்) என்பவை உண்மையிலேயே இரண்டு கயிறுகள் தாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு கயிறுகளையும் நீங்கள் (எடுத்துப்) பார்த்திருந்தால் உண்மையிலேயே நீங்கள் பிடரி அகலமானர் (அறிவு குறைந்தவர்) தாம் என்று கூறிவிட்டுப் பிறகு, '(அதன் பொருள்) அது வன்று; மாறாக, அது இரவின் கருமையும், பகலின் வெண்மையுமாகும்' என்று கூறினார்கள்.
Volume :5 Book :65
4511. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(ஆரம்பத்தில்) 'வெள்ளைக் கயிற்றைக் கறுப்புக் கயிற்றிலிருந்து பிரித்தறியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02: 187வது வசனத்தின்) தொடர் 'விடியலின்' ('மினல் ஃபஜ்ர்') எனும் சொல் நீங்கலாக அருளப்பட்டது. அப்போது மக்கள் சிலர் தங்கள் இரண்டு கால்களிலும் (ஒன்றில்) வெள்ளைக் கயிற்றையும் (மற்றொன்றில்) கறுப்புக் கயிற்றையும் கட்டிக்கொண்டு இரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும் வரை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், 'மினல் ஃபஜ்ர்' (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போது அவர்கள், அதிகாலையையும் இரவையும் தான் இது குறிக்கிறது என்று அறிந்துகொண்டார்கள்.
Volume :5 Book :65
4512. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.
Volume :5 Book :65
4513. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (மக்காவினுள் ஹஜ்ஜாஜ் இப்னு ஒசுஃபால் முற்றுகையிடப்பட்ட யுத்தக்) குழப்ப (வருட)த்தில் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து, 'மக்கள் (அரசியல் காரணங்களுக்காகத் தங்களிடையே பிளவுபட்டு) அலைக்கழிக்கப்படுகிறார்கள். தாங்கள் உமர்(ரலி) அவர்களின் புதல்வரும் நபி(ஸல்) அவர்களின் தோழரும் ஆவீர்கள். (நியாயத்திற்காகப் போராட) தாங்கள் புறப்படுவதற்கு எது தடையாக உள்ளது?' என்று கேட்டனர். அதற்கு இப்னு உமர்(ரலி), 'என் சகோதரனின் இரத்தத்தைச் சிந்துவதற்கு அல்லாஹ் தடை விதித்திருப்பதே (புறப்படவிடாமல்) என்னைத் தடுக்கிறது' என்று கூறினார்கள். அதற்கு அவர்களிருவரும் 'குழப்பம் நீங்கி மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாகும் வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்' என்று (திருக்குர்ஆன் 02:193 வது வசனத்தில்) அல்லாஹ் கூறவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு உமர்(ரலி), '(ஆம்! இறைத்தூதர்(ஸல்) காலத்தில்) குழப்பம் நீங்கும் வரை (பகைவர்களுடன்) நாங்கள் போராடினோம். மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ்வுக்கு உரித்தானதாக ஆனது. ஆனால், (இப்போது) நீங்களோ (அரசியல் காரணங்களுக்காகப்) போராடி குழப்பம் உருவாகுவதையும், மார்க்கம் (முழுவதும்) அல்லாஹ் அல்லாதோருக்கு உரித்தானதாக ஆவதையுமே விரும்புகிறீர்கள்!' என்றார்கள்.
Volume :5 Book :65
4514. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம், (காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் ஓர் ஆண்டு 'ஹஜ்' செய்கிறீர்கள்; மறு ஆண்டு உம்ராச் செய்கிறீர்கள். (ஆனால்,) இறைவழியில் அறப்போராட்டம் புரிவதை (மட்டும்) கைவிட்டுவிடுகிறீர்களே, ஏன்? அறப்போர் (புரிவது) குறித்து அல்லாஹ் ஆர்வமூட்டியிருப்பதைத் தாங்கள் அறிந்துதானே உள்ளீர்கள்!' என்று கேட்டார். (அதற்கு) இப்னு உமர்(ரலி), 'என் சகோதரர் மகனே! இஸ்லாம் ஐந்து அம்சங்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது 2. (தினம்) ஐவேளைத் தொழுகைகள். 3. ரமளான் (மாத) நோன்பு. 4. (கடமையானோர்) ஸகாத்தை நிறைவேற்றுதல். 5. (இயன்றோர்) இறையில்லமான) கஅபாவில் ஹஜ் செய்தல்' என்றார்கள்.
அந்த மனிதர், 'அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் 'இறை நம்பிக்கையாளர்களிலுள்ள இரண்டு வகுப்பார் தங்களுக்குள் சச்சரவு செய்தால், அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு வகுப்பார், மற்றொரு வகுப்பாரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்பால் வரும் வரையில், அவர்களுடன் நீங்கள் (எதிர்த்துப்) போரிடுங்கள்' என்றும் (திருக்குர்ஆன் 49:09), 'குழப்பம் நீங்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்' என்றும் (திருக்குர்ஆன் 02:193) குறிப்பிட்டிருப்பதை நீங்கள் செவியுற மாட்டீர்களா?' என்று கேட்டார். இப்னு உமர்(ரலி), '(நீர் குறிப்பிட்டுக் காட்டிய வசனங்களின் படி) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்பட்டோம். அப்போது இஸ்லாம் குறைந்த (அங்கத்தினர்களைக் கொண்ட) தாகவே இருந்தது. அப்போது (மார்க்கத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தைக் கட்டிக்காக்கும் விஷயத்தில் (பல்வேறு) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒன்று, அவரை (எதிரிகள்) கொன்றனர்; அல்லது அவரைத் துன்புறுத்தினர். முடிவில், இஸ்லாம் அதிகம் (அங்கத்தினர் கொண்டதாக) ஆனபோது குழப்பம் ஏதும் இருக்கவில்லை' என்றார்கள்.
Volume :5 Book :65