பாடம் : 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும் போது) அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்') கூறுவது. உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டிய நிலையில்) உங்கள் கைகளும் உங்கள் ஈட்டிகளும் (சுலபமாக) அடையக்கூடிய வேட்டைப் பிராணிகளில் ஒன்றின் மூலம் அல்லாஹ் உங்களை நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே!) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டிருப்பவை தவிர மற்ற நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) அனுமதிக்கப்பட்டுள்ளன.(5:1) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்உகூத்' (ஒப்பந்தங்கள்) எனும் சொல் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) என்றும், தடை விதிக்கப்பட்டவை (ஹராம்) என்றும் அறியப்பட்டவற்றைக் குறிக்கும். (இதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) உங்கள் மீது (தடைவிதித்துக்) கூறப்பட்டவை' என்பது பன்றியைக் குறிக்கும். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா யஜ்ரிமன்னகும் ஷனஆனு கவ்மின்' எனும் தொடருக்கு அந்த மக்கள் மீதுள்ள விரோதம் உங்களைத் தூண்டிவிட வேண்டாம்' என்று பொருள். (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முன்கனிக்கா எனும் சொல்லுக்குக் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது' என்று பொருள். அல்மவ்கூதா' என்பது தடியால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டதைக் குறிக்கும். அல்முத்தரத்தியா' என்பது மலையிலிருந்து விழுந்து செத்துப்போனதைக் குறிக்கும். அந்நத்தீஹா' என்பது மற்ற விலங்குகளின் கொம்பால் குத்தப்பட்டு இறந்ததாகும். ஆனால், (இந்தப் பிராணிகளில்) இன்னும் தனது வாலையோ அல்லது கண்களையோ அசைத்துக் கொண்டு (குற்றுயிராக) இருக்கும் பிராணியை நீங்கள் கண்டால் அதை (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுத்து நீங்கள் சாப்பிடலாம்.
5475. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். 'பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)' என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் 'உங்களின் நாயுடன்' அல்லது 'உங்கள் நாய்களுடன்' வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல' என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 2 இறகு இல்லாத அம்பினால் (மிஅராள்') வேட்டையாடப்பட்ட பிராணி. களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (அல்புந்துகா') மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (மவ்கூதா')போன்றே (விலக்கப்பட்டது) ஆகும் என்று குறிப்பிட்டார்கள். இந்தக் குண்டினால் கொல்லப்பட்ட பிராணியை உண்பதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்),காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்), முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்),அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) மற்றும் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) ஆகியோர் வெறுத்துள்ளனர். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சிற்றூர்களிலும் நகரங்களிலும் இந்தக் குண்டை எறி(ந்து வேட்டையாடு)வதை விரும்பவில்லை. (மனித நடமாட்டமில்லாத) மற்ற இடங்களில் அதை உபயோகிப்பதை அவர்கள் தவறாகக் கருதவில்லை.
5476. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு ('மிஅராள்' மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்' என்று கூறினார்கள்.
நான், 'என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.
நான், 'அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?' என்று கேட்டேன். அவர்கள், 'அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது' என்று பதிலளித்தார்கள்.
'நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை' என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி.
5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று பதிலளித்தார்கள்.
நான், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே' என்று பதிலளித்தார்கள்.
நான், 'நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்' என்ற கூறினார்கள்.
Book : 72
பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள்! உட-ன் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள் என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள் என்று சொன்னார்கள்.
5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்
நான், 'அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்' என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 5 சிறு கற்களாலும் களிமண் குண்டு அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது.7
5479. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூறினார்
நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், 'சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்' அல்லது 'சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்'. மேலும், நபி அவர்கள் 'அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)' என்று கூறினார்கள்' எனக் கூறினேன். அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்' அல்லது 'சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்' என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்' என்று சொன்னேன்.
Book : 72
பாடம் : 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடை களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது.
5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு 'கீராத்'கள் அளவு குறைந்து விடும்.8
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நாய் வைத்திருப்பவரின் (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 72
5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :72
பாடம் : 7 வேட்டை நாய் (தான் வேட்டையாடிய பிராணியைத்) தின்றுவிட்டால் (அப் பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தமக்கு அனுமதிக்கப்பட்ட உண் பொருள் எது என அவர்கள் உம்மிடம் வினவு கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: தூய்மையான பொருட்கள் (அனைத்தும்) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து நீங்கள் கற்பித்துப் பயிற்சியளித்த (வேட்டை விலங்கு முதலான)வை எதை உங்களுக்காகக் கவ்விக் கொண்டுவந்தனவோ அதையும் நீங்கள் உண்ணுங்கள். அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் (5:4). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஜவாரிஹ்' எனும் சொல்லுக்கு வேட்டையாடி உழைக்கும் நாய்கள்'என்று பொருள். (இதன் வினைச் சொல்லும், 45:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) இஜ்தரஹூ'எனும் சொல்லுக்கு செய்தவர்கள்' என்று பொருள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வேட்டைப் பிராணியை வேட்டை நாய் தின்றுவிட்டால் அது அதைக் கெடுத்து விட்டது (என்று பொருள்). அது தனக்காகவே அதைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. (எனவே, அதை உண்ணலாகாது.) உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து அதற்கு நீங்கள் கற்றுத்தந்திருக்கிறீர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே, வேட்டை நாயை அடித்துத் திருத்தி அப்பிராணியை அது (தன் எசமானுக்காக) விட்டுவிடும் வரை அதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். நாய் தின்ற வேட்டைப் பிராணியை (உண்பதை) இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், வேட்டை நாய், தான் வேட்டையாடிய பிராணியின் இரத்தத்தை மட்டுமே குடித்தி ருந்து (இறைச்சியைத்) தின்னாமல் இருந்தால் அப்போது அந்தப் பிராணியை உண்ணலாம் என்று கூறுகிறார்கள்.
5483. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
'நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்' என்று நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், 'பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடியக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!9
Book : 72
பாடம் : 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...?
5484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)
என அதீபின் ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
Book : 72
5485. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறைவாகி விட) இரண்டு அல்லது மூன்று நாள்கள் அவர் அதன் கால் சுவட்டைத் தொடர்ந்து சென்று தம் அம்பு அதன் உடலில் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(கெட்டுப் போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்' என்று பதிலளித்தார்கள்.
Book :72
பாடம் : 9 வேட்டைப் பிராணியுடன் மற்றொரு நாயைக் கண்டால்...?
5486. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி என்னுடைய (வேட்டை) நாயை (வேட்டையாடி வர) அனுப்புகிறேன். (என்றால் அதன் சட்டம் என்ன?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமின்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது' என்று பதிலளித்தார்கள்.
'நான் என்னுடைய நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடியத் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்று எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் நாயின் மீதுதான்; மற்றதன் மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை' என்று பதிலளித்தார்கள்.
இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அம்பின் முனையால் அதனை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டதுதான் (என்றே கருதப்படும்). எனவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்' என்று பதிலளித்தார்கள்.
Book : 72
பாடம் : 10 வேட்டையாடும் பழக்கம் குறித்து வந்துள்ளவை.10
5487. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
நான் அல்லாஹ்வின் (தூதர்) அவர்களிடம் (வேட்டையாடுவது குறித்து) வினவினேன். 'நாங்கள் இந்த நாய்களின் மூலம் வேட்டையாடுகிற சமுதாயத்தார் ஆவோம். (எனவே, அதன் சட்டத்தை எங்களுக்குக் கூறுங்கள்)' என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள், 'பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாய்களை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பியிருந்தால் அவை உங்களுக்காகக் கவ்விக்கொண்டு வந்தவற்றை நீங்கள் உண்ணலாம். ஆனால், நாய் (அதில் சிறிது) தின்றுவிட்டிருந்தால் (அதை) நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது நாய் (அப்பிராணியைத்) தனக்காகப் பிடித்து வைத்திருக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். அதனுடன் வேறொரு நாய் கலந்துவிட்டால் (அவை வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) நீங்கள் உண்ணாதீர்கள்' என்று கூறினார்கள்.
Book : 72
5488. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம்; அவர்களின் பாத்திரத்தில் சாப்பிடுகிறோம். மேலும், நான் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் வசிக்கிறேன். நான் என்னுடைய வில்லாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை அனுப்பியும் வேட்டையாடுகிறேன்; பயிற்சியளிக்கப்படாத நாயின் மூலமாகவும் வேட்டையாடுகிறேன். எனவே, இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர்களின் பாத்திரத்தில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்த அளவில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டு பின்னர் அதில் உண்ணுங்கள். வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நிங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்த வரை, உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) பிறகு உண்ணலாம். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்.
Book :72
5489. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நாங்கள் 'மர்ருழ் ழஹ்ரான்' எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பிடித்தேவிட்டேன். அதை எடுத்துக்கொண்டு அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் 'அதன்பின்னர் சப்பைகளை' அல்லது 'அதன் இரண்டு தொடைகளை' நபி(ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அனுப்பி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை ஏற்றார்கள்.12
Book :72
5490. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
(ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்ளுடன் (பயணத்தில்) இருந்தேன். நான் மக்கா (செல்லும்) சாலை ஒன்றில் இருந்தபோது (உம்ராவுக்காக) 'இஹ்ராம்' கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின் தங்கி விட்டேன். அப்போது நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு என்னுடைய குதிரையின் மீது நன்கு அமர்ந்து கொண்டு என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்தால் எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் என்னுடைய ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, நானே அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறு சிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். நபி(ஸல்) ஆவர்கள், 'இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்' என்று பதிலளித்தார்கள்.13
Book :72
5491. அதாஉ இப்னு யஸார்(ரஹ்) அபூ கத்தாதா(ரஹ்) அவர்களிடமிருந்து இதே ஹதீஸை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள் 'உங்களிடம் அதன் இறைச்சியில் ஏதேனும் (மீதி) உள்ளதா?' என்று கேட்டார்கள் என (அதிகப்படியாக) வந்துள்ளது.
Book :72
பாடம் : 11 மலைகளில் வேட்டையாடுதல்
5492. அபூ கத்தாதா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே ('அல்கஹா' எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) 'இஹ்ராம்' கட்டியிருந்தார்கள். நான் 'இஹ்ராம்' கட்டாமல் குதிரை மீது (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், 'என்ன இது?' என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தினால்) 'எங்களுக்குத் தெரியாது' என்றனர். நான், 'இது ஒரு காட்டுக் கழுதை' என்று சொன்னேன். அப்போது மக்கள், 'நீங்கள் பார்த்தது அதுதான்' என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்து விட்டிருந்தேன். எனவே, அவர்களிடம் 'என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவ மாட்டோம்' என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, '(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் அதைத் தொடமாட்டோம்' என்று கூறினர். எனவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் 'உங்களுக்காக நபி(ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்துவருகிறேன்' என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், 'அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (எஞ்சியுள்ளது)' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்' என்று கூறினார்கள்.
Book : 72
பாடம் : 12 (இஹ்ராம் கட்டியுள்ள) உங்களுக்கும் இதர பயணிகளுக்கும் பயன் தரும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதை உண்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது எனும் (5:96ஆவது) வசனத் தொடர். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஸைதுல் பஹ்ர்' (கடல்வேட்டை) எனும் சொல், வேட்டையாடப்பட்ட பிராணியையும் வ தஆமுஹு' (அதன் உணவு) என்பது, கரையில் ஒதுங்கிய (மீன் முத-ய)வற்றையும் குறிக்கும். அபூபக்ர் (ரலி) அவர்கள், செத்துப் போய் (நீரில்) மிதக்கும் உயிரினமும் அனுமதிக்கப்பட்டதே என்று கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், வ தஆமுஹு' (அதன் உணவு) என்பது கட-ன் செத்த பிராணியைக் குறிக்கும். அவற்றில் நீ அருவருப்பாகக் கருதுவதைத் தவிர; விலாங்கு மீனை யூதர்கள் உண்ண மாட்டார்கள். ஆனால், நாம் அதை உண்போம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழரான ஷுரைஹ் (ரலி) அவர்கள், கடலில் உள்ளவை அனைத்தும் அறுக்கப்பட்ட(தைப் போன்ற)வை தாம் என்று சொன்னார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் (கடல்) பறவைகளை அறுக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், ஆறுகள் மற்றும் வெள்ளப் பெருக்கினால் நிரம்பிய குளங்குட்டைகள் ஆகியவற்றின் வேட்டை(களான மீன் வகை)கள் கடல் வேட்டைப் பிராணிகளில் அடங்குமா? என்று கேட்டேன். அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு இ(ந்த ஆற்று நீரான)து மதுரமானதும் குடிப்பதற்கு சுலபமானதும் ஆகும். இ(ந்தக் கடல் நீரான)து உவர்ப்பானதும் (தொண்டையைக்) கரகரக்கச் செய்யக் கூடியதும் ஆகும். (இருப்பினும்,) இந்த இரண்டிலிருந்தும் நீங்கள் புத்தம் புதிய (மீன்) இறைச்சியை உண்கிறீர்கள் எனும் (35:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் ளஅல்லது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள்ன நீர் நாயின் தோலால் ஆன சேணம் பூட்டிய வாகனத்தின் மீது பயணம் செய்துள்ளார்கள். ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், என் வீட்டார் தவளைகளை உண்ணத் தயாராயிருந்திருந்தால் அவர்களுக்கு நான் உண்ணக் கொடுத்திருப்பேன் என்று சொன்னார்கள். ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் ஆமையை உண்பதைத் தவறாகக் கருதவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், கடல் வேட்டைப் பிராணிகளை உண்ணலாம்; அதைப் பிடித்தவர் யூதராகவோ, கிறிஸ்தவ ராகவோ, (அக்னி ஆராதனை புரியும்) மஜூஸியாகவோ இருந்தாலும் சரி என்று சொன்னார்கள். அபுத்தர்தா (ரலி) அவர்கள், முரீ' எனும் (போதை நீங்கிய) பானத்தைப் பற்றிக் கூறும் போது, மீன்களும் சூரிய வெப்பமும் இந்த மதுவை (போதையிழக்கச் செய்து) அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டன என்று சொன்னார்கள்.15
5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்
'கருவேல இலை' ('கபத்') படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது 'அம்பர்' என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)
Book : 72
5494. ஜாபிர்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்னூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் ஒரு வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கடும்பசி ஏற்பட்டது. (உணவு ஏதும் இல்லாததால்) கருவேலமரத்தின் இலைகளை நாங்கள் சாப்பிட்டோம். அதன் காரணமாக (எங்கள் படைக்கு) 'கருவேல இலைப் படை' (ஜைஷுல் கபத்') என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது 'அம்பர்' என்றழைக்கப்படும் பெரிய (திமிங்கல) மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதை நாங்கள் அரை மாதம் வரை சாப்பிட்டோம். எங்கள் மேனிகள் செழுமையடையும் அளவிற்கு நாங்கள் அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டோம். அப்போது அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து (பூமியில்) நட்டு வைக்க, அதன் கீழே வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். எங்களிடையே இருந்த ஒருவர் பசி கடுமையாக வாட்டியபோது மூன்று ஒட்டகங்களை அறுத்தார். மறுபடியும் இன்னும் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு அவரை (அப்படி அறுக்க வேண்டாமென) அபூ உபைதா(ரலி) தடுத்துவிட்டார்கள்.
Book :72