பாடம் : 2 நீங்கள் அவன் பக்கமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள் ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போ ரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம்.
523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல், நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(ப் பயன்படுத்துவதை)விட்டும் உங்களைத் தடுக்கிறேன்' என்று கூறினார்கள்.
குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப் பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)
Book : 9
பாடம் : 3 தொழுகையை நிலைநிறுத்துவதாக ஒருவரிடம் மற்றவர் உறுதிமொழி அளிப்பது.
524. ஜரீர்பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்லதையே நாடுவது ஆகிய காரியங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிப் பிரமாணம் எடுத்தேன்.
Book : 9
பாடம் : 4 தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
525. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) 'நீர் அதற்குத் தகுதியானவர் தாம்' என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.
அதற்கு உமர்(ரலி), 'நான் இதைக் கருதவில்லை' என்றனர். 'கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்' என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். 'அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். 'அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது' என்று உமர்(ரலி) கூறினார்.
ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். 'ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்' என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) 'அந்தக் கதவு உமர்(ரலி) தாம்' என்றார்கள்.
Book : 9
526. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
Book :9
பாடம் : 5 தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு.
527. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்' என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்' என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
Book : 9
பாடம் : 6 ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
528. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 9
பாடம் : 7 கால தாமதப்படுத்தித் தொழுது தொழுகையை வீணாக்குவது.
529. கைலான் அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.
Book : 9
530. ஸுஹ்ரீ அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்.
Book :9
பாடம் : 8 தொழுது கொண்டிருப்பவர் வலிவும் உயர்வும் உடைய தம் இறைவனிடமே இரகசியமாக உரையாடுகிறார்.
531. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தொழும்போது தம் இறைவனிடம் தனிமையில் உரையாடுகிறார். எனவே தம் வலப்புறம் துப்ப வேண்டாம். எனினும் தம் இடது பாதத்திற்குக் கீழே துப்பிக் கொள்ளலாம்.'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
'தமக்கு முன் புறமாகத் துப்பலாகாது; எனினும் தம் இடது புறமாகவோ, தம் பாதங்களுக்குக் கீழேயோ, துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கதாதா குறிப்பிட்டார்கள்.
'தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்ப வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷஃபா குறிப்பிடுகிறார்.
'கிப்லாத் திசையிலோ தம் வலப்புறமோ துப்பலாகாது; எனினும் தம் இடப்புறமோ, தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) வழியாக ஹுமைத் அறிவித்தார்.
Book : 9
532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கலாகாது! துப்பும்போது தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்பலாகாது! ஏனெனில் அவர் தம் இறைவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்.'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :9
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும் வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது.
533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 9
534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :9
535. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு' என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!' என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.)
Book :9
536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :9
537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :9
538. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்.'
என அபூ ஸயீது(ரலி) அறிவித்தார்.
Book :9
பாடம் : 10 பயணத்தின் போது வெப்பம் தணிந்த பின் லுஹ்ரைத் தொழுவது.
539. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 9
பாடம் : 11 சூரியன் சாய்ந்த பிறகே (நண்பகலுக்குப் பின்பே) லுஹ்ர் நேரம் ஆரம்பமாகிறது. (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாத போது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
540. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்' என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா' என்று நபி(ஸல்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்' என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை' என்றார்கள்.
Book : 9
541. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
எங்களில் ஒருவர் தம் அருகிலிருப்பவரை அறிந்து கொள்ளும் (அளவில் வெளிச்சம் ஏற்படும்) சமயத்தில் நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுபவர்களாக இருந்தனர். அறுபது (வசனங்கள்) முதல் நூறு வரை ஸுப்ஹில் ஓதுவார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது லுஹர் தொழுபவர்களாக இருந்தனர். அஸரையும் தொழுவார்கள். (அஸர் தொழுகையை நிறைவேற்றிய) எங்களில் ஒருவர் மதீனாவின் கடைக் கோடிக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தால் சூரியன் உயிரிடன் (அதாவது ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்.
இந்த ஹதீஸை அபூ பர்ஸாவிடமிருந்து அறிவிக்கும் அபுல் மின்ஹால், 'மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன். இஷாவை இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் வரை அல்லது இரவின் பாதி வரை தாமதப் படுததுவது பற்றிப் பெருட்படுத்த மாட்டார்கள் என அபூ பர்ஸா(ரலி) குறிப்பிட்டார்கள்' என்கிறார்.
Book :9
542. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நண்பகலில் நபி(ஸல்) அவர்களின் பின்னே தொழும்போது வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடைகளின் மீது ஸஜ்தாச் செய்பவர்களாக இருந்தோம்.
Book :9