பாடம் : 14 தலையில் குருதி உறிஞ்சி எடுப்பது21
5698. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள 'லஹ்யீ ஜமல்' எனும் இடத்தில் வைத்துத் தம் தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்தார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.22
Book : 76
5699. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.
Book :76
பாடம் : 15 ஒற்றைத் தலைவலி மற்றும் பொதுவான தலைவலிக்காகக் குருதி உறிஞ்சி எடுப்பது.23
5700. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் தமக்கேற்பட்ட (ஒற்றைத் தலை) வலியின் காரணத்தால் ஒரு நீர் நிலையின் அருகில் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். இந்த நீர்நிலை 'லஹ்யு ஜமல்' என்றழைக்கப்பட்டு வந்தது.
Book : 76
5701. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவலியின் காரணத்தால் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.
Book :76
5702. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். (ஆயினும்,) நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.24
Book :76
பாடம் : 16 (நோய்த்) தொல்லையின் காரணத்தால் தலைமுடியை மழித்துக்கொள்வது.
5703. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) கூறினார்
ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக் கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்துகொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), 'உங்கள் (தலையிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் தலைமழித்துக் கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாள்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள்' என்றார்கள்.25
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப்(ரஹ்) கூறினார்: 'இவற்றில் எதை முதலில் குறிப்பிட்டார்கள்' என்று எனக்குத் தெரியவில்லை.
Book : 76
பாடம் : 17 (மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக்கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக்கொள்ளமல் இருப்பதன் சிறப்பு.26
5704. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக் கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
Book : 76
5705. ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) கூறினார்
இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 'கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(லி)ல் (சிறப்பு) கிடையாது' என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:)
நான் இதை ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தார்கள். என்று கூறினார்கள்.
(ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், 'இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா?' என்று கேட்டேன். அப்போது, 'அல்ல. இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்' என்று எனக்குச் சொல்லப்பட்டது. 28 அப்போது 'அடிவானத்தைப் பாருங்கள்' என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், 'அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்' எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்' என்று எனக்குச் சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். 'நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்' என்று கூறினார்கள்.
Book :76
பாடம் : 18 கண்நோய்க்காக அஞ்சனக்கல் மற்றும் அஞ்சனத்தைப் பயன்படுத்துதல்.29 இது குறித்து உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது.30
5706. உம்மு ஸலமா(ரலி) கூறினார்
ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். (அதற்காக 'இத்தா' இருக்கும்போது) அப்பெண்ணுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்பெண்ணைப் பற்றி மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டு, 'அவளுடைய கண் பழுதாம்விடும் அபயாமிருப்பதால் அவள் (கண்ணில் சிகிச்சைக்காக) அஞ்சனம் தீட்டிக் கொள்ளலாமா?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், '(அறியாமைக் காலத்தில்) உங்களில் ஒருத்தி (தன் கணவன் இறந்தபின்) 'மோசமான ஆடையணிந்தவளாக தன் வீட்டில் தங்கியிருப்பாள்' அல்லது 'மோசமான வீட்டில் சாதாரண ஆடை அணிந்தவளாக (ஆண்டு முழுவதும்) தங்கியிருப்பாள்' (ஓராண்டு கழிந்தபின் அவ்வழியாக) ஏதேனும் ஒரு நாய் கடந்து சென்றால் அதன் மீது ஒட்டகச் சாணத்தை வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) எனவே, அவள் நான்கு மாதம் பத்து நாள்கள் (கழியும்வரை) அஞ்சனம் இடவேண்டாம். 31 என்று பதில் கூறினார்கள்.
Book : 76
பாடம் : 19 தொழுநோய்32
5707. அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு. 33
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 76
பாடம் : 20 மன்னு' கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.34
5708. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
சமையல் காளான் 'மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.35
ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் இப்னு உ(த்)தைபா(ரஹ்) எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்தபோது தான் அப்துல் மலிக் இப்னு உமைர்(ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு வந்தேன்.36
Book : 76
பாடம் : 21 வாயில் ஊற்றப்படும் மருந்து
5709. & 5710. & 5711. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களும் கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூ பக்ர்(ரலி) முத்தமிட்டார்கள்.37
Book : 76
5711. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள்.
Book :76
5712. ஆயிஷா(ரலி) கூறினார்
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்தபோது அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள்.
'நோயாளி மருந்தை வெறுப்பது போன்றே (நபி அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்றவேண்டாமெனத் தடை செய்யவில்லை)' என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமையாகத்) தெளிந்தபோது 'என் வாயில் மருந்து ஊற்றவேண்டாமென்று நான் உங்களைத் தடுக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம். ஆனால், நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் வெறுக்கிறீர்கள் என நினைத்தோம்)' என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், 'நான் பார்த்துககொண்டிருக்கும்போதே ஒருவர் பாக்கியில்லாமல் வீட்டிலுள்ள அனைவரின் வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும். அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில், (வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை' என்று கூறினார்கள்.38
Book :76
5713. உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். 39 (இதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள் இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத்தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்' என்று கூறினார்கள். 40
அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் (ஏழில்) இரண்டை (மட்டும்) நமக்கு விவரித்தார்கள். (மீதி) ஐந்தை விவரிக்கவில்லை' என ஸுஹ்ரீ(ரஹ்) கூற கேட்டேன். 41
அறிவிப்பாளர் அலீ இப்னு மதினீ(ரஹ்) கூறினார்:
சுஃப்யான்(ரஹ்), குழந்தையின் அண்ணத்தை விரலால் அழுத்துவது குறித்து விவரிக்கையில், தம் விரலை மேல்வாயின் உட்புறத்தில் நுழைத்து அழுத்திக் காட்டினார்கள். (இதுதான் நோக்கமே தவிர, மூலத்தில் 'இஃலாக்' எனும் சொல் இடம் பெற்றிருப்பதற்காகத்) தொண்டையில் எதையும் மாட்டுவது நோக்கமாகாது.
Book :76
பாடம் : 22
5714. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களுக்கு வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே தொங்கியபடி (என்னுடைய வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று நான் கேட்க, நான் 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். அவர்கள், 'அவர் அலீ(ரலி) தாம்' என்று கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து நோய் கடுமையாகிவிட்டபோது 'வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் இறுதியுபதேசம் செய்யக்கூடும்' என்று கூறினார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் (இன்னொரு) துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தில் அவர்களை அமரச் செய்து, அவர்களின் மீது அந்தத் தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றலானோம். அவர்கள் இறுதியில் எங்களை நோக்கி, '(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் போதும்)' என்று சைகை காட்டலானார்கள். பிறகு மக்களை நோக்கி (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று மக்களுக்கு தொழுகை நடத்தி உரையும் நிகழ்த்தினார்கள். 42
Book : 76
பாடம் : 23 அடிநாக்கு அழற்சி
5715. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்
குஸைமா குலத்து 'அசத்' கிளையைச் சேர்ந்த உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல் அசதிய்யா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடு துறந்த) பெண்களில் ஒருவராவார். அவர் உக்காஷா இப்னு மிஹ்ஸான்(ரலி) அவர்களின் சகோதரி ஆவார். அவர் கூறினார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் 'இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்' என்று கூறினார்கள்.
'குஸ்த்' எனும் கோஷ்டமே 'இந்தியக் குச்சி' எனப்படுகிறது. 43
Book : 76
பாடம் : 24 வயிற்றுப் போக்கு மருந்து44
5716. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'என் சகோரருக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்து வருகிறது' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று கூறினார்கள். அவ்வாறே அவரும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். பிறகு அவர் வந்து, 'என் சகோதரருக்குத் தேன் ஊட்டினேன்; ஆனால், அது அவருக்கு வயிற்றுப் போக்கை அதிகமாக்கவே செய்தது' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உண்மை சொன்னான். உன் சகோதரரின் வயிறுதான் பொய் பேசியது' என்று பதில் கூறினார்கள். 45
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 76
பாடம் : 25 ஸஃபர்' எனும் வயிற்று நோய் ஒரு தொற்று நோயன்று.46
5717. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது. 'ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசியொருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?' என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?' என்று திருப்பிக் கேட்டார்கள். 47
Book : 76