5332. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
இப்னு உமர்(ரலி) தம் மனைவியை அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:
அவர் தம் மனைவியைத் திருப்பி அழைத்துக்கொள்ளவேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருந்துவிட்டு, அவர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம் இது குறித்து வினவப்பட்டால் 'உன் மனைவியை நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணந்து (உடலுறவு) கொள்ளும் வரை அவள் உனக்கு விலக்கப்பட்டவளாக ஆம்விடுவாள்' என்று பதிலளிப்பார்கள்.
மற்றோர் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:
இப்னு உமர்(ரலி) 'நீ ஒரு றை, அல்லது இருமுறை தலாக் சொல்லியிருந்தால் (அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ளலாம்). இவ்வாறு (திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு) தான் நபி(ஸல்)அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்' என்று கூறுவார்கள். 90
Volume :6 Book :68
5333. யூனுஸ் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மணவிலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். எனவே, (என் தந்தை) உமர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளவேண்டும். பிறகு அவள் 'இத்தா'வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் கூறுகிறார்:
நான் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்து கொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?' என்று கேட்டார்கள்.91
Volume :6 Book :68
5334. ஸைனப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன்.
அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா(ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரண்டு கன்னங்களிலும் தடவினார்கள். பின்னர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக்கேட்டுள்ளேன். (எனவேதான் இப்போது நறுமணம் பூசினேன்.)' என்றார்கள். 93
Volume :6 Book :68
5335. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.
பிறகு, 'இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி 'அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்றார்கள்.94
Volume :6 Book :68
5336. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'விலிருக்கும்) என் மகளின் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ளலாமா?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'வேண்டாம்' என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் வேண்டாம்' என்றே கூறினார்கள். பிறகு, '(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) 'இத்தா'க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஓராண்டு 'இத்தா' இருப்பாள்.) ஆண்டின் முடிவில் ('இத்தா' முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவான். (அந்த நிலை இப்போது இல்லை)' என்றார்கள்.
Volume :6 Book :68
5337. ஹுமைத் இப்னு நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம், 'ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள்' என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மேசாமானதை அணிந்துகொள்வாள். ஓராண்டு செல்லும் வரை எந்த நறுமணத்தையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளுடைய உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே 'இத்தா' முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவற்றையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'தஃப்தள்ளு பிஹி' (அதன் மீது தேய்த்துக் கொள்வாள்) எனும் சொற்றொடரின் கருத்தென்ன?' என்று மாலிக்(ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர்கள், 'அந்தப் பெண் அந்த உயிரினத்தின் மீது தன் உடலைத் தேய்த்துக்கொள்வாள்' என்று (பொருள்) கூறினார்கள்.
Volume :6 Book :68
5338. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். ('இத்தா'வில் இருந்த அவளுடைய கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். எனவே, அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய 'ஆடைகளிலேயே மோசமானதில்' அல்லது 'மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒருவருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :68
5339. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்த ஒருவருக்கு மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!
இதை (அன்னை) உம்மு ஹபீபா பின்த் அபீ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :68
5340. உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்
கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாள்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இதை முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்.
Volume :6 Book :68
5341. உம்மு அத்திய்யா(ரலி) கூறினார்
இறந்த எவருக்காகவும் மூன்று நாள்களுக்கு மேல் நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர!
(அதாவது 'இத்தா'வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக் கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக்கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); ஆனால், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ('அஸ்ப்' எனும்) ஆடை தவிர! எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது 'ழஃபார்' எனும் இடத்தில் கிடைக்கும் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக் கொள்ள எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாதென்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.96
அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.)
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுகிறது. 'காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் (ஃகாபூர், காஃபூர்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. மேலும், (இதிலுள்ள) 'நுப்ஃதத்' எனும் சொல்லுக்குத் துண்டு' என்று பொருள்.
Volume :6 Book :68
5342. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; கணவனுக்காகத் தவிர! ஏனெனில், (கணவன் இறந்த) அவள் (நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கம் கடைப்பிடிப்பாள். அப்போது) அஞ்சனம் தீட்டிக்கொள்ள மாட்டாள். சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்; நெய்வதற்கு முன் நூலில் சாயமிட்டுத் தயாரிக்கப்பட்ட ('அஸ்ப்' எனும்) ஆடையைத் தவிர!
என உம்முஅத்திய்யா(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :68
5343. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்
(கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது 'குஸ்த்' மற்றும் 'ழஃபார்' ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) 'குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுகிறது 'காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் (ஃகாபூர், காஃபூர்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. 98
Volume :6 Book :68
5344. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
'உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்து போயிருந்தால், அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்' எனும் (திருக்குர்ஆன் 02:234 வது) வசனத்தின் கருத்தாவது:
(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம் பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த 'இத்தா'வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் 'உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பாரமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது' எனும் (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம் பத்து நாள்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம் இருபது நாள்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாள்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவன் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாள்களுக்குப் பின்) வெளியேறிக் கொள்ளலாம். இதைத்தான் 'வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிற (மறுமணம் போன்ற)வற்றை செய்தார்களாயின் (உறவினர்களாகிய) உங்களின் மீது எந்தக் குற்றமும் கிடையாது' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) வசனம் குறிக்கிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாள்கள் எனும்) 'இத்தா'க் கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.
(எனவே, 02:234 வது வசனம், 02:240 வது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித்(ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீ நஜாஹ்(ரஹ்) கூறினார்.
'இந்த வசனம் (திருக்குர்ஆன் 02:240), அவள் தன்னுடைய கணவன் வீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் 'இத்தா' இருப்பாள். இதையே இந்த (திருக்குர்ஆன் 02:240 வது) வசனத் தொடர் குறிக்கிறது' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார்கள்.
(இதைத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ(ரஹ்) கூறினார்
அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் 'இத்தா' இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க் கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறினான்: ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கிறவற்றைச் செய்துகொண்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.
தொடர்ந்து அதாஉ(ரஹ்) கூறினார்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12 வது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்துதர கணவன் சாசனம் செய்ய வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் 'இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.99
Volume :6 Book :68
5345. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர' என்று சொல்லக் கேட்டுள்ளேன். 100
Volume :6 Book :68
5346. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நாய் விற்ற காசு, சோதிடனின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 102
Volume :6 Book :68
5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103
Volume :6 Book :68
5348. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அடிமைப் பெண்கள் (விபசாரம் போன்ற தகாத வழிகளில்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
Volume :6 Book :68
5349. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் 'ஒருவர் தம் மனைவியின் மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன?)' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்:
அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்துவிட்டு, 'உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்க, (தம்பதியர்களான) அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகும் நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?' என்று கேட்க, அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தனர். எனவே, (தம்பதியரான) அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப்(ரஹ்) கூறினார்:
என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) 'இந்த ஹதீஸில் ஒரு விஷயத்தைத் தாங்கள் சொல்லவில்லை என்றே கருதுகிறேன்' என்று கூறிவிட்டு, பிறகு அவர்களே (பின்வருமாறு) கூறினார்கள்: (தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டிய) அந்த மனிதர் '(மஹ்ராக நான் அளித்த) என் பொருள் (என்ன வது?)' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(உம்முடைய குற்றச் சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர். (அதற்கு இந்த மஹ்ர் நிகராம்விடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அச்செல்வம் (மஹ்ர்) உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறினார்கள். 105
Volume :6 Book :68
5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்' என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), 'இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது' என்று கூறினார்கள்.
அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாம்விடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது' என்று கூறினார்கள். 107
Volume :6 Book :68