பாடம் : 1 வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப் பெற்றது? என்பது பற்றியும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பது பற்றியும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின்' எனும் சொல்லுக்குப் பாதுகாக்கக்கூடியது'என்று பொருள்; தனக்கு முன்வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக் கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன்.
4978. & 4979. ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். 2
Book : 66
4980. அபூ உஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா(ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம், 'இவர் யார் (தெரியுமா)?' என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா(ரலி), 'இவர் (தங்களின் தோழர்) திஹ்யா' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா(ரலி), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்கள்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம், 'இந்த அறிவிப்பைத் தாங்கள் யாரிடமிருந்து செவியேற்றீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடமிருந்து' என்று பதிலளித்தார்கள். 3
Book :66
4981. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :66
4982. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து 'வஹீ' (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதை விட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.4
Book :66
4983. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரலி) கூறினார்
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'ஓர்இரவு' அல்லது 'இரண்டு இரவுகள்' அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகிறேன். (எனவேதான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்கவில்லை)' என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை' எனும் (திருக்குர்ஆன் 93:1-3ஆகிய) வசனங்களை அருளினான். 5
Book :66
பாடம் : 2 குர்ஆன், குறைஷி அரேபியர் மொழி (நடை)யில் இறங்கியது. (அல்லாஹ் கூறுகின்றான்:) நாம் இதனை அரபி மொழிக் குர்ஆனாக அமைத்துள்ளோம் (43:3) தெள்ளத்தெளிந்த அரபி மொழியில் (இது அருளப்பட்டுள்ளது) (26:195)
4984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறையுயரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறையுயரின் மொழி வழகம்லேயே அதைப் பதிவு செய்யுங்கள்! ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர். 6
Book : 66
4985. ஸஃப்வான் இப்னு யஅலா(ரஹ்) கூறினார்
(என் தந்தை) யஅலா இப்னு உமைய்யா(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்கவேண்டும். (என்று ஆசையாக உள்ளது)' என்று கூறுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) 'ஜிஅரானா' எனும் இடத்தில் தமக்கு மேலே துணியொன்று நிழலிட்டுக் கொண்டிருக்கத் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது நறுமணம் பூசிய ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நறுமணம் பூசப்பட்ட அங்கியால் (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்தவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் (மெளனத்துடன்) காத்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு 'வஹீ' (வேத அறிவிப்பு) வந்தது. உமர்(ரலி) யஅலா அவர்களை 'இங்கு வாருங்கள்' என்று சைகையால் அழைத்தார்கள்.
(என் தந்தை யஅலா(ரலி) கூறினார்:)
நான் சென்றேன். (நபி(ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காகக் கட்டப்பட்டிருந்த துணிக்குள்) நான் என்னுடைய தலையை நுழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் (வஹீயின் கனத்தால்) முனகியவர்களாக சிறிதுநேரம் காணப்பட்டார்கள். பிறகு (சிறிது சிறிதாக,) அந்தச் சிரம நிலை விலகியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'சற்று முன் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' என்றார்கள். அந்த மனிதரைத் தேடி அவரை நபி(ஸல்) அவர்களிடம் (அழைத்துக்) கொண்டு வரப்பட்டது. அவரிடம் உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவிக்கொள்க! பிறகு உம்முடைய ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உம்முடைய உம்ராவிலும் செய்துகொள்க!' என்று கூறினார்கள். 7
Book :66
பாடம் : 3 குர்ஆன் திரட்டப்படுதல்.
4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்
யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்:
உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.)
(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை பேரிச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)
(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. 8
Book : 66
4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.
Book :66
4988. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். 11
Book :66
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தர்.12
4989. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்
(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்!' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்.
மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)13
Book : 66
4990. பராஉ(ரலி) அறிவித்தார்
'இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஸைதை அழைத்து வாருங்கள். அவர் தம்முடன் 'பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு அல்லது 'அகலமான எலும்பு, மைக்கூடு' ஆகியவற்றை எடுத்துவரட்டும்' என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வந்தபோது,) 'இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால், கண் பார்வையற்றவரான அம்ர் பன் உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!' என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில் 'இடைஒறு உள்ளவர்கள் தவிர' எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) இறங்கிற்று. 14
Book :66
பாடம் : 5 ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் அருளப்பெற்றது.15
4991. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரேயொரு (வட்டார) மொழிவழக்குப் படி ஜிப்ரீல்(அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றத்தந்தார்கள். அதை இன்னும் பல(வட்டார) மொழிவழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 16
Book : 66
4992. உமர்பின் கத்தாப்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அதை அவர் ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே நான் அவரைத் தண்டிக்க முனைந்தேன். பிறகு (யோசித்து) அவர் (தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும்வரை பொறுத்துக் கொண்டேன்.
(அவர் தொழுது முடித்த) பிறகு அவரின் மேல் துண்டைக் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'நீர் ஓதியபோது நான் செவியுற்ற இந்த அத்தியாயத்தை உமக்கு ஓதிக் காண்பித்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஒதிக் காண்பித்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! ஏனெனில், நீர் ஓதிக்கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக்கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன்' என்று சொன்னேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விடுங்கள்!' என்று கூறிவிட்டு (ஹிஷாம் அவர்களை நோக்கி), 'ஹிஷாமே, நீங்கள் ஓதுங்கள்!' என்றார்கள். அவர் என்னிடம் ஓதியது போன்றே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும் ஓதிக் காட்டினார். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.
பிறகு (என்னைப் பார்த்து), 'உமரே, ஓதுங்கள்!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக்கொடுத்திருந்த ஓதல்முறைப்படி நான் ஓதினேன். (அதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது. இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். 17
பகுதி 6
குர்ஆன் (அத்தியாயங்கள் வரிசைப்படி) தொகுக்கப்படுதல். 18
Book :66
பாடம் : 6 குர்ஆன் (அத்தியாயங்கள் வரிசைப்படி) தொகுக்கப்படுதல்.18
4993. யூஸுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, '(இறந்தவருக்கு அணிவிக்கப்படும்) 'கஃபன்' துணியில் சிறந்தது எது? (வெள்ளை நிறமா? மற்ற நிறமா?)' என்று கேட்டார். ஆயிஷா(ரலி), 'அடப்பாவமே! (நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கப்பட்டாலும்) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்?' என்று கூறினார். (அன்னை) அவர்கள், 'ஏன்?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'அதனை (முன்மாதிரியாக)க் கொண்டு நான் குர்ஆனை (வரிசைக் கிரமமாக) தொகுக்க வேண்டும். ஏனெனில், (தற்போது) வரிசைப் பிரகாரம் தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது' என்று கூறினார். ஆயிஷா(ரலி), '(வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில்) எதை நீங்கள் முதலில் ஓதினால் (என்ன? எதை அடுத்து ஓதினால்) என்ன கஷ்டம் (ஏற்பட்டு விடப்போகிறது?)' என்று கேட்டார்கள்.
'முஃபஸ்ஸல்' (எனும் ஓரளவு சிறிய) அத்தியாயங்களில் 19 உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது; அதில் சொர்க்கம் முதலில் அருளப்பட்டது; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது. 20 அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைகளின் மீது திருப்தியடையத் தொடங்கி)யபோது அனுமதிக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை குறித்த வசனங்கள் அருளப்ப-டடன. எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் மது அருந்தாதீர்கள்' என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள், அல்லது, 'விபச்சாரம் செய்யாதீர்கள்' என்ற (முதன் முதலில்) வசனம் அருளப்பட்டிருக்குமானால், நிச்சயம் அவர்கள், 'நாங்கள் ஒருபோதும் விபசாரத்தைக் கைவிடமாட்டோம்' என்று கூறியிருப்பார்கள். (எனவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்க '(இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில்) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மேலும், அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும், கசப்பானதுமாகும்' எனும் (திருக்குர்ஆன் 54:56 வது) வசனம் அருளப்பட்டது. (சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள) அல்பகரா (2 வது) அத்தியாயமும், அந்நிஸா (4 வது) அத்தியாயமும் நான் (மதீனாவில்) நபி(ஸல்) அவர்களுடன் (அவர்களின் மனைவியாக) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு, ஆயிஷா(ரலி) தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை (இராக் நாட்டவரான) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள்.
Book : 66
4994. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
இப்னு மஸ்வூத்(ரலி) பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம் (ஆகிய 17, 18, 19ஆம்) அத்தியாயங்கள் குறித்துக் கூறுமையில், 'இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்' என்று குறிப்பிட்டார்கள். 21
Book :66
4995. பராஉ(ரலி) கூறினார்
நான் 'சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' எனும் (87 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பே கற்றுக்கொண்டேன். 22
Book :66
4996. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த சரிநிகர் அத்தியாயங்களை நான் கற்றுள்ளேன்' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். (இதைக் கூறிய) பிறகு, அப்துல்லாஹ்(ரலி) எழுந்து (தம் இல்லத்தினுள்) சென்றார்கள். அவர்களுடன் அல்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) அவர்களும் உள்ளே சென்றார்கள். (சிறிது நேரம் கழித்து) அல்கமா(ரஹ்) வெளியே வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் அது குறித்துக் கேட்டோம். அதற்கவர்கள், 'அவை, இப்னு மஸ்வூத்(ரலி) (தொகுத்து வைத்துள்ள) குர்ஆன் பிரதியின்படி ஆரம்ப இருபது 'முஃபஸ்ஸல்' அத்தியாயங்களாகும். அவற்றின் கடைசி அத்தியாயங்கள் 'ஹாமீம்' அத்தியாயங்களாகும். 'ஹாமீம் அத்துகான்' மற்றும் 'அம்ம யத்தசாஅலூன' ஆகியனவும் அவற்றில் அடங்கும்' என்று கூறினார்கள். 23
Book :66
பாடம் : 7 நபி (ஸல்) அவர்களை, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசிய மாக, (வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதச்செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இருமுறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார்கள்.24
4997. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரிவழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமளானின் ஒவ்வோர் இரவும் - ரமளான் முடியும் வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை வாரி வழங்குவார்கள். 25
Book : 66