583. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்!'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9
584. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இரண்டு வியாபாரங்களைவிட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளைவிட்டும் இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 'முனாபதா', 'முலாமஸா' என்ற இரண்டு வியாபாரங்களைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)
Book :9
பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப் பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தை தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'சூரியன் உதிக்கும் போதும் சூரியன் மறையும் போதும் உங்களில் ஒருவர் தொழுவதை (வேண்டுமென்றே) நாட வேண்டாம்!'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 9
586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.'
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :9
587. முஆவியா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள். அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
Book :9
588. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை ஆகிய இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
Book :9
பாடம் : 32 ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளுக்குப் பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம். இது குறித்து உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
589. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
என் தோழர்களை தொழக்கண்டது போன்றே நான் தொழுகிறேன். இரவிலும் பகலிலும் விரும்பியதைத் தொழும் எவரையம் தடுக்க மாட்டேன். எனினும் சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுகைக்காக) வேண்டுமென்றே நாடாதீர்கள்!
Book : 9
பாடம் : 33 விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்) என்றும் கூறினார்கள்.
590. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை இறைவனைச் சந்திக்கும் வரை நபி(ஸல்) அவர்கள்விட்டு விடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரக்அத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரக்அத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி(ஸல்) அவர்கள் விரும்புவார்கள்.
Book : 9
591. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் சகோதரியின் மகனே! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் (தங்கும் போது) ஒருபோதும்விட்டதில்லை.
Book :9
592. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள்விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
Book :9
593. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் அஸருக்குப் பின் எந்த நாளில் என்னிடம் வந்தாலும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
Book :9
பாடம் : 34 மேகமூட்டமுள்ள நாளில் தொழுகையை விரைவாக (ஆரம்ப நேரத்திலேயே) நிறைவேற்றுவது.
594. அபுல் மலீஹ் அறிவித்தார்.
மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அஸர் தொழுகையை முன்வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்' என்று குறிப்பிட்டார்கள்.
Book : 9
பாடம் : 35 நேரம் சென்ற பிறகும் பாங்கு சொல்வது.
595. அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இரண்டு இரவு நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது சிலர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களைச் சற்று இளைப்பாறச் செய்யலமே!' என்று கேட்டனர். 'நீங்கள் தொழுகையைவிட்டும் உறங்கி விடுவீர்களோ என அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது பிலால் 'நான் உங்களை எழுப்பி விடுகிறேன்' என்று கூறியதும் அனைவரும் படுத்தனர். பிலால்(ரலி) தம் முதுகைத் தம் கூடாரத்தின் பால் சாய்த்தார். அவரையும் மீறி உறங்கிவிட்டார். சூரியனின் ஒரு பகுதி உதித்த பின்பே நபி(ஸல்) அவர்கள் விழித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பிலாலே! நீர் சொன்னது என்னவாயிற்று?' என்று கேட்டார்கள். 'இது போன்ற தூக்கம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை' என்று பிலால்(ரலி) கூறினார். 'நிச்சயமாக இறைவன் உங்கள் உயிர்களை அவன் விரும்பியபோது கைப்பற்றிக் கொள்கிறான்; அவன் விரும்பியபோது திரும்பவும் ஒப்படைக்கிறான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு (பிலாலை நோக்கி) 'பிலாலே! எழுந்து தொகைக்கு பாங்கு சொல்வீராக!' என்றார்கள். (பின்னர்) உளூச் செய்துவிட்டுச் சூரியன் உயர்ந்து பிரகாசம் ஏற்பட்டபோது தொழுதார்கள்.
Book : 9
பாடம் : 36 (தொழுகையின்) நேரம் சென்ற பிறகு மக்களுக்கு ஒருவர் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) நடத்துவது.
596. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போரின்போது சூரியன் மறைந்த பின் உமர்(ரலி) குரைஷிக் இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழவில்லையே' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் அஸர் தொழவில்லை' என்று கூறினார்கள். நாங்கள் 'புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கை நோக்கிச் சென்றோம். நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்காக உளூச் செய்தார்கள். நாங்களும் அதற்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பின் அஸர் தொழுதார்கள். அதன்பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.
Book : 9
பாடம் : 37 ஒரு தொழுகையை ஒருவர் தொழ மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதை அவர் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை. ஒருவர் ஒரு தொழுகையைத் தொழாமல் இருபது ஆண்டு இருந்துவிட்டாலும் (விடுபட்ட) அந்தத் தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை என இப்ராஹீம் (பின் யஸீத் அந்நகஈ-ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
597. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யாரேனும் ஒரு தொழுகையை மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அவர் அதைத் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவுமில்லை.'
'என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகையை நிலை நிறுத்துவீராக' (திருக்குர்ஆன் 20:14) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 9
பாடம் : 38 தவறிய தொழுகைகளை முந்தையது அதற்கடுத்தது என (ஒன்றன் பின் ஒன்றாகத்) தொழுவது.
598. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போர் தினத்தில் நிராகரிப்பவர்களை உமர்(ரலி) ஏசிக் கொண்டே வந்து 'சூரியன் மறையும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை' என்று கூறினார்கள். நாங்கள் 'புத்ஹான்' எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதுவிட்டுப் பின்னர் மக்ரிப் தொழுதார்கள்.
Book : 9
பாடம் : 39 இஷாத் தொழுகைக்குப் பிறகு (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பது வெறுக்கத்தக்க செயலாகும்.
599. அபுல் மின்ஹால் அறிவித்தார்.
நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார்கள். 'நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள் - மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்து விட்டேன்.. 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்கள் வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
Book : 9
பாடம் : 40 இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சட்டங்கள் நல்ல விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது.
600. குர்ரா இப்னு காலித் அறிவித்தார்.
நாங்கள் ஹஸனை (ஹஸன் பஸரீ) எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அவர் எங்களிடம் தாமதமாக வந்தார். (அவர் வழக்கம் போல் எங்களுடன் அமர்ந்துவிட்டுப் பிறகு) எழுந்து செல்வதற்கான நேரமும் நெருங்கியது. அப்போது அவர் வந்து 'நம்முடைய அண்டை வீட்டார் நம்மை அழைத்தனர். (அதுதான் தாமதத்தின் காரணம்)' என்றார். 'நாங்கள் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துக கொண்டிருந்தோம். பாதி இரவாகும்போது நபி(ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு (இஷா) தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 'அறிந்து கொள்க! மக்களெல்லாம் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை நீங்கள் தொழுகையிலே இருக்கிறீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள். இதை அனஸ்(ரலி) அறிவித்ததாக ஹஸன் குறிப்பிட்டார். 'நன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் மக்கள் நன்மையிலே இருக்கின்றனர்' என்றும் ஹஸன் குறிப்பிட்டார்.
Book : 9
601. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில் இன்று பூமியில் இருக்கும் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பின் நடப்பது பற்றி (உலகம் அழிந்து விடுமோ என்று) தவறான முறையில் மக்கள் விளங்கினர். நபி(ஸல்) அவர்கள் கூறியது இன்று பூமியில் இருப்பவர்களில் எவரும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இருக்க மாட்டார்கள் என்பதைத் தான். இதன் மூலம் அன்று இருந்த சமுதாயம் நூறு ஆண்டுகளுக்குள் முடிந்து போவர் என்பதையே நபி(ஸல்) அவர்கள் கருதினார்கள்.
Book :9
பாடம் : 41 விருந்தினருடனும் குடும்பத்தாருடனும் இரவில் பேசிக் கொண்டிருப்பது.
602. அப்துர்ரஹ்மான் இப்னு அபீ பக்ரு(ரலி) அறிவித்தார்.
திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் 'இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச் செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!' எனக் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி(ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும இருந்தோம் என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார்.
அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர்.
'உங்கள் விருந்தினரைவிட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள்.
நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூ பக்ரு(ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள்.
அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது.
எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி(ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.
Book : 9