பாடம் : 33 சுரைக்காய்
5433. அனஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அடிமையும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர்களுக்கு சுரைக்காய் (உணவு) கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் உண்ணத் தொடங்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை (விரும்பி)ச் சாப்பிடுவதைப் பார்த்ததிலிருந்து அதை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.54
Book : 70
பாடம் : 34 ஒருவர் தம் சகோதரர்களுக்காக உணவு தயாரிக்க சிரமம் எடுத்துக்கொள்வது.
5434. அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர் அல்அன்சாரி(ரலி) கூறினார்
அபூ ஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவர் அந்தப் பணியாளரிடம், 'எனக்காக உணவு தயாரித்து வை! (ஐந்து பேரை விருந்துக்கு அழைக்கவிருக்கிறேன். அந்த) ஐவரில் ஒருவராக இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைக்கவிருக்கிறேன்' என்று கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களை ஐந்து பேரில் ஒருவராக அழைத்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்துவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் என்னை ஐந்து பேரில் ஒருவராக (விருந்துக்கு) அழைத்தீர்கள்! இந்த மனிதரோ எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரைவிட்டு விடலாம்' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி) 'இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்' என்று கூறினார்கள்.55
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு யூசுஃப்(ரஹ்) கூறினார்:
முஹம்மத் இப்னு இஸ்மாயீல் (அல்புகாரீ (ரஹ்) அவர்கள், '(விருந்தில்) ஒரு வட்டிலில் (ஸஹனில்) அமர்ந்துள்ள நபர்கள் மற்றொரு வட்டிலில் இருந்து (உணவை) எடுத்துண்ணலாகாது. ஆனால், ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் (வேண்டுமானால், அதிலுள்ள உணவை) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம்; அல்லது (அதைச் செய்வதைக்கூட) கைவிடலாம்' என்று கூறினார்கள்.56
Book : 70
பாடம் : 35 ஒருவரை விருந்துக்கு அழைத்துவிட்டு, (அவருடன் சேர்ந்து உண்ணாமல் விருந்தளிப்பவர்) தமது பணியைக் கவனிக்கலாம்.
5435. அனஸ்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்கள் செல்லுமிடமெல்லாம்) செல்கிற சேவகனாக இருந்தேன். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர் உணவும் அதன் மீது சுரைக்காய்க் குழம்பும் உள்ள ஒரு தட்டை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். அதை நான் பார்த்தவுடன் சுரைக்காயை அவர்களுக்கு முன்னால் ஒன்று சேர்த்து வைக்கலானேன். அப்போது அந்தப் பணியாளர் தம் பணியைக் கவனிக்கச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்வதை (பிரியமாக சுரைக்காய் உண்பதை)ப் பார்த்த பின் நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.57
Book : 70
பாடம் : 36 கறிக் குழம்பு
5436. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
தையற்காரர் ஒருவர் நபி(ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர் வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயையும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னால் வைத்தார். நபி(ஸல்) அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.58
Book : 70
பாடம் : 37 உப்புக்கண்டம்
5437. அனஸ்(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பு கொண்டு வரப்பட்டதைக் கண்டேன். அப்போது அவர்கள் சுரைக்காயைத் தேடி உண்பதைப் பார்த்தேன்.
Book : 70
5438. ஆயிஷா(ரலி) கூறினார்
(நபி(ஸல்) அவர்கள்) அதை (குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு மேலும் சேமித்து வைத்து உண்பதை) மக்கள் பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகு அதை உண்டுவந்தோம். முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் குழம்புடன் கூடிய வெள்ளைக் கோதுமை ரொட்டியை (தொடர்ச்சியாக) மூன்று நாள்கள் கூட வயிறு நிரம்ப உண்டதில்லை. 59
Book :70
பாடம் : 38 ஒருவர் வட்டிலில் இருந்து எதையேனும் எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது, அல்லது அவர் முன் வைப்பது. அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் அதிலுள்ளதை) ஒருவருக் கொருவர் பரிமாறிக்கொள்வதில் தவறில்லை. (ஆனால்,) ஒரு வட்டிலில் இருந்து மற்றொரு வட்டிலுக்குப் பரிமாறுவது கூடாது.
5439. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
தையற்காரர் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அருகே வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.
(மற்றோர் அறிவிப்பில்) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள். அனஸ்(ரலி), 'நான் சுரைக்காயை ஒன்று சேர்த்து நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன்' என்று கூறினார்கள்.60
Book : 70
பாடம் : 39 பேரீச்சச் செங்காய்களுடன் வெள்ளரிக் காயை(யும் சேர்த்து) உண்பது.
5440. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.
Book : 70
பாடம் : 40
5441. அபூ உஸ்மான்(ரலி) கூறினார்
நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறைவைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது முடித்தவுடன் இன்னொரு வரை தொழுகைக்கு எழுப்புவார். அபூ ஹுரைராவுடன் தங்கியிருந்தபோது) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். எனக்கு ஏழு பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது.
(மற்றோர் அறிவிப்பில்) அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து எனக்கு ஐந்து பழங்கள் கிடைத்தன் அவற்றில் நான்கு (கனிந்த) பேரீச்சம் பழங்களும் (நன்கு கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழம் ஒன்றும் இருந்தன. பிறகு நான் அந்தத் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தை என் கடைவாய்ப் பல்லால் மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.61
Book : 70
பாடம் : 41 பேரீச்சச் செங்காய்களும் பேரீச்சங் கனிகளும். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், (ஈசாவின் அன்னை மர்யமிடம் வானவர் கூறினார்:) பேரீச்ச மரத்தின் அடிப் பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்குங்கள். அது உங்கள் மீது புத்தம் புதிய செங்காய்களை உதிர்க்கும். (19:25)
5442. ஆயிஷா(ரலி) கூறினார்
நாங்கள் இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம் பழம் மற்றும் தண்ணிரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.62
Book : 70
5443. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். 'ரூமா' கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. எனவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. எனவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் 'புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்' என்று கூறினார்கள். நான் என்னுடைய பேரீச்சந் தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் 'அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்' என்று கூறலானார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அவர் யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு '(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?' என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, 'ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உன்னுடைய கடனை) அடைப்பாயாக!' என்று கூறினார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (என்னுடைய கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நானே சாட்சியம் அளிக்கிறேன்' என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அரீஷ்' (பந்தல்) மற்றும் 'அர்ஷ்' ஆகிய சொற்களுக்குக் 'கட்டடம்' என்று பொருள். '(இச்சொல்லில் இருந்து பிறந்த) 'மஅரூஷாத்' எனும் சொல்லுக்குத் திராட்சை முதலியவற்றின் பந்தல் என்று பொருள்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book :70
பாடம் : 42 பேரீச்சங் குருத்தை உண்ணுதல்
5444. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள் பேரீச்ச மரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்' என்று நினைத்தேன். எனவே, நான் 'அது பேரீச்சம் மரம் தான், இறைத்தூதர் அவர்களே!' என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்து பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். எனவே, மெளனமாம்விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களே, 'அது பேரீச்ச மரம் தான்' என்று கூறினார்கள்.63
Book : 70
பாடம் : 43 அல்அஜ்வா' (எனும் அடர்த்தியான மதீனாப் பேரீச்சம் பழம்).
5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 70
பாடம் : 44 (பலர் இருக்கும் இடத்தில் ஒருவரே) இரு பேரீச்சம் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவது.
5446. ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார்
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர' என்று சொல்வார்கள். 64
'அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்.
Book : 70
பாடம் : 45 வெள்ளரிக்காய்
5447. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.65
Book : 70
பாடம் : 46 பேரீச்ச மரங்களில் உள்ள வளம் (பரக்கத்).
5448. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.66
Book : 70
பாடம் : 47 ஒரே சமயத்தில் இரு வகைப் பழங்களை அல்லது இரு வகை உணவுகளைச் சேர்த்து உண்பது.
5449. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.67
Book : 70
பாடம் : 48 பத்துப் பத்துப் பேராக விருந்தாளிகளை அனுமதிப்பதும், பத்துப் பத்துப் பேராக உணவு விரிப்பில் அமர்வதும்.
5450. அனஸ்(ரலி) கூறினார்
என் தாயார் உம்மு சுலைம்(ரலி) ஒரு 'முத்(து)' அளவு வாற்கோதுமையை எடுத்து நொறுகலாக அரைத்து (பால் கலந்து) கஞ்சி தயாரித்துத் தம்மிடமிருந்த நெய் உள்ள தோல் பை ஒன்றையும் எடுத்து (அதிலிருந்த நெய்யை அந்தக் கஞ்சியில்) ஊற்றினார்கள். பிறகு என்னை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே அமர்ந்திருக்க நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள், 'என்னுடன் இருப்பவர்களும் (வரலாமா)?' என்று கேட்டார்கள். நான் சென்று (என் தாயாரிடம்), 'நபி(ஸல்) அவர்கள் தம்முடன் இருப்பவர்களும் வரலாமா? என்று கேட்கிறார்கள்' என்று சொன்னேன். உடனே (என் தாயாரின் இரண்டாம் கணவர் (அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இது (என் மனைவி) உம்மு சுலைம் தயாரித்த (சிறிதளவு) உணவுதான்' என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டினுள்) வந்தார்கள். அந்த உணவு கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்னிடம் பத்துப்பேரை வரச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே பத்துப் பேர் வந்தார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'என்னிடம் (இன்னுமொரு) பத்துப்பேரை வரச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் பத்துப் பேரும் வந்து வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். பிறகு மீண்டும் '(மற்றுமொரு) பத்துப்பேரை என்னிடம் வரச்சொல்லுங்கள்' என்று கூறினார்கள். இவ்வாறே நாற்பது பேரை எண்ணும் வரை கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களும் உண்டுவிட்டு எழுந்தார்கள். நான் அதிலிருந்து ஏதேனும் குறைந்துள்ளதா என்று கவனிக்கலானேன். (குறையாமல் அப்படியே இருந்தது.)68
Book : 70
பாடம் : 49 வெள்ளைப்பூண்டு மற்றும் (வாடையுள்ள) கீரை வகைகளை உண்பது விரும்பத் தக்கதன்று. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.69
5451. அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார்
அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிக்கிறீர்கள்?' என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), '(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனக் கூறினார்கள்' என்று பதிலளித்தார்கள்.70
Book : 70
5452. அதாஉ(ரஹ்) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், 'வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் 'நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்' அல்லது 'நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்' என்று சொன்னதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.71
Book :70