பாடம் : 26 (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலி.48
5718. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடு துறந்த) பெண்களில் ஒருவராவார். இவர் உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) அவர்களின் சகோதரி ஆவார். அவர் கூறினார்:
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வை அஞ்சுங்கள். இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும்' என்று கூறினார்கள். 'இந்தியக் குச்சி' எனப்து 'குஸ்த்' எனும் செய்கோஷ்டத்தைக் குறிக்கிறது. 49
Book : 76
5719. & 5720. & 5721. ஹம்மாத் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்
அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு அபூ கிலாபா(ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப்(ரஹ்) (அபூ கிலாபா(ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன. அய்யூப்(ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ்களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம் பெற்றிருந்தது.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
அபூ தல்ஹா(ரலி) அவர்களும் அனஸ் இப்னு நள்ர்(ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூ தல்ஹா(ரலி) தம் கையால் எனக்குச் சூடிட்டார்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
(மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூ தல்ஹா(ரலி), அனஸ் இப்னு நள்ர்(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா(ரலி)தாம் எனக்குச் சூடிட்டார்கள்.
Book :76
5721. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனஸ்பின் நளர் (ரலி) அவர்களுக்கும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால்) ஏற்பட்ட விலா வலிக்காக) சூடிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது கையால் எனக்குச் சூடிட்டார்கள். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது„ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக்கடிக்காகவும், காது வலிக்காகவும் ஓதிப் பார்க்க அனுமதியளித்தார்கள். அனஸ்பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது„ (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வலிக்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூதல்ஹா (ரலி). அனஸ்பின் நள்ர் (ரலி) ஹைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள்தாம் எனக்குச் சூடிட்டார்கள்.
Book :76
5722. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார்
(உஹுதுப் போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களின் தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களின் முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களின் (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்)பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ(ரலி) தம் கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்த போய்க் கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா(ரலி) பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. 51
Book :76
பாடம் : 28 காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாவதாகும்.52
5723. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்கள்.
இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) '(இறைவா!) எங்களைவிட்டு நரகத்தின் வேதனையை நீக்குவாயாக' என்று பிரார்த்தித்துவந்தார்கள்.53
Book : 76
5724. ஃபாத்திமா பின்த் முன்திர்(ரஹ்) கூறினார்
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டு வரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதியில் தெளிப்பார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்' என்றும் கூறினார்கள்.
Book :76
5725. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.54
Book :76
5726. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணியுங்கள்.
என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். 55
Book :76
பாடம் : 29 தம(து உடல் நலத்து)க்கு ஒவ்வாத இடத்திலிருந்து ஒருவர் வெளியேறிவிடுவது.
5727. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
'உக்ல்' மற்றும் 'உரைனா' குலங்களைச் சேர்ந்த சிலர் (ஹிஜ்ரி ஆறாமாண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, தாம் இஸ்லாத்தை ஏற்பதாகத் தெரிவித்தனர். மேலும், 'அல்லாஹ்வின் நபியே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள்; நாங்கள் விளைநிலங்கள் உடையவர்கள் அல்லர்' என்று கூறி மதீனா(வின் தட்ப வெப்பம்) தமக்கு ஒத்துக் கொள்ளவில்லை எனக் கருதினர்.
எனவே, அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கிடும்படி உத்தரவிட்டார்கள். மேலும், அவர்கள் குணமடைவதற்காக (மதீனாவுக்கு) வெளியே சென்று (தங்கி) அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.) இறுதியில் அவர்கள் 'அல்ஹர்ரா' எனும் இடத்தின் பக்கம் சென்றபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறைமறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். அத்துடன் (நில்லாது), இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்த மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களைத் தம்முடன் ஓட்டிச் சென்றுவிட்டனர். நபி(ஸல்) அவர்களுக்கு இந்த விஷயம் எட்டியதும் (கொடுஞ் செயல் புரிந்த) அவர்களைப் பின்தொடர்ந்து (அவர்களைத் தேடிப் பிடித்து வர) ஆள் அனுப்பினார்கள். அவர்களைத் தண்டிக்கும் படி உத்தரவிட அவ்வாறே (மக்கள்) அவர்களின் கண்களில் சூடிட்டு, அவர்களின் கை(கால்)களைத் துண்டித்துவிட்டார்கள். அவர்கள் 'அல்ஹர்ரா' (எனும் பாறைகள் நிறைந்த) பகுதியின் ஒரு மூலையில் அப்படியே விடப்பட்டு அதே நிலையில் இறந்துபோய்விட்டார்கள். 56
Book : 76
பாடம் : 30 கொள்ளைநோய் பற்றிய குறிப்பு.57
5728. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஓர் ஊரில் கொள்ளைநோய் இருப்பதாக நீங்கள் செவியுற்றால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டால் அந்த ஊரிலிருந்து வெளியேறாதீர்கள்.58
'இதை உஸாமா இப்னு ஸைத்(ரலி) (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் அறிவிக்க கேட்டேன்' என்று இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹபீப் இப்னு அபீ ஸாபித்(ரஹ்) கூறினார்:
நான் இப்ராஹீம் இப்னு அத்(ரஹ்) அவர்களிடம், 'உஸாமா(ரலி) (உங்கள் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம் (ஸஅத்(ரலி) அதை மறுக்கவில்லை)' என்று பதிலளித்தார்கள்.
Book : 76
5729. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
உமர் இப்னு கத்தாப்(ரலி) ஷாம் நாட்டை நோக்கி (மக்களின் நிலையை ஆராய்வதற்காக)ப் புறப்பட்டார்கள். 59 'சர்ஃக்' எனும் இடத்தை அடைந்தபோது (மாகாண) படைத் தளபதிகளான அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள். 60 அதற்கு உமர்(ரலி) 'ஆரம்பக் கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்று சொல்ல அவர்களை நான் (உமர்(ரலி) அவர்களிடம்) அழைத்து வந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள். இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அவர்களில் சிலர், 'நாம் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டோம். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் பொறுத்தமாகக் கருதவில்லை' என்று கூறினார்கள். வேறு சிலர், 'உங்களுடன் மற்ற மக்களும் நபித்தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயில் தள்ளி விடுவதை நாங்கள் சரியென்று கருதவில்லை' என்று கூறினார்கள்.
அப்போது உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப்பிறகு, 'என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வந்தார்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களிடம் உமர்(ரலி) ஆலோசனை கலந்தார்கள். அவர்களும் முஹாஜிர்களின் வழியிலேயே சென்று அவர்களைப் போன்றே கருத்து வேறுபட்டார்கள்.
அப்போதும் உமர்(ரலி), 'நீங்கள் போகலாம்' என்று சொல்லிவிட்டுப் பிறகு, மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களில் இங்கு உள்ளவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்' என்று சொல்ல நான் அவர்களை அழைத்து வந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்), 'மக்களுடன் நீங்கள் திரும்பி விட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயில் தள்ளிவிடக் கூடாது எனக் கருதுகிறோம்' என்றனர்.
எனவே, உமர்(ரலி) மக்களிடையே 'நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படவிருக்கிறேன்; நீங்களும் வாகனத்தில் புறப்படுங்கள்' என்று அறிவித்தார்கள். அப்போது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), 'அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?' என்று கேட்க, உமர்(ரலி), 'அபூ உபைதா! இதை உங்களைத் தவிர வேறேவரேனும் சொல்லியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆம் நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறுபக்கம் வறண்டதாகவும் உள்ள இரண்டு கரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படி தான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?' என்று கேட்டார்கள்.
அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு) வந்தார்கள். அவர்கள், 'இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.
உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.
Book :76
5730. அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) கூறினார்
உமர்(ரலி) ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று சொல்ல கேட்டேன்' என்று கூறினார்கள்.
உடனே உமர்(ரலி), (தம் முடிவு நபி(ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.
Book :76
5731. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மதீனாவில் மஸீஹ் (தஜ்ஜால்) நுழைய மாட்டான்; கொள்ளைநோயும் நுழையாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 61
Book :76
5732. ஹஃப்ஸா பின்த் சீரின்(ரஹ்) கூறினார்
அனஸ் இப்னு மாலிக்(ரலி) என்னிடம், '(உன் சகோதரரான) யஹ்யா இப்னு சீரின் எதனால் இறந்தார்?' என்று கேட்டார்கள். நான், 'கொள்ளைநோயால் இறந்தார்' என்று பதிலளித்தேன். அவர்கள், 'கொள்ளைநோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூறினார்கள். 62
Book :76
5733. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வயிற்றுப் போக்கால் இறப்பவர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவார்; கொள்ளை நோயால் இறப்பவரும் உயிர்த்தியாகி ஆவார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.63
Book :76
பாடம் : 31 கொள்ளைநோயின் போது பொறுமை காப்பவருக்குக் கிடைக்கும் நன்மை.
5734. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். எனவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும்போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையுடன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும். 64
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 76
பாடம் : 32 (பொதுவாக) குர்ஆன், (குறிப்பாக) பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பது.65
5735. ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்களின் மீது ஊதிக்கொண்டும் அவர்களின் கையாலேயே (அவர்களின் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களின் சுரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் இப்னு ராஷித்(ரஹ்) கூறினார்:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் தம் இருகரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தம் முகத்தில் தடவிவந்தார்கள்' என்று பதிலளித்தார்கள்.66
Book : 76
பாடம் : 33 அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்ப்பது. இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.67
5736. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களின் தேழர்களில் சிலர் (ஒரு பயணத்தின் போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித் தோழர்களிடம் வந்து) 'உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா? அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா?' என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், 'நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம்' என்று கூறினர்.
உடனே, நபித்தோழர்களுக்காக அக்குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) 'குர்ஆனின் அன்னை' எனப்படும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தை ஓதித் தம் எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வலி நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், 'நபி(ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காதவரை இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது' என்று (தமக்குள்) பேசிக்கொண்டு அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு 'அல்ஃபாத்திஹா' ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக் கொள்ளுங்கள்; எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்' என்று கூறினார்கள். 68
Book : 76
பாடம் : 34 ஓதிப்பார்ப்பதற்காக ஆட்டு மந்தையை (ஊதியமாகத் தரும்படி) நிபந்தனையிடுவது.
5737. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்
(ஒரு பயணத்தின்போது) நபித்தோழர்களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென்றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர்களிடம் வந்து, 'உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா? இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கிறார்' என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப் பார்த்ததற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், 'அல்லாஹ்வின் வேதத்திற்காக நீர் கூலி வாங்கினீர்?' என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக்கொண்டார்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் வேதமேயாகும்' என்று கூறினார்கள். 69
Book : 76