பாடம் : 12 லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது.
543. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கன் மதீனாவில் மக்ரிப், இஷாவை ஏழு ரக்அத்களாகவும் லுஹர் அஸரை எட்டு ரக்அத்களாகவும் தொழுகை நடத்தினார்கள்.
(இப்னு அப்பாஸ்(ரலி) வழியாக இதை அறிவிக்கும்) ஜாபிர் இப்னு ஸைதிடம் இது மழை நாளின்போது நடந்திருக்கலாமோ? என்று அய்யூப் கேட்டபோது இருக்கலாம்' என்று பதிலளித்தார்கள்.
Book : 9
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்.
544. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரியன் (ஒளி) என் அறையிலிருந்து விலகாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர்.
Book : 9
545. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
Book :9
546. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
Book :9
547. ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்.
நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள் மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
Book :9
548. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் அஸர் தொழுதுவிட்டு,மதீனாவிலுள்ள (குபா-பகுதியில் இருந்த) பனூ அம்ர் இப்னு அவ்வு குலத்தாரிடம் சென்றால் அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.
Book :9
549. அபூ உமாமா அறிவித்தார்.
நாங்கள் உமர்பின் அப்துல் அஸீஸுடன் லுஹர் தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். என் தந்தையின் உடன் பிறந்தவரே! இப்போது நீங்கள் தொழுதது என்ன தொழுகை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அஸர் தொழுகை! நபி(ஸல்) அவர்களுடன் இவ்வாறே நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம்' என்றார்கள்.
Book :9
550. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டத்தட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.
Book :9
551. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் அஸர் தொழுது முடித்த பின் எங்களில் 'குபா' என்ற இடத்திற்குச் செல்பவர்கள் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
Book :9
பாடம் : 14 அஸ்ர் தொழுகை(யை அதன் உரிய நேரத்தைவிட்டு) தவறவிட்டவர் அடைந்துகொள்ளும் பாவம்.
552. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 9
பாடம் : 15 அஸ்ர் தொழுகையை ஒருவர் விட்டு விடுவது...
553. அபுல் மலீஹ் அறிவித்தார்.
மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள்.
Book : 9
பாடம் : 16 அஸ்ர் தொழுகையின் சிறப்பு.
554. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
Book : 9
555. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவர்களும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்' என்று அவர்கள் விடையளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :9
பாடம் : 17 சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை ஒருவர் அடைந்து கொண்டால் (அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள் ளட்டும்).
556. சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! ஸுப்ஹுத் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) சூரியன் உதிக்கு முன் அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளட்டும்!'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 9
557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.
'எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)
Book :9
558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குரிய உவமையாவது. கீழ்காணும் உவமையைப் போன்றதாகும். ஒருவர் ஒரு கூட்டத்தினரை (காலையிலிருந்து) இரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, 'எங்களுக்கு உம்முடைய கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் மற்றும் ஒரு கூட்டத்தினரைக் கூலிக்கு அமர்த்தி இந்த எஞ்சிய நாளின் கூலியை) நான் முன்பு கூறியவாறு தருகிறேன்' என்றார். அவர்கள் அஸர் தொழுகையின் நேரம் வரை வேலை செய்தார்கள். 'நாங்கள் செய்த வேலை உமக்கே இருக்கட்டும்! (கூலி எதுவும் எங்களுக்குத் தேவையில்லை) என்றனர். இதன் பின்னர் மற்றொரு கூட்டத்தினரை அவர் கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் அந்த நாளின் எஞ்சிய பகுதியில் சூரியன் மறையும் வரை வேலை செய்தனர். அந்த இரண்டு கூட்டத்தினரின் கூலியையும் அவர்கள் பெற்றார்கள்.'
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :9
பாடம் : 18 மஃக்ரிப் தொழுகையின் நேரம். நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உசெய்து) தொழுது கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
559. ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களில் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)
Book : 9
560. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.
'நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள. சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.
Book :9
561. ஸலமா(ரலி) அறிவித்தார்.
சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுபவர்களாக இருந்தோம்.
Book :9
562. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மக்ரிப் இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (லுஹர் அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
Book :9