பாடம் : 12 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22 இது குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.
5393. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர்(ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்' என்று கூறினார்கள்.
Book : 70
5394. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; 'இறைமறுப்பாளன்' அல்லது 'நயவஞ்சகன்' ஏழு குடல்களில் சாப்பிடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பளர்களில் ஒருவரான அப்தா இப்னு சுலைமான்(ரஹ்), 'இதை எனக்கு அறிவித்த உபைதுல்லாஹ் இப்னு உமர்(ரஹ்), 'இறைமறுப்பாளன்', 'நயவஞ்சகன்' ஆகிய இரண்டு சொற்களில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது (நினைவில்லை)' என்று கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
Book :70
5395. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்
(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)' என்று கூறினார்.
Book :70
5396. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :70
5397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராம்விட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்.
Book :70
பாடம் : 13 சாய்ந்தபடி சாப்பிடுவது23
5398. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 70
5399. அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், 'நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்' என்று கூறினார்கள்.
Book :70
பாடம் : 14 பொரித்த உணவு அல்லாஹ் கூறுகின்றான்: (அதன் பின்னர்) அவர் (-இப்ராஹீம்-) பொரித்த காளைக் கன்றி(ன் இறைச்சியி)னை உடனே கொண்டுவந்தார். (11:69) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹனீஃத்' எனும் சொல்லுக்குப் பொரிக்கப் பட்டது' என்று பொருள்.
5400. காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதை உண்பதற்காக அவர்கள் தங்களின் கையைக் கொண்டுபோனார்கள். அவர்களிடம், 'இது உடும்பு' என்று சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தங்களின் கையை இழுத்துக்கொண்டார்கள். நான், 'இது தடை செய்யப்பட்டுள்ளதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. ஆனால், இது என் சமுதாயத்தாரின் பூமியில் இருப்பதில்லை. எனவே, என் மனம் இதை விரும்பவில்லை' என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, நான் அதைச் சாப்பிட்டேன்.24
மற்றோர் அறிவிப்பில், ('பொரிக்கப்பட்டது' என்பதைக் குறிக்க 'மஷ்விய்யு' எனும் சொல்லுக்கு பதிலாக) 'மஹ்னூஃத்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
Book : 70
பாடம் : 15 அல்கஸீரா (கோதுமைக் குறுணைக் கஞ்சி) அல்கஸீரா' என்பது (கோதுமைக்) குறுணையால் தயாரிக்கப்படும் (கஞ்சி) உணவாகும்; அல்ஹரீரா' என்பது பாலால் தயாரிக்கப்படும் (பாயசம்) உணவாகும் என்று நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
5401. பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் வழிந்தோடும். அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. எனவே, இறைத்தூதர் அவர்களே! தாங்கள் வந்து என்னுடைய வீட்டில் தொழுகை நடத்த வேண்டுமென்றும் (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினேன்' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ' 'இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்' என்று கூறினார்கள்.
தொடர்ந்து இத்பான்(ரலி) கூறலானார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் மறுநாள் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். வீட்டினுள் வந்த நபி(ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம், '(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன்.
நபி(ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று 'தக்பீர் (தஹ்ரீமா)' கூறினார்கள். நாங்கள் (அவர்களுக்குப் பின்னே) அணிவகுத்து நின்றுகொண்டோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'சலாம்' கொடுத்தார்கள். நாங்கள் தயாரித்திருந்த 'கஸீர்' எனும் (கஞ்சி) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபி(ஸல்) அவர்கள் வந்திருந்ததைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்களில் கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து என் வீட்டில் திரண்டுவிட்டனர். அம்மக்களில் ஒருவர், 'மாலிக் இப்னு துக்ஷுன் எங்கே?' என்று கேட்டதற்கு அவர்களில் மற்றொருவர், 'அவர் அல்லாஹ்வையு அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர். (எனவேதான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'அப்படிச் சொல்லதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் 'லா இலாஹ இல்லல்லாஹு' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரே!) அவர் (மாலிக் இப்னு துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்களின் மீது அபிமானம் கொண்டிருப்பதையும் காண்கிறோம். (எனவேதான் அவ்வாறு சொல்லப்பட்டது)' என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான் அல்லவா?' என்று கேட்டார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:
பனூ சாலிம் குலத்தாரில் ஒருவரும் அவர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமான ஹுசைன் இப்னு முஹம்மத் அல் அன்சாரி(ரஹ்) அவர்களிடம் முஹ்மூத் இப்னு ரபீஉ அல்அன்சாரி அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை ('இது உண்மைதான்' என்று) உறுதிப்படுத்தினார்கள்.
Book : 70
பாடம் : 16 பாலாடைக் கட்டி ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்கள் கூறக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள் (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (மணவிருந்தில் விரிக்கப்பட்ட உணவு விரிப்பில்) பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை வைத்தார்கள். மற்றோர் அறிவிப்பில் (மணவிருந்துக்காக) நபி (ஸல்) அவர்கள் ஹைஸ்' எனும் உணவைத் தயாரித்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.26
5402. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களுக்கு என் தாயாரின் சகோதரி (உம்மு ஹுஃபைத்) அவர்கள் உடும்பு, பாலாடைக் கட்டி, பால் ஆகியவற்றை அன்பளிப்புச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பின் மீது உடும்பு வைக்கப்பட்டது. அது விலக்கப்பட்டதாக இருந்திருப்பின் அவ்வாறு வைக்கப்பட்டிராது. நபி(ஸல்) அவர்கள் (உடும்பை மட்டும்விட்டுவிட்டு) பாலை அருந்தினார்கள். பாலாடைக் கட்டியையும் சாப்பிட்டார்கள்.27
Book : 70
பாடம் : 17 தண்டுக் கீரையும் வாற் கோதுமையும்
5403. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்
வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துவந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தன்னுடைய பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் வாற்கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்து வந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்புதான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை.28
Book : 70
பாடம் : 18 குழம்பிலிருந்து இறைச்சியை எடுத்துக் கடித்துச் சாப்பிடுவது.
5404. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஆட்டின்) சப்பை எலும்பு ஒன்றை (அது வெந்து கொண்டிருந்த பாத்திரத்தில் இருந்து) எடுத்து அதிலிருந்த இறைச்சியைக் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள். ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை.
Book : 70
5405. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (குழம்புப்) பாத்திரத்திலிருந்து எலும்பொன்றை எடுத்து (அதிலிருந்து இறைச்சியைக் கடித்து)ச் சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள்; ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளுச்) செய்யவில்லை.
Book :70
பாடம் : 19 முன்னங்கால் சப்பை எலும்பிலிருந்து இறைச்சியைக் கடித்துச் சாப்பிடுவது.
5406. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில்) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்.29
Book : 70
5407. அபூ கத்தாதா அஸ்ஸலமீ(ரலி) கூறினார்
நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஓரிடத்தில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. அப்போது மக்கள் ஒரு காட்டுக் கழுதையைக் கண்டனர். நானோ என்னுடைய செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். அவர்கள் அக்கழுதை குறித்து எனக்கு அறிவிக்கவில்லை. (ஆனால்,) நான் அதைப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நான் (தற்செயலாக) அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று அதற்குச் சேணமிட்டு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக் கொள்ள) நான் மறந்துவிட்டேன். நான் அவர்களிடம் 'அந்தச் சாட்டையையும் ஈட்டியையும் எடுத்து என்னிடம் கொடுங்கள்' என்று சொன்னேன். அதற்கு (இஹ்ராம் கட்டியிருந்த) அவர்கள், 'மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குச் சிறிதும் நாங்கள் உமக்கு உதவமாட்டோம்' என்று கூறினார்கள்.
நான் கோபமுற்று இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு (குதிரையின் மீது) ஏறினேன். காட்டுக் கழுதையைத் தாக்கி அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு அதை (மக்களிடம்) கொண்டு வந்தேன். அதற்குள் அது இறந்துவிட்டிருந்தது. மக்கள் அதை(ச் சமைத்து) உண்பதற்காக அதன் மீது பாய்ந்தார்கள். பிறகு அவர்கள் 'தாம் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டது சரிதானா?' என்று சந்தேகம் கொண்டார்கள். அப்போது நாங்கள் (அல்லாஹ்வின் தூதரிடம்) சென்றோம். நான் (அதன்) முன்னங்கால் சப்பையை (எடுத்து) என்னிடம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றவுடன் இது குறித்து அவர்களிடம் வினவினோம். அவர்கள், 'அதிலிருந்து மிச்சம் மீதி ஏதாவது உள்ளதா?' என்று கேட்டார்கள். நான் அந்த முன்னங்கால் சப்பையை எடுத்துக் கொடுத்தேன். அதன் எலும்பைக் கடித்துத் துப்பும் வரை அதை அவர்கள் சாப்பிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.30
அபூ கத்தாதா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக (அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு ஜஅஃபர்(ரஹ்) கூறினார்.
Book :70
பாடம் : 20 இறைச்சியைக் கத்தியால் துண்டித்து உண்பது.
5408. அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த ஆட்டுச் சப்பையையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை.31
Book : 70
பாடம் : 21 நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை.
5409. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்.32
Book : 70
பாடம் : 22 வாற்கோதுமையில் (உமியை நீக்க) ஊதுவது.33
5410. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்
ஸலமா இப்னு தீனார்(ரஹ்) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை மாவை நீங்கள் பார்த்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியானால் நீங்கள் வாற்கோதுமையைச் (சல்லடையில்) சலிப்பீர்கள் தானே?' என்று கேட்க, அவர்கள் 'இல்லை; ஆனால், நாங்கள் அதை (வாயால்) ஊதி (சுத்தப்படுத்தி) வந்தோம்' என்று கூறினார்கள்.
Book : 70
பாடம் : 23 நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் சாப்பிட்டுவந்தவை.
5411. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.
Book : 70
5412. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். (உண்பதற்கு) 'ஹுப்லா' அல்லது 'ஹபலா' எனும் (முள்) மரத்தின் இலையைத் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கிற (கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) 'பனூஅசத்' குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூறி, என்னுடைய) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால், (இதுவரை நான் செய்துவந்த வழிபாட்டு) முயற்சியெல்லாம் வீணாம், நான் இழப்புக்குள்ளாம் விட்டேன் (போலும் என வருந்தினேன்.)34
Book :70