அகீகா
5467. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) கூறினார்
எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.
அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.
Volume :6 Book :71
5468. ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடுவதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள்.
Volume :6 Book :71
5469. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்
மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) 'குபா'வில்ழூழூ தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாம்விட்டது. பிறகு குழந்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று அவர்களின் மடியில் வைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கொண்டு வரச்சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது. பிறகு, அவர்கள் பேரீச்சம் பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். எனவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், 'யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்துவிட்டார்கள். எனவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது' எனக் கூறப்பட்டுவந்தது.
Volume :6 Book :71
5470. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்.5 பின்னர் உம்முசுலைம்(ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா(ரலி), 'குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம்(ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன' என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :6 Book :71
5471. சல்மான் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்
பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு.
இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து சல்மான் இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவித்தார்கள்.
இப்னு சீரின்'(ரஹ்) வழியாக வரும் சல்மான்(ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Volume :6 Book :71
5472. சல்மான் இப்னு ஆமிர் அள்ளப்பீ(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பையன் (பிறந்த) உடன் 'அகீகா' (கொடுக்கப்படல்) உண்டு. எனவே, அவனுக்காக (ஆடு அறுத்து) 'குர்பானி' கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்' என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.
ஹபீப் இப்னு அஷ்ஷமீத்(ரஹ்) கூறினார்
ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அவர்களிடம், 'அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக கேட்டார்கள்' என்று வினவும்படி என்னை இப்னு சீரின்(ரஹ்) பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அவர்களிடமிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :71
5473. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இனி), தலைக்குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி 'ஃபரஉ' ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டுவந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி 'அத்தீரா'வாகும்.
Volume :6 Book :71
5474. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே 'ஃபரஉ' ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பலியிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாள்களி)ல் பலியிடப்படும் பிராணி 'அத்தீரா'வாகும்.
Volume :6 Book :71
(உண்பதற்காக) அறுக்கப்படும் பிராணிகளும் வேட்டைப் பிராணிகளும்
5475. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். 'பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)' என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் 'உங்களின் நாயுடன்' அல்லது 'உங்கள் நாய்களுடன்' வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :72
5476. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு ('மிஅராள்' மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்' என்று கூறினார்கள்.
நான், 'என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.
நான், 'அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?' என்று கேட்டேன். அவர்கள், 'அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது' என்று பதிலளித்தார்கள்.
'நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :72
5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.
நான், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே' என்று பதிலளித்தார்கள்.
நான், 'நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்' என்ற கூறினார்கள்.
Volume :6 Book :72
5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்
நான், 'அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :72
5479. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்' என்று சொன்னேன்.
Volume :6 Book :72
5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் அளவு குறைந்து விடும்.8
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நாய் வைத்திருப்பவரின் (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :72
5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :72
5483. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
'நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்' என்று நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், 'பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடியக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!9
Volume :6 Book :72
5484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)
என அதீபின் ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :72
5485. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறைவாகி விட) இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவர் அதன் கால் சுவட்டைத் தொடர்ந்து சென்று தம் அம்பு அதன் உடலில் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(கெட்டுப் போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :72
5486. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (என்றால் அதன் சட்டம் என்ன?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது' என்று பதிலளித்தார்கள்.
'நான் என்னுடைய நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடியத் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் நாயின் மீதுதான்; மற்றதன் மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்கள்.
இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அம்பின் முனையால் அதனை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதுதான் (என்றே கருதப்படும்). எனவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :72