பாடம் : 1 நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள் எனும் (20:81ஆவது) இறைவசனமும், நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களிலிருந்து செலவு செய்யுங்கள் எனும் (2:267 ஆவது) இறைவசனமும், (தூதர்களே) தூய்மையான வற்றிலிருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன் எனும் (23:51ஆவது) இறைவசனமும்.2
5373. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.3
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்அனீ' எனும் சொல்லுக்குக் 'கைதி' என்று பொருள்.
Book : 70
5374. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
முஹம்மத்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.
Book :70
5375. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்.4 (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), 'அபூ ஹுரைரா!' என்று அழைத்தார்கள். நான், 'இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்' என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!' என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு 'மீண்டும் (அருந்துங்கள்)' என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாம்விட்டது.
பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். '(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்' என்று சொன்னேன். உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமான தாய் இருந்திருக்கும்' என்று கூறினார்கள்.5
Book :70
பாடம் : 2 உணவு உண்ணும் போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும், வலக் கரத்தால் உண்பதும்.
5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
Book : 70
பாடம் : 3 (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பது. அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள் என்று கூறினார்கள்.6
5377. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) (அவர்களுக்கு) அவர்களின் (முதல் கணவர் மூலம் பிறந்த) புதல்வரான உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் உணவு உண்டேன். தட்டின் ஓரங்களிலிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு' என்று கூறினார்கள்.
Book : 70
5378. வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம்(ரஹ்) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் அவர்களின் வளர்ப்பு மகன் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்' என்று கூறினார்கள்.
Book :70
பாடம் : 4 உடனிருப்பவர் தமது செயலால் அருவருப்பு அடையவில்லை என்றால் (உணவருந்தும்) ஒருவர் உணவுத் தட்டின் நாலா பாகங் களிலும் (உணவுப் பொருளைத்) தேடுவது (ஒழுக்கக்கேடு ஆகாது).
5379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தையற்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவுக்காக (விருந்துக்கு) அழைத்தார். நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை கண்டேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.7
Book : 70
பாடம் : 5 உணவு உண்பது உள்ளிட்ட செயல்களில் வலக் கரத்தைப் பயன்படுத்துவது. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் உன் வலக் கரத்தால் சாப்பிடு என்று சொன்னார்கள்.8
5380. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (உளு மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் காலணி அணியும் போதும், தலைவாரிக் கொள்ளும்போதும் தம்மால் இயன்ற வரை வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
அறிவிப்பாளர் ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.
(இந்த ஹதீஸை) இதற்கு முன் (இராக்கில் உள்ள) 'வாஸித்' நகரில் வைத்து அஷ்அஸ்(ரஹ்) அறிவித்தபோது 'நபி(ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)' என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள்.9
Book : 70
பாடம் : 6 வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10
5381. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!' என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.11
Book : 70
5382. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்
நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாரிடமாவது உணவேதும் இருக்கிறதூ?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் 'ஒரு ஸாஉ' அல்லது 'அது போன்ற அளவு' உணவு(மாவு)தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது.
(சற்று நேரத்திற்குப்) பின் மிக உயரமான பரட்டைத் தலை கொண்ட இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்கா? அல்லது அன்பளிப்பா?' என்று கேட்டார்கள்.
அவர் 'இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டு வந்துள்ளேன்)' என்று பதிலளித்தார்.
அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் அதன் ஈரலில் ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு அவரிடமே (நேரடியாக) அதைக் கொடுத்துவிட்டார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து(ப் பாதுகாத்து) வைத்தார்கள். பிறகு இரண்டு (அகன்ற) தட்டுகளில் அந்த ஆட்டு இறைச்சியை வைத்தார்கள். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளிலும் மீதியிருந்தது. எனவே, நான் அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிச் சென்றேன்.12
Book :70
5383. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13
Book :70
பாடம் : 7 கண் பார்வையற்றவர், கால் ஊனமுற்றவர் மற்றும் நோயாளி ஆகியோர் (பிறர் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவதில் அவர்கள்) மீது எந்தக் குற்றமும் இல்லை எனும் (24:61ஆவது) இறைவசனமும்,பயணச் செலவைப் பகிர்ந்துகொள்வதும், உணவைச் சேர்ந்து உண்பதும்.
5384. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் 'சஹ்பா' எனும் இடத்தில் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்: ஸஹ்பா என்பது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ள இடமாகும்.
அப்போது மாவுதான் கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் மென்று சாப்பிட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படி பணித்தார்கள். (தண்ணீர் வந்தவுடன்) வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் கொப்பளித்தோம். எங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), 'இந்த ஹதீஸை நான் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடமிருந்து முதலாவதாகவும் இறுதியாகவும் கேட்டேன்' என்று கூறுகிறார்கள். 14
Book : 70
பாடம் : 8 மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்.
5385. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார்
நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருந்தார். அப்போது 'நபி(ஸல்) அவர்கள் தாம் இறக்கும் வரை மிருதுவான ரொட்டியையோ, வெந்நீரால் முடி களையப்பட்டுத் தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டையோ உண்டதில்லை' என்று அனஸ்(ரலி) கூறினார்.
Book : 70
5386. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்' என்று பதிலளித்தார்கள்.
Book :70
5387. அனஸ்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கி, (கைபருக்கும் மதீனாவுக்கும் இடையே மூன்று நாள்கள்) தங்கினார்கள். அப்போது நான் அவர்களின் வலீமா - மணவிருந்துக்காக முஸ்லிம்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தோல் விரிப்புகளைக் கொண்டுவரும்படி பணித்தார்கள். அவ்வாறே அவை (கொண்டு வந்து) விரிக்கப்பட்டன. பிறகு, அவற்றில் பேரீச்சம் பழங்கள், பாலாடைக் கட்டி, நெய் ஆகியன வைக்கப்பட்டன. 15
அம்ர் இப்னு அபீ அம்ர்(ரஹ்) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில் அனஸ்(ரலி) கூறினார்
(அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (வலீமா - மணவிருந்திற்காக) தோல் விரிப்பில் 'ஹைஸ்' எனும் ஒரு வகைப் பண்டத்தைத் தயாரித்து வைத்தார்கள்.16
Book :70
5388. வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) அறிவித்தார்
ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 17 இரண்டு கச்சுடையாளின் மகனே!' என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ்வின் தாயார்) அஸ்மா(ரலி), 'என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். 'இரண்டு கச்சுகள்' என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான் அதை நான் இரண்டு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றினால் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்' என்று கூறினார்கள்.18
அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) கூறினார்கள்:
(இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள் 'ஆம்! (உண்மைதான்.) இறைவன் மீதாணையாக! இது ஒரு கூப்பாடு இதில் உன் மீது எந்தக் குறையுமில்லை' என்று (ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி தமக்குத் தாமே) கூறுவார்கள்.
Book :70
5389. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் பின்த் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உடும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடும்புகளை எடுத்து வரச்கூறினார்கள். அவை (சமைக்கப்பட்டு) அவர்களின் விரிப்பின் மீது உண்ணப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றை அருவருப்பது போல் தோன்றியது. அவற்றை உண்ணாமல்விட்டுவிட்டார்கள். அவை தடைசெய்யப்பட்டவையாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி அவர்கள் கட்டளையிட்டிருக்கவுமாட்டார்கள்.19
Book :70
பாடம் : 9 மாவு
5390. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்
நாங்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவிலுள்ள இடமாகும். அப்போது தொழுகை நேரம் வந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரச்கூறினார்கள். மாவைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. அதை அவர்கள் மென்று சாப்பிட்டார்கள். நாங்களும் அவர்களுடன் மென்று சாப்பிட்டோம். பிறகு அவர்கள் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்லி வாய் கொப்பளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தொழுதிட நாங்களும் தொழுதோம். ஆனால், நபி(ஸல்) அவர்கள் (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை.20
Book : 70
பாடம் : 10 நபி (ஸல்) அவர்கள் எந்த உணவுப் பொருளையும் அதன் பெயர் அவர்களுக்குக் குறிப்பிடப்பட்டு அது என்னவென்று அவர்கள் அறிந்துகொள்ளாத வரை அந்த உணவை உண்டதில்லை.
5391. அல்லாஹ்வின் வாள்' என்றழைக்கப்படும் காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
Book : 70
பாடம் : 11 ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமாகும்.
5392. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.21
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 70