பாடம் : 1 (பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணி வாழ்வதும். அல்லாஹ் கூறுகிறான்: தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். (29:8)
5970. வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), '(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்' என்று கூறினார்கள்:
நான் நபி(ஸல்) அவர்களிடம் 'கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?' என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது' என்றார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை செய்வது' என்றார்கள். (நான் தொடர்ந்து) 'பிறகு எது?' என்றேன். அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுதல்' என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.2
Book : 78
பாடம் : 2 அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?
5971. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள்.
இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 78
பாடம் : 3 பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும்.
5972. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு' என்றார்கள்.3
Book : 78
பாடம் : 4 எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.
5973. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
'ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)' என்றார்கள்.4
Book : 78
பாடம் : 5 பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை (துஆ) ஏற்கப்படுவது.
5974. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களின் குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், 'நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்யைமான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ(ப் பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக் கூடும்' என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்.
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போன்று பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ என்னுடைய காலருகில் (பசியால்) கதறிக்கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உன்னுடைய திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தான்.
இரண்டமாவர் (பின்வருமாறு) வேண்டினார்.
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறந்துவிட்டாள். நான் முயற்சிசெய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள் 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய (சட்ட பூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே' என்று சொன்னாள். உடனே நான் அவளைவிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!
அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு (இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:
இறைவா! நான் ஒரு 'ஃபரக்' அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை (கூலியை)க் கொடு' என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரின் உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே)விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! என்னுடைய உரிமையை என்னிடம் கொடுத்துவிடு' என்று கூறினார்.
அதற்கு நான், 'அந்த மாடுகளிடமும் அவற்றின் இடையர்களிடமும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)' என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!' என்று கூறினார். நான், 'உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!
அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.5
Book : 78
பாடம் : 6 பெற்றோரைப் புண்படுத்துவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். இது குறித்து இப்னு அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.6
5975. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.7
Book : 78
5976. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்
(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் 'அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.8
Book :78
5977. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்' அல்லது 'அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)' என்று கூறிவிட்டு, 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)' என்று கூறினார்கள்.9
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:
'பொய் சாட்சியம்' என்றே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.
Book :78
பாடம் : 7 (இறைவனுக்கு) இணைவைக்கும் பெற்றோராயினும் அவர்களின் உறவையும் பேணி வாழ்வது.10
5978. & 5979. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் '(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள்.11
'எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, 'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்' எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்' என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
Book : 78
5980. அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்
(பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், 'அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்' என்று பதிலளித்தேன்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.12
Book :78
பாடம் : 9 (இறைவனுக்கு) இணைவைக்கும் சகோதர னுடனும் உறவைப் பேணி வாழ்வது.
5981. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்' என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி), 'நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்' என்று கூறினார்கள்.
எனவே, உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13
Book : 78
பாடம் : 10 உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு
5982. அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்' என்று வினவப்பட்டது.13
Book : 78
5983. அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) கூறியாதாவது:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், 'இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?' என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்' என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்றவேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்' என்று கூறிவிட்டு, 'உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக' என்று கூறினார்கள்.
அம்மனிதர் (அப்போது) தம் வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.14
Book :78
பாடம் : 11 உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை
5984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.15
Book : 78
பாடம் : 12 உறவைப் பேணி வாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கித் தரப்படும்.
5985. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.16
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 78
5986. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :78
பாடம் : 13 உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவுபாராட்டுகிறான்.
5987. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்' என்று கூறி(மன்றாடி)யது.
அல்லாஹ், 'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகெள;வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!' என்று கூறியது. அல்லாஹ், 'இது உனக்காக நடக்கும்' என்று சொன்னான்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.17
Book : 78
5988. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :78
5989. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).
என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :78