திருமணம்
5063. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர்.2 அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள்.
Volume :5 Book :67
5064. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'அநாதை(ப் பெண்களை மணந்து அவர்)களின் விஷயத்தில் நீதி செலுத்த இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக நீங்கள் மணமுடித்துக கொள்ளலாம். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணந்துகொள்ளுங்கள்; அல்லது உங்கள் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்ணையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே ஏற்றதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 04:3 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்.
என் சகோதரியின் (அஸ்மாவின்) புதல்வரே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண் தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கிற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தின் மீதும், அழகின் மீதும் ஆசைப்பட்டு அவளை (கர்ப்பளாரான) அவர், மற்றவர்கள் அவளுக்கு வழங்குவது போன்ற (விவாகக் கொடையான) மஹ்ரை விடக் குறைவானதை வழங்கி அவளை மணந்துகொள்ள விரும்புகிறார் (எனும் நிலையில் இருப்பவள் ஆவாள்.) இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நிறைவான மஹ்ரை அளித்து அந்தப் பெண்களுக்கு நீதி செய்யாமல் அவர்களை மணந்துகொள்ள (இந்த வசனத்தின் மூலம்) அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற (மனதுக்குப் பிடித்த) பெண்களை மணமுடித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது'' என்று பதிலளித்தார்கள். 3
Volume :5 Book :67
5065. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்
நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்து, 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அத்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள், நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்:
''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். 4
Volume :5 Book :67
5066. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
Volume :5 Book :67
5067. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்
(அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் ஜனாஸாவில் (இறுதிப் பிரார்த்தனையில்) நாங்கள் 'சரிஃப்' எனும் இடத்தில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டோம். 6 அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
இவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியாராவார்.
இவரின் (உடல் வைக்கப்பட்டுள்ள) கட்டிலைத் தூக்கும்போது குலுக்கவோ அசைக்கவோ செய்யாதீர்கள்; மென்மையுடன் (எடுத்துச்) செல்லுங்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். எட்டுப்பேருக்கு இரவைப் பங்கிட்டு வந்தார்கள். ஒரேயொருவருக்கு மட்டும் பங்கிட்டுத் தரவில்லை.7
Volume :5 Book :67
5068. அனஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள். (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். 8
இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :5 Book :67
5069. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி), 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள்.
Volume :5 Book :67
5070. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
எண்ணத்தைப் பொறுத்தே செயல் அமைகிறது:
ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்பதிப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக(ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்கவிரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.
என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். 9
Volume :5 Book :67
5071. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களடன் துணைவியர் எவரும் இருக்கவில்லை. எனவே, நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து) கொள்ளலாமா?' என்று கேட்டோம். அப்போது நபி(ஸல்) அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். 11
Volume :5 Book :67
5072. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (நாடு துறந்து மதீனாவுக்கு) வந்தார்கள். அப்போது அவருக்கும் ஸஅத் இப்னு ரபீஉஅல் அன்சாரி(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். இந்த ஸஅத் இப்னு ரபீஉ அல்அன்சாரி(ரலி) அவர்களுக்கு இரண்டு துணைவியர் இருந்தனர். எனவே ஸஅத்(ரலி) தம் வீட்டாரிலும் தம் செல்வத்திலும் சரிபாதியை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் வீட்டாரிலும் செல்வத்திலும் சுபிட்சத்தை அருள்வானாக! எனக்குக் கடை வீதியைக் காட்டுங்கள்!'' என்று கூறினார்கள்.
பிறகு கடைவீதிக்கு வந்து (வியாபாரம் செய்து) சிறிது பாலாடைக் கட்டியையும் சிறிது நெய்யையும் இலாபமாகப் பெற்றார்கள். சில நாள்களுக்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு, 'என்ன இது அப்துர் ரஹ்மானே?' என்று கேட்டார்கள். அதற்கு அப்துர்ரஹ்மான்(ரலி), 'நான் அன்சாரிப் பெண் ஒருவரை மணந்தேன்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவளுக்கு (மஹ்ராக) என்ன கொடுத்தாய்?' என்று கேட்க, 'ஒரு பேரிச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா - மணவிருந்து கொடு!'' என்று கூறினார்கள். 13
Volume :5 Book :67
5073. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவம் மேற்கொள்ள (விரும்பி அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
Volume :5 Book :67
5074. ஸஅத் இப்னு ஆபி வக்காஸ்(ரலி) அறிவித்தார்
உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அப்படி) துறவறம் மேற்கொள்ள அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்துகொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம்.
Volume :5 Book :67
5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்:
இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87)14
Volume :5 Book :67
5076. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நான் (ஒருமுறை) 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் இளைஞன்; பெண்களை மணந்துகொள்ளத் தேவையான பொருள் ஏதும் என்னிடம் இல்லை. (இந்நிலையில்) நான் தவறான வழிக்குச் சென்றுவிடுவேனோ என என்னைப் பற்றி நானே அஞ்சுகிறேன். (நான் காயடித்துக்கொள்ளலாமா?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) மெளனமாக இருந்தார்கள். மீண்டும் நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகும், நான் முன் போன்றே கேட்டேன். அப்போதும் மெளனமாகவே இருந்தார்கள். பிறகு (நான்காது முறையாக) முன்போன்றே நான் கேட்டபோது, 'அபூ ஹுரைரா! நீங்கள் (வாழ்க்கையில்) சந்திக்கவிருக்கிற அனைத்தையும் (ஏற்கெனவே எழுதியாயிற்று அவற்றை) எழுதிய எழுதுகோலும் கூட காய்ந்துவிட்டது. எனவே, நீங்கள் காயடித்துக் கொள்ளுங்கள்; அல்லது சும்மா இருங்கள். (எல்லாம் ஒன்று தான். )'' என்று கூறினார்கள்.
Volume :5 Book :67
5077. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(ஒருமுறை) நான் நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் இறங்குகிறீர்கள். அதில் (கால்நடைகளினால்) உண்ணப்பட்டுப்போன ஒரு மரத்தையும் உண்ணப்படாத ஒரு மரத்தையும் காண்கிறீர்கள். இந்த இரண்டில் எந்த மரத்தில் தங்கள் ஒட்டகத்தை மேயவிடுவீர்கள்? கூறுங்கள்!'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் 'எதில் ஏற்கெனவே மேயவிடப்படவில்லையோ அதில்தான் (நான் என் ஒட்டகத்தை மேய்ப்பேன்)'' என்று பதிலளித்தார்கள்.
தம்மைத் தவிர வேறு எந்த கன்னிப் பெண்ணையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணக்கவில்லை என்ற கருத்தில் தான் ஆயிஷா(ரலி) இவ்வாறு கூறினார்கள்:
Volume :5 Book :67
5078. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன்.
Volume :5 Book :67
5079. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நாங்கள் (தபூக்) போரிலிருந்து நபி(ஸல்) அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் மெதுவாகச் செல்லக்கூடிய என்னுடைய ஒட்டகத்தின் மீது இருந்துகொண்டு அவசரப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் எனக்குப் பின்னாலிருந்து வாகனம் ஒன்றில் வந்து சேர்ந்து தம்மிடமிருந்த கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தைக் குத்தினார். உடனே என்னுடைய ஒட்டகம் நீ காணுகிற ஒட்டகங்களிலேயே மிக உயர் ரகமானது போன்று ஓடலாயிற்று. (உடனே நான் திரும்பிப் பார்த்தேன்.) அங்கு நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் (என்னிடம்,) 'என்ன அவரசம் உனக்கு?' என்று கேட்டார்கள். 'நான் புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்ணையா? (மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான் 'கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)'' என்று சொன்னேன். 'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்று கேட்டார்கள்.
பிறகு நாங்கள் (மதீனா வந்து சேர்ந்து ஊருக்குள்) நுழையப் போனபோது நபி(ஸல்) அவர்கள், '(நீங்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்ட தகவல்விட்டுப் பெண்களைச் சென்றடைய) இரவு இஷா - நேரம் வரும் வரை சற்று பொறுத்திருங்கள்! தலைவிரிகோலமாயிருக்கும் பெண்கள் தலைவாரிக்கொள்ளட்டும் (கணவனைப்) பிரிந்திருந்த பெண்கள் சவரக்கத்தியைப் பயன்படுத்தி(த் தங்களை ஆயத்தப்படுத்தி)க் கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். 17
Volume :5 Book :67
5080. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'யாரை மணமுடித்தாய்?' என்று கேட்டார்கள். நான் 'கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்'' என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், 'உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?' என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்) கூறினார்:
நான் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்ள் பின்வருமாறு கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்கள்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!'' என்று கேட்டார்கள்.
Volume :5 Book :67
5081. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் புதல்வியும் சிறு வயதினருமான) ஆயிஷா(ரலி) அவர்களைப் பெண் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'நான் தங்களின் சகோதரன் ஆயிற்றே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையிலும் வேதத்தின் அடிப்படையிலுமே நீங்கள் எனக்கு சகோதரர் ஆவீர்கள். உங்களுடைய புதல்வி எனக்கு மணமுடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளவர் தாம்'' என்று கூறினார்கள்.
Volume :5 Book :67
5082. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள். 18
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :67