5413. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்
நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு ஸஹ்ல்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை' என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?' என்று கேட்டேன். அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை' என்றார்கள். நான், 'கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டுவந்தீர்கள்? சலிக்காமலேயா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்' என்றார்கள்.35
Book :70
5414. ஸயீத் இப்னு அபீ ஸயீத் அல்மக்புரீ(ரஹ்) கூறினார்
(நபித்தோழர்) அபூ ஹுரைரா(ரலி) (ஒரு நாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களை(த் தம்முடன் அதைச் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாற்கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்றார்கள்' என்று கூறினார்கள்.
Book :70
5415. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், 'எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், '(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது' என்று பதிலளித்தார்கள்.36
Book :70
5416. ஆயிஷா(ரலி) கூறினார்
முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
Book :70
பாடம் : 24 அத்தல்பீனா' (பால் பாயசம்)37
5417. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு 'ஸரீத்' (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் 'தல்பீனா' ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) 'இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், 'தல்பீனா' (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்' என்று சொல்வார்கள்.
Book : 70
பாடம் : 25 அஸ்ஸரீத்' (தக்கடி எனும் உணவு).38
5418. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்ற பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு எல்லா வகை உணவுகளையும் விட 'ஸரீது'க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.39
Book : 70
5419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும் விட 'ஸரீது'க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.40
Book :70
5420. அனஸ்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றேன். அவர் நபி(ஸல்) அவர்கள் முன்னே 'ஸரீத்' எனும் உணவு இருந்த ஒரு தட்டை வைத்தார். பிறகு தம் வேலையைப் பார்க்கச் சென்றார். (அத்தட்டில்) நபி(ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். நானும் அதைத் தேடி எடுத்து அவர்கள் முன்னே வைக்கலானேன். அதற்குப் பின் நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.41
Book :70
பாடம் : 26 முடி அகற்றப்பட்டு பொரிக்கப்பட்ட ஆடு, அதன் முன்கால் சப்பை மற்றும் விலா (ஆகியவற்றை உண்பது).
5421. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) கூறினார்
நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றுவருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ்(ரலி), 'சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த மட்டில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தங்களின் கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை' என்று கூறினார்கள்.42
Book : 70
5422. அம்ர் இப்னு உமய்யா அள்ளம்ரீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டு, அதிலிருந்து (இறைச்சியை) உண்டதை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியை எறிந்துவிட்டுத் தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அங்கசுத்தி (உளு) செய்யவில்லை
Book :70
பாடம் : 27 முன்னோர்கள் தம் வீடுகளிலும் பயணங் களிலும் சேமித்துவைத்துவந்த உணவு, இறைச்சி உள்ளிட்டவை. நபி (ஸல்) அவர்களுக்காகவும் (எங்கள் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவும் (அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது) பயண உணவு தயாரித்தோம் என ஆயிஷா (ரலி) அவர்களும் அஸ்மா (ரலி) அவர்களும் கூறினார்கள்.44
5423. ஆபிஸ் இப்னு ரபீஆ அல்கூஃபீ(ரஹ்) கூறினார்
நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம் '(ஈதுல் அள்ஹா' பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச்சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டுவந்தோம்' என்று பதிலளித்தார்கள். 'உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை' என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 70
5424. ஜாபிர்(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின்போது அறுக்கப்படும்) தியாகப் பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும் போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்.45
இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இப்னு ஜுரைஜ் (அப்துல் மலிக் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான், அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்களிடம், 'ஜாபிர்(ரலி) 'மதீனாவுக்கு நாங்கள் வந்து சேரும் வரை' எனும் வாக்கியத்தையும் சேர்த்து அறிவித்தார்களா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை' என்று பதிலளித்தார்கள்.
Book :70
பாடம் : 28 அல்ஹைஸ்' (எனும் பலகாரம்)46
5425. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களிடம், 'உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சேகவம் புரிந்துவந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் 'இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.
நாங்கள் கைபரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை நான் அவர்களுக்குச் சேவகம் செய்து கொண்டேயிருந்தேன். ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை (கைபர் போர்ச் செல்வத்தில் தம் பங்காகத்) தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காக ஓர் 'அங்கியால்' அல்லது 'ஒரு போர்வையால்' தமக்குப் பின்னே திரை அமைத்துப் பிறகு அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதை பார்த்தேன். நாங்கள் '(சத்துஸ்) ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்தபோது அவர்கள் 'ஹைஸ்' எனும் பலகாரத்தைத் தயாரித்து ஒரு தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு என்னை அவர்கள் அனுப்பிட நான் (வலீமா விருந்திற்காக) மக்களை அழைத்தேன். அவர்கள் வந்து விருந்து சாப்பிட்டார்கள். அது (அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய(தற்கு அளித்த வலீமா - மணவிருந்)தாக அமைந்தது.
பிறகு அவர்கள் முன்னேறிச் செல்ல அவர்களுக்கு 'உஹுத்' மலை தென்பட்டது. அவர்கள், 'இது நம்மை நேசிக்கிற ஒரு மலை. இதை நாமும் நேசிக்கிறோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரை நெருங்கிவிட்டபோது 'இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள அதன் நிலப்பரப்பை நான் புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் 'ஸாஉ' மற்றும் அவர்களின் 'முத்(து)' ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.47
Book : 70
பாடம் : 29 வெள்ளி கலந்த பாத்திரத்தில் உண்பது48
5426. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்
நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள 'தைஃபூன்' நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு 'நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...' என்று கூறினார்கள். (அதாவது 'பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்' என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி(ஸல்) அவர்கள் 'சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.
Book : 70
பாடம் : 30 உணவு பற்றிய குறிப்பு
5427. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது; (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானதாகும்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.49
Book : 70
5428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு உள்ள சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட 'ஸரீத்' எனும் உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.50
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :70
5429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.51
Book :70
பாடம் : 31 ரொட்டிக் குழம்பு
5430. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்
(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா(ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன:
1. (அன்னை) ஆயிஷா(ரலி) அவரை வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பரீராவின் எசமான்கள் 'அவளுடைய வாரிசுரிமை ('வலா') எங்களுக்கு உரியதாகவே இருக்கும்' என்று கூறினார்கள். அதை ஆயிஷா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது, அவர்கள் 'நீ விரும்பினால், பரீராவின் வாரிசுரிமை உனக்கேயுரியது என்று நீ அவர்களுக்கு நிபந்தனையிடலாம். ஏனெனில், வாரிசுரிமை (அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே கிடைக்கும்' என்று கூறினார்கள்.
2. அவ்வாறே அவர் விடுதலை செய்யப்பட்டபோது அவர் தம் (அடிமைக்) கணவருடன் அவரின் மணபந்தத்தில் நீடிக்கவும் செய்யலாம். அல்லது கணவரைப் பிரிந்துவிடவும் செய்யலாம் என (இரண்டில் விரும்பியதைச் செய்து கொள்ள) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.
3. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அடுப்பில் பாத்திரம் ஒன்று கொதித்துக் கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் காலை உணவைக் கொண்டு வரும்படி பணித்தார்கள். உடனே அவர்களுக்கு ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் 'இறைச்சி (சமைக்கப்பட்ட)தனை நான் பார்க்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு வீட்டார், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! ஆனால் அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சியாகும். அதை அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தார்' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அது அவருக்கு தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும்' என்று கூறினார்கள்.52
Book : 70
பாடம் : 32 இனிப்புப் பண்டமும், தேனும்
5431. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.
Book : 70
5432. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
('நபிமொழிகளை அதிகமாக அபூ ஹுரைரா அறிவிக்கிறாரே' என்று மக்கள் என்னைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.) நான் என் பசி அடங்கினால் போதும் என்று நபி(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலக் கட்டத்தில் புளித்து உப்பிய (உயர் தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய) பட்டாடையை நான் அணிவதுமில்லை; இன்னவரோ இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. (பசியின் காரணத்தால்) நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன்.
என்னை ஒருவர் (தம் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக ('எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' எனும் சொல்லைச் சற்று மாற்றி) 'அக்ரிஃனீ-எனக்கு (ஓர்) இறைவசனத்தை ஓதிக் காட்டுங்கள்' என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும். மக்களிலேயே ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) தாம் ஏழைகளுக்கு அதிகமாக உதவுபவராவார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டிலிருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய் (அல்லது தேன்) பையை எங்களிடம் கொண்டு வருவார். அதை நாங்கள் பிளந்து அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நாக்கால் வழித்து உண்போம்.53
Book :70