பாடம் : 28 திருத்தமாகவும் நிதானமாகவும் குர்ஆனை ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4). மனிதர்களுக்கு நீர் இதனைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்தக் குர்ஆனைப் படிப்படியாக அருளினோம். (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபீஹா யுஃப்ரகு' என்பதற்கு அந்த இரவில் தெளிவுப்படுத்தப்படுகிறது' என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபரக்னாஹு'எனும் சொல்லுக்கு, நாம் தெளிவுபடுத்தினோம்' என்று பொருள்.
5043. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்
நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) காலையில் சென்றோம். அப்போது ஒருவர், 'நேற்றிரவு நான் 'அல்முஃபஸ்ஸல்' அத்தியாயங்களை (முழுமையாக) ஓதி முடித்தேன்' என்றார். அதற்கு அப்துல்லாஹ்(ரலி), 'பாட்டுப் பாடுவதைப் போன்று அவரச அவரசமாக ஓதினீரா? யாகி (சரியான) ஓதல் முறையைச் செவியேற்றுள்ளோம். மேலும், நபி(ஸல்) அவர்கள் தாம் (வழக்கமாக) ஓதிவந்த ஒரே அளவிலமைந்த 'அல்முஃபஸ்ஸல்' அத்தியாயங்களில் பதினெட்டையும் 'ஹாமீம்' (எனத் தொடங்கும் அத்தியாயங்களின்) குடும்பத்தில் இரண்டு அத்தியாயங்களையும் நான் மனனமிட்டுள்ளேன்' என்றார்கள். 56
Book : 66
5044. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
'(நபியே!) இந்த 'வஹீ'யை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் 'வஹீ'யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எங்கே வேத வசனங்களை மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் அதை மனனமிடுவதற்காக ஓதியபடி) தம் நாவையும் தம் இதழ்களையும் அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ் 'லா உக்சிமு பி யவ்மில் கியாமா' என்று தொடங்கும் (75 வது) அத்தியாயத்திலுள்ள 'இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்களின் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்' எனும் (திருக்குர்ஆன் 75:16, 17) வசனங்களை அருளினான். (அதாவது,) 'உங்கள் நெஞ்சில் பதியச்செய்வதும் அதை நீங்கள் ஓதும்படி செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்' (என்று சொன்னான்). 'மேலும, நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்' (திருக்குர்ஆன் 75:18) (அதாவது,) 'நாம் இதனை அருளும்போது செவி கொடுத்துக் கேட்டுக்கொண்டிருங்கள்' (என்றும் சொன்னான்). 'பின்னர், இதன் கருத்தை விவரிப்பதும் எம்முடைய பொறுப்பேயாகும்' (திருக்குர்ஆன் 75:19) (அதாவது,) 'உங்கள் நாவினால் அதனை (மக்களுக்கு) விளக்கித் தரச்செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்' என இறைவன் கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்பு) தம்மிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் (வஹீயுடன்) வருகையில் நபி(ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (மெளமானகக் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். அவர் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்றுவிடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி(ஸல்) அவர்கள் வசனங்களை ஒதிக்கொண்டார்கள். 57
Book :66
பாடம் : 29 நீட்டி ஓதுதல்.58
5045. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்
நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறைபற்றிக் கேட்டேன் அதற்கவர்கள், '(நீட்டி ஓதவேண்டிய இடங்களில்) நன்றாக நிட்டி ஓதுவது நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது' என்று பதிலளித்தார்கள்.
Book : 66
5046. கத்தாதா(ரஹ்) அறிவித்தார்
'நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?' என அனஸ்(ரலி) அவர்களிடம் வினவப்பட்டது.
அதற்கவர்கள், 'நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா..ஹ்' என நீட்டுவார்கள், 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
Book :66
பாடம் : 30 தர்ஜீஉ (முறையில் ஓதுதல்).59
5047. அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) பயணித்துக் கொண்டிருந்த தம் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு 'அல்ஃபத்ஹ் எனும் (48 வது) அத்தியாயத்தை' அல்லது 'அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை' மெல்லிய குரலில் 'தர்ஜீஉ' எனும் ஓசை நயத்துடன் ஓதிக்கொண்டிருந்ததை பார்த்தேன். 60
Book : 66
பாடம் : 31 இனிய குரலில் குர்ஆனை ஓதுதல்.
5048. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) 'அபூ மூஸா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது' என என்னிடம் கூறினார்கள்.
Book : 66
பாடம் : 32 அடுத்தவரிடமிருந்து குர்ஆனைச் செவியேற்க விரும்புவது.
5049. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'குர்ஆனை எனக்கு ஓதிக்காட்டுங்கள்!' என்று கூறினார்கள். நான் 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?' என்று கேட்டேன். அவர்கள் 'பிறரிடமிருந்து அதை நான் செவியேற்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். 61
Book : 66
பாடம் : 33 ஓதச்சொன்னவர் ஓதிக் கொண்டிருப்பவரிடம் (ஓதியது) போதும் எனக் கூறுவது.
5050. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்!' என்று கூறினார்கள். நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள். எனவே, நான் 'அந்நிஸா' எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில் கொண்டு வரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இத்துடன் போதும்!' என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களைப் பார்த்தேன்; அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. 62
Book : 66
பாடம் : 34 எத்தனை நாட்களில் குர்ஆனை ஓதிமுடிக்க வேண்டும் (என்ற வரைமுறை உண்டா) என்பதும் குர்ஆனில் உங்களுக்கு சுலபமான அளவு ஓதுங்கள் எனும் (73:20ஆவது) இறைவசனமும்.63
5051. சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அறிவித்தார்
என்னிடம் (கூஃபா நகர நீதிபதி) அப்துல்லாஹ் இப்னு ஷுப்ருமா(ரஹ்), 'ஒருவர் (தொழுகையில், அல்லது நாளொன்றுக்கு) குர்ஆனிலிருந்து (குறைந்தது) எவ்வளவு ஓதினால் போதும் என்று நான் ஆய்வு செய்தபோது, மூன்று வசனங்களை விடக் குறைவான (வசனங்களைக் கொண்ட) ஓர் அத்தியாயத்தை நான் காணவில்லை; அதனால் மூன்று வசனங்களுக்குக் குறைவாக ஒருவர் ஓதுவது முறையாகாது என்ற முடிவுக்கு வந்தேன்' என்று கூறினார்கள்.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) கூறினார்
அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, அன்னாரை சந்தித்தேன். அப்போது அவர்கள், 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அவ்விரண்டுமே போதும்' என்ற நபிமொழியைக் கூறினார்கள். 64
Book : 66
5052. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
பாரம்பரியமிக்க ஒரு பெண்ணை என் தந்தை எனக்கு மணமுடித்து வைத்தார்கள். (என் தந்தை) அமர்(ரலி) தம் மருமகளை அணும் அவளுடைய கணவர் குறித்துக் கேட்பது (அதாவது என்னைப் பற்றி விசாரிப்பது) வழக்கம்.
அப்போது அவள், 'அவர் நல்ல மனிதர் தாம்; (ஆனால்,) அவர் படுக்கைக்கு வரவுமில்லை; அவரிடம் நான் வந்து சேர்ந்தது முதல் எனக்காகத் திரைச் சீலையை அவர் இழுத்து மூடவுமில்லை' என்று சொல்வாள். இதே நிலை நீடித்தபோது, (என் தந்தை) அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் (இதைப் பற்றிக்) கூறினார்கள். அப்போது, 'என்னை வந்து சந்திக்குமாறு உங்கள் மகனிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு நான் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், 'நீ எப்படி நோன்பு நோற்கிறாய்?' என்று கேட்டார்கள். நான், 'தினந்தோறும் நோன்பு நோற்கிறேன்' என்று சொன்னேன். ('குர்ஆனை) எப்படி ஓதி முடிக்கிறாய்' என்று கேட்டார்கள். நான், 'ஒவ்வோர் இரவிலும் (குர்ஆனை ஓதி முடிக்கிறேன்)' என்று சொன்னேன். அவர்கள், 'மாதந்தோறும் மூன்று நாள்கள் நோன்பு நோற்றுக்கொள். குர்ஆனை ஒவ்வொரு மாதமும் (ஒரு முறை முழுமையாக) ஓதிக்கொள்' என்று கூறினார்கள். 'நான் இதைவிட அதிகமாக (நோன்பு நோற்க) சக்திபெற்றுள்ளேன்' என்று கூறினேன். 'இரண்டு நாள்கள் நோன்பைவிட்டுவிட்டு, ஒரு நாள் நோற்றுக்கொள்!' என்று கூறினார்கள். நான் இதைவிடவும் அதிகமாக (நோன்பு நோற்க) சக்தி பெற்றுள்ளேன்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், '(இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் உயர்ந்த நோன்பு வழக்கப்படி, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றுக் கொள்! மேலும், ஒவ்வோர் ஏழு இரவுகளிலும் (ஒரு முறை குர்ஆனை) ஓதி(முடித்து)க் கொள்' என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வழங்கிய இந்தச் சலுகையை நான் ஏற்று நடந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்! காரணம் நான் (இப்போது) தள்ளாமை வயதையடைந்து மிகவும் பலவீனம் அடைந்துவிட்டேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்:)
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) (தம் முதுமையில்) குர்ஆனில் ஏழில் ஒரு பாகத்தை (அதாவது ஒரு மன்ஸிலை) தம் வீட்டாரில் சிலரிடம் பகலில் ஓதிக் காட்டுவார்கள். (இரவில்) ஓதவேண்டுமென அவர்கள் விரும்பிய பாகத்தையே (இவ்வாறு) பகலில் ஓதிக் காட்டுவார்கள். இரவில் (ஓதும்போது) சுபலமாக இருக்கட்டும் என்பதே இதற்குக் காரணம். அன்னார் (நோன்பு நோற்க) சக்தி பெறவேண்டும் என விரும்பும்போது, பல நாள்கள் நோன்பு நோற்காமல்விட்டுவிட்டு அந்நாள்களைக் கணக்கில் வைத்துக் கொள்வார்கள். பிறகு (வசதிப்படும்போது) அதே அளவு நாள்கள் நோன்பு நோற்பார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்தபோது (-நபியவர்கள் இறந்தபோது) தாம் செய்து வந்த எந்த வழிபாட்டையும் கைவிடுவதை அன்னார் விரும்பாததே இதற்குக் காரணம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகி நான்) கூறுகிறேன்:
(அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம், 'மாதம் ஒரு முறை குர்ஆனை ஓதி நிறைவுசெய்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அதைவிட அதிகமாக ஓதுவதற்குத் தம்மால் முடீயும் என அன்னார் தெரிவிக்க, நபியவர்கள் நாள்களைக் குறைத்துக் கொண்டே வந்து) மூன்று நாள்களுக்கு ஒருமுறை (குர்ஆனை ஓதி நிறைவு செய் என்று நபியவர்கள் கூறினார்கள்) என அறிவிப்பாளர்களில் சிலர் தெரிவித்துள்ளனர். 'ஏழு நாள்களுக்கு ஒரு முறை' என்றே பெரும்பாலோர் கூறியுள்ளனர்.
Book :66
5053. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார்
என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'எத்தனை நாள்களில் குர்ஆனை ஓதிமுடிக்கிறாய்?' என்று கேட்டார்கள்.
Book :66
5054. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதே' என்று கூறினார்கள்.
Book :66
பாடம் : 35 குர்ஆன் ஓதும் போது அழுவது.
5055. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
'எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'அந்நிஸா' எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். 'ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?' எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது 'நிறுத்துங்கள்' என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை கண்டேன். 65
இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர்கள் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 66
5056. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
'எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், 'தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார்கள். 66
Book :66
பாடம் : 36 பிறருக்குக் காட்டுவதற்காக, அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக, அல்லது குற்றமிழைப்பதற் காகக் குர்ஆனை ஓதுவது பாவமாகும்.
5057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்: அவர்கள் குறைந்தவயது கொண்ட இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களின் இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம் வரை) செல்லாது. எனவே, அவர்களை நீங்கள் எங்கு எதிர்கொண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்' என்று கூறினார்கள்.
என அலீ(ரலி) அறிவித்தார். 67
Book : 66
5058. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு கலைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டு சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடுவார்கள்.
(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்தா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.)
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 68
Book :66
5059. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரிச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலை, துளிசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் 'கசப்பானது' அல்லது 'அருவருப்பானது' அதன் வாடையும் வெறுப்பானது.
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 69
Book :66
பாடம் : 37 உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள்.
5060. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். 70
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book : 66
5061. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டிருக்கும் வரை குர்ஆனை ஒதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபட்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள்.
என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இது, மற்ற அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :66
5062. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
ஒருவர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்றேன். (விவரத்தை விசாரித்தறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்' என்று கூறிவிட்டு, (ஒவ்வொருவரையும் பார்த்து, 'அவ்வாறே) ஓதுங்கள்!' என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள், '(வேற்றுமைகொள்ளாதீர்கள்!) ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (இப்படித்தான்) வேறுபட்டனர். அது அவர்களை அழித்துவிட்டது' என்று கூறினார்கள் எனவே பெரும்பாலும் கருதுகிறேன்.

Book :66