பாடம் : 19 மஃக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது.
563. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிய்கள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம்..'
என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
Book : 9
பாடம் : 20 இஷாத் தொழுகையை அத்தமா' எனவும் குறிப்பிடலாம் நயவஞ்சகர் (முனாஃபிக்)களுக்கு பெரும் சுமையான தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தமாவிலும் ஃபஜ்ரிலும் உள்ள (மகத்துவத்)தை மக்கள் அறிவார்களானால் (அவ்விரண்டுக்கும் தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள்) என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (காண்க : ஹதீஸ் எண்-615) அபூஅப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகின்றேன்: (24:58ஆவது வசனத்தில்) அல்லாஹ், இஷாத் தொழுகைக்குப் பின்... என்று குறிப்பிடுவதால் இஷா' எனக் குறிப்பிடுவதே சிறப்பாகும். அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது: நாங்கள் இஷாத் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களிடம் முறை வைத்துச் செல்பவர்களாக இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (அதாவது பிற்படுத்தித் தொழு(வித்)தார்கள். (காண்க : ஹதீஸ் எண்-567) இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஆகியோர் கூறுகின்றனர் : நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (பிற்படுத்தி)த் தொழுதார்கள். அத்தமாதொழுகையை நபி (ஸல்) அவர்கள் பிற்படுத்தித் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷாவை (சிலநேரம் முன்னேரத்திலும்) தொழுபவர்களாக இருந்தார்கள். (காண்க: ஹதீஸ் எண்-560) அபூபர்ஸா (நள்ரா பின் உபைத்-ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்து (வதையே விரும்பு)வார்கள். (காண்க: ஹதீஸ் எண்-547) அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறுகின் றார்கள்: நபி (ஸல்) அவர்கள் இறுதி இஷாவை பிற்படுத்துபவர்களாக இருந்தார்கள். இப்னு உமர் (ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின் றார்கள்: நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதார்கள். (மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து இஷாத் தொழுகையை அத்தமா தொழுகை எனவும் இஷாத் தொழுகை எனவும் கூறலாம் என்று தெரிகின்றது).
564. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், மக்களால் 'அதமா' எனக் கூறப்பட்டு வந்த இஷாத் தொழுகையை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை நோக்கி 'இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எவரும் இந்த இரவிலிருந்து நூறாவது ஆண்டின் துவக்கத்தில் வாழ மாட்டார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
Book : 9
பாடம் : 21 மக்கள் கூடுவதற்கேற்ப, அல்லது தாமதிப்பதற்கேற்ப இஷா நேரத்தை அமைத்துக் கொள்வது.
565. முஹம்மத் இப்னு அம்ர் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையை நண்பகலிலும் அஸர்த் தொழுகையைச் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போதும் மக்ரிப் தொழுகையைச் சூரியன் மறைந்தவுடனும் தொழுவார்கள். மக்கள் கூடிவிட்டால் இஷாவை முன்னேரத்திலும் மக்கள் குறைவாக இருந்தால் தாமதப் படுத்தியும் தொழுவார்கள். ஸுப்ஹை இருளில் தொழுவார்கள்' என விடையளித்தார்கள்.
Book : 9
பாடம் : 22 இஷாத் தொழுகையி(னை எதிர்பார்ப்பத)ன் சிறப்பு.
566. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன்பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி 'இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை' என்றார்கள்.
Book : 9
567. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் 'புத்ஹான்' எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வைத்து நபி(ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் தங்களின் காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் நள்ளிரவு நேரம் வரும் வரை இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி 'அப்டியே இருங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவாகளிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.
Book :9
பாடம் : 23 இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவது வெறுக்கத்தக்க செயலாகும்.
568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'
Book : 9
பாடம் : 24 இஷாவுக்கு முன்னர் தன்னை மீறி உறங்குதல்.
569. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். 'சிறுவர்களும் பெண்களும் உறங்கிவிட்டனர்; தொழுகை நடத்த வாருங்கள்!என்று உமர்(ரலி) அழைக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. பிறகு வந்து 'உங்களைத் தவிர இப்பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இந்தத் தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை' எனக்குறிப்பிட்டார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரை இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.
Book : 9
570. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் அலுவல் காரணமாக ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். நாங்கள் பள்ளியிலேயே உறங்கிப் பின்னர் விழித்தோம் பிறகு எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்து 'உங்களைத் தவிர பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இத்தொழுகைக்காகக் காத்திருக்கவில்லை' என்றார்கள். தூக்கம் தம்மை மீறிப் போய் விடும் என்று அச்சமில்லாதபோது இஷாவை முன்னேரம் தொழுவதையோ பின்னேரம் தொழுவதையோ ஒரு பொருட்டாக இப்னு உமர்(ரலி) கொள்ளமாட்டார்கள். (அதாவது இரண்டையும் சமமாகக் கருதுவார்கள்) மேலும் இஷாவுக்கு முன் உறங்குபவர்களாகவும் இருந்தனர் என்று நாஃபிவு கூறுகிறார்.
Book :9
571. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர்(ரலி) எழுந்து 'தொழுகை' எனக் கூறினார்கள். உடன் நபி(ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. 'என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்த்ல தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்' என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தம் கைகளைத் தலையில் வைத்தார்கள் என்று நான் 'அதா' அவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் தம் விரல்களைச் சற்று விரித்து, விரல்களின் முனைகளைத் தலை உச்சியில் வைத்து அவர்களின் பெருவிரல், காது ஓரங்கள், நெற்றிப் பொட்டு, தாடியின் ஓரங்கள் ஆகியவற்றில் படுமாறு அழுத்தித் தடவி, இப்னு அப்பாஸ்(ரலி) செய்து காட்டியது போல் செய்து காட்டினார்கள் என்று இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.
Book :9
பாடம் : 25 இஷா நேரம் பாதி இரவு வரை உள்ளது. நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை பிற்படுத்துவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
572. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை பிற்படுத்தினார்கள். பின்பு தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலேயே இருக்கிறீர்கள்!' என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அன்றிரவு அவர்கள் அணிந்திருந்த மோதிரத்தின் பிரகாசத்தை இப்போது பார்ப்பது போலுள்ளது.
Book : 9
பாடம் : 26 ஃபஜ்ர் தொழுகையின் சிறப்பு.
573. ஜரீர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
Book : 9
574. 'பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :9
பாடம் : 27 ஃபஜ்ர் தொழுகையின் நேரம்.
575. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்.)
'ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?' என்று கேட்டேன். அதற்கு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்' என்று பதிலளித்தார்கள் என அனஸ்(ரலி) கூறினார்.
Book : 9
576. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இருவரும் ஸஹ்ர் செய்தனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குத் தயாராகித் தொழுதார்கள்.
ஸஹர் முடிப்பதற்கும் தொழுகையைத் துவக்குவதற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டோம். 'ஒரு மனிதா ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம்' என்று கூறினார்கள் என கதாதா கூறுகிறார்கள்.
Book :9
577. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.
நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.
Book :9
578. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.
Book :9
பாடம் : 28 ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாகக்கட்டும்).
579. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.
'சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 9
பாடம் : 29 பொதுவாகத் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாக்கட்டும்).
580. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 9
பாடம் : 30 ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சூரியன் உயரும் வரை தொழுவது (கூடாது).
581. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர்(ரலி) ஆவார்.
Book : 9
582. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள:
'சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9