பாடம் : 43 அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் (தீன்) ஆகும் எனும் நபிமொழி. அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை). (9:91).
57. 'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்'ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Book : 3
58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார்.
பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்' என்றார்.
பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்' ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார்.
Book :3
பாடம் : 1 கல்வியின் சிறப்பும் உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்விஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் எனும் (58:11ஆவது) இறை வசனமும். வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான்: என் இறைவா! கல்விஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக! (20:114). பாடம் : 2 ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேள்விகேட்டால், அவர் தம் பேச்சை முடித்துக்கொண்டு, பிறகு கேள்வி கேட்பவருக்கு பதிலளிக்கலாம்.
59. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 3 உரத்த குரலில் கல்விபோதிப்பது.
60. 'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
Book : 3
61. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :3
பாடம் : 5 மக்களின் அறிவுத் திறனைச் சோதிப்பதற்காக தலைவர் மக்களிடமே கேள்வி கேட்பது.
62. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 6 கல்வி (கற்பித்தல்) குறித்து வந்துள்ளவை.
63. நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி(ஸல்) அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதாரன்' என்றும் கூறினார்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 7 ஆசிரியர் மாணவரிடம் ஒரு நபிமொழிச் சுவடியை ஒப்படைப்பது , கல்வியை மார்க்க அறிஞர்கள் பல்வேறு ஊர்களுக்கு எழுதி அனுப்புவது ஆகியவை தொடர்பாக வந்துள்ளவை.
64. நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் தம் மடல் ஒன்றைக் கொடுத்து அனுப்பி அதனை பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அம்மனிதர் பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்தார். அவர் அதை (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார். அதனைக் கிஸ்ரா படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்து எறிந்தான். '(இச்செய்தியைக் கேள்விப்பட்டதும்) நபி(ஸல்) 'அவர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டும்' என்று அவர்களுக்கு எதிராக (இறைவனிடம்) பிரார்த்தித்தார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னுஷிஹாப் என்பவர் இப்னுல் முஸய்யப் அவர்கள் இவ்வாறுகூறினார்கள்' என கருதுகிறேன் என்றார்.
Book : 3
65. நபி(ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்' என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்' என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(இந்த நபிமொழி அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்: எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா அவர்களிடம், 'அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்' என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் 'அனஸ்(ரலி) தாம் கூறினார்கள்' என்றார்.
Book :3
பாடம் : 8 (கல்வி முதலியவற்றுக்காகக் குழுமியிருக்கும்) ஓர் அவையில் கடைசியில் அமரலாம். வட்டமாக அமர்ந்து இருப்பவர்களின் மத்தியில் இடைவெளி கண்டால் அதிலும் அமரலாம்.
66. 'நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்' என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 9 நேரில் கேட்டவரைவிடக் கேட்டவரிடம் கேட்கும் எத்தனையோ பேர் நன்கு புரிந்து கொள்கிறார்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.
67. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?' என்றார்கள். அதற்கு 'ஆம்' என்றோம். அடுத்து இது 'எந்த மாதம்?' என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். 'இது துல்ஹஜ் மாதமல்லவா?' என்றார்கள். நாங்கள் 'ஆம்!' என்றோம். அடுத்து '(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்' என்று கூறிவிட்டு 'இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்' என்றார்கள்' என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 11 மக்கள் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) பக்குவமாகப் போதனை செய்ததும் கல்வி புகட்டியதும்.
68. 'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்' என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book : 3
69. 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :3
பாடம் : 12 அறிவுரை வழங்குவதற்காகக் கற்றவர்களுக்கென்று சில குறிப்பிட்ட நாட்களை ஒதுக்குவது.
70. 'அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்' எனஅபூ வாயில் அறிவித்தார்.
Book : 3
பாடம் : 13 அல்லாஹ் யாருக்கு (மிகப்பெரும்) நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
71. 'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
Book : 3
பாடம் : 14 கல்வியில் சமயோஜிதம்.
72. நான் இப்னு உமர்(ரலி) உடன் மதீனா வரை சென்றேன். அப்போது அவர் வாயிலாக ஒரே ஒரு ஹதீஸைத் தவிர (வேறெதனையும்) அறிவித்ததாக நான் கேட்டதில்லை. அவர் அறிவித்தவதாவது: 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு பேரீச்ச மரக் குருத்து கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் 'மரங்களில் ஒரு வகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூறிட எண்ணினேன். ஆனால் அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் மிக்க இளையவனாயிருந்ததால் மெளனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) 'அது பேரீச்ச மரம்!' என்றார்கள்' என்ற ஒரே ஒரு ஹதீஸைத் தவிர (வேறெதனையும்) அறிவித்தாக நான் கேட்டதில்லை' என முஜாஹித் அறிவித்தார்.
Book : 3
பாடம் : 15 கல்வியிலும் ஞானத்திலும் தாமும் பிறர் போல் சிறந்து விளங்க வேண்டுமென்று ஆர்வம் காட்டுவது. உமர் (ரலி) அவர்கள், நீங்கள் தலைவர்களாவதற்கு முன்னர் இஸ்லாமியச் சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (முஹம்மத் பின் இஸ்மாயீல் புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் (மார்க்க சட்ட விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்). (ஏனெனில்,) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்களது முதிய வயதில்கூடக் கல்வி கற்றுள்ளனர்.
73. 'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 16 ஹிழ்ர் (அலை) அவர்களைத் தேடி மூஸா (அலை) அவர்கள் கடலில் சென்றது தொடர்பாகக் கூறப்பட்டவை. உங்களுக்கு கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தர நான் உங்களைப் பின்தொடர்ந்து வரலாமா? (18:66) என்று (ஹிழ்ர் (அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் கேட்டதாக) அல்லாஹ் கூறுகின்றான்.
74. '(மூஸா(அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) அடியார் யார்? என்பதில் இப்னு அப்பாஸும், ஹுர்ரு இப்னு கைஸு அல் பஸாரிய்யு என்பாரும் தர்க்கித்தனர். 'அவர் கிழ்றுதான்' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அந்த வழியாக உபை இப்னு கஅப்(ரலி) சென்றார். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, 'நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழிகாட்டும்படி கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) தர்க்கித்துக் கொண்டோம். நபி(ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்! அதற்கு உபை இப்னு கஃபு(ரலி), 'ஆம்!' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். '(மூஸா அவர்களே!) உம்மை விடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?' எனக் கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள் 'இல்லை!' என்றார்கள். அப்போது இறைவன் 'ஏன் இல்லை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறார்களே!' என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தினான். மேலும் அவர்களிடம் 'இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர்' என்று சொல்லப்பட்டது. அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் 'நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவு படுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை' என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது 'அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிழ்று (அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிழ்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்' என்று கூறினார்' என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.
Book : 3
பாடம் : 17 இறைவா! இவருக்கு உன் வேதத்தைக் கற்றுத் தருவாயாக என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது.
75. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 3
பாடம் : 18 சிறுவர்கள் எந்த வயதில் செவியேற்ற செய்தி அங்கீகாரம் பெறும்?
76. 'நான் பெட்டைக் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினிடையே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். என்னுடைய அச்செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 3